தேடுதல்

Vatican News
மறைக்கல்வி ஆசிரியர்கள் மறைக்கல்வி ஆசிரியர்கள்  

மறைக்கல்வி ஆசிரியர்களின் புதிய பணிக்கு வரவேற்பு

1984ம் ஆண்டில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட, கொரியா நாட்டு மறைசாட்சிகளும், 1987ம் ஆண்டில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட ஜப்பான் நாட்டு மறைசாட்சிகளும், பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களே

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 11, இச்செவ்வாயன்று, "Antiquum ministerium" அதாவது, “தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி” என்ற தலைப்பில் வெளியிட்ட திருத்தூது மடல் வழியாக, பொதுநிலையினரின் மறைக்கல்வி பணிக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதை, இந்திய கத்தோலிக்கர் வரவேற்றுள்ளனர்.

உலகில் திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப்பணியில், ஆண்களும், பெண்களும் அதிகஅளவில் பங்குபெறுவதை ஊக்குவித்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, முழு இதயத்தோடு நன்றிகூறுகிறோம் என்று, லக்னௌ ஆயர் ஜெரால்டு ஜான் மத்தியாஸ் அவர்கள், யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார்.

சமுதாயத்தில் முக்கியமானப் பதவிகளை வகிக்காத, மற்றும், முக்கியமாக அறியப்படாதவர்களாக இருக்கின்ற, மறைக்கல்வி ஆசிரியர்களே, தற்போது, திருஅவையின் நற்செய்திப்பணி விரிவடைவதற்கு, உண்மையாகவே உதவுகின்றவர்கள் என்பதை திருத்தந்தை அங்கீகரித்துள்ளார் என்றும், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழுவின் உறுப்பினரான, ஆயர் மத்தியாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மறைக்கல்வி ஆசிரியர்களின் பெயர்களை திருத்தந்தை குறிப்பிடாவிட்டாலும், புனிதத்துவத்திற்குச் சுடர்விடும் எடுத்துக்காட்டுகளாய் பல மறைக்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர், இளம்வயது பிலிப்பீன்ஸ் மறைக்கல்வி ஆசிரியர் புனித Pedro Calungsod ஆவார்.

1668ம் ஆண்டில் மரியானா தீவில், இயேசு சபை அருள்பணியாளர்களுக்குத் துணையாக இருந்த Pedro Calungsod அவர்கள், 1672ம் ஆண்டில் Guam மறைசாட்சியாக கொல்லப்பட்டார். இவரை முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டில், புனிதராக அறிவித்தார்.

1984ம் ஆண்டில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட, கொரியா நாட்டு மறைசாட்சிகளும், 1987ம் ஆண்டில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட ஜப்பான் நாட்டு மறைசாட்சிகளும், பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆவார்கள். இவ்வாறு திருஅவையில் பல நாடுகளில் மேலும் பலர் உள்ளனர். (UCAN)

உலகமயமாக்கப்பட்ட ஒருவித கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், திருஅவை, தன் மறைப்பணியை மேற்கொள்ள, கடந்தகாலத்திற்குப் பிரமாணிக்கம், மற்றும், நிகழ்காலத்திற்குப் பொறுப்பு ஆகிய இரண்டும், இன்றியமையாத நிபந்தனைகளாக உள்ளன என்று, திருத்தந்தை அம்மடலில் கூறியுள்ளார்.

14 May 2021, 16:43