தேடுதல்

இந்தியாவில் கோவிட் 19 இந்தியாவில் கோவிட் 19   (AFP or licensors)

மே 7ல், இந்தியாவில் கோவிட் 19 ஒழிய நோன்பு, செபம்

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று முற்றிலும் ஒழிய, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக, இணைந்து இறைவனை நோக்கி மன்றாடி வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையில், பெரும் உயிரிழப்புக்களையும், மற்ற நெருக்கடிகளையும், இந்தியா எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், அத்தொற்றுநோய் ஒழியும்படியாக, கிறிஸ்தவர்கள் அனைவரும், மே 07, இவ்வெள்ளியன்று, தேசிய அளவில், உண்ணாநோன்பு மற்றும், இறைவேண்டல்களைக் கடைப்பிடித்தனர்.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று முற்றிலும் ஒழிய, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக, இணைந்து இறைவனை நோக்கி மன்றாடுவோம் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், விடுத்திருந்த அழைப்பை ஏற்று, இந்திய இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பு (EFI), இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவை (NCCI) ஆகிய அனைத்து கிறிஸ்தவ சபைகளும், இவ்வெள்ளியன்று, செபங்களோடு, தவ முயற்சிகளையும் மேற்கொண்டன.

இச்செப நாளில், இந்தியாவில் கத்தோலிக்கர் அனைவரும், குறைந்தது ஒரு மணி நேரம் திருநற்கருணை ஆராதனையில் பங்குகொண்டு, திருவிவிலியத்தை வாசித்து தியானித்தனர், மற்றும்,  செபமாலையும் செபித்தனர். 

இப்பெருந்தொற்றால் உயிரிழந்தவர்கள் இறைவனில் நிறையமைதி அடையவும், உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்கள் இறைவனின் ஆறுதலை அனுபவிக்கவும், இந்நோயால் துன்புறுவோர் விரைவில் குணம்பெறவும், இந்நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்போர் மற்றும், பல்வேறு வழிகளில் உதவுவோரை இறைவன் பாதுகாக்கவும் வேண்டும் என்று, இந்நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் சிறப்பாக இறைவேண்டல்களை எழுப்பினர். இந்தியாவில் இவ்வெள்ளியன்று, கிறிஸ்தவர்கள், இரவு 8 மணிக்கு, வீடுகளில் விளக்கேற்றி, பெருந்தொற்றால் துன்புறுவோருடன் தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர்.(Agencies)

07 May 2021, 15:25