தேடுதல்

ஹெய்ட்டியில் கடத்தல்கள் நிறுத்தப்பட இறைவேண்டல்கள் ஹெய்ட்டியில் கடத்தல்கள் நிறுத்தப்பட இறைவேண்டல்கள் 

அனைத்து தீமைகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய அழைப்பு

மனித கடத்தலில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் அமைதிகாப்போர் குறித்து தங்கள் ஆழ்ந்த வேதனையை வெளியிட்டுள்ளனர் ஹெய்ட்டி ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹெய்ட்டி நாட்டில் அருள்பணியாளர்களும் துறவிகளும் பிணையக் கைதிகளாக கடத்தப்படும் நிலைகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமென அந்நாட்டு ஆயர்கள் விடுத்த விண்ணப்பத்திற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு வழங்கியுள்ளதற்காக, தன் நன்றியை வெளியிட்டுள்ளது, தலத்திருஅவை.

மக்களை, தீவிரவாத கும்பல்கள் கடத்திவருவதற்கு எதிராகவும், அனைத்து விதமான தீமைகளுக்கு எதிராகவும். மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டும் என விண்ணப்பித்திருந்த ஹெய்ட்டி ஆயர்கள், தற்போது, பொதுமக்கள் பெருமளவில் இந்த அழைப்புக்கு பதிலுரைத்திருப்பதற்கு தங்கள் நன்றியை வெளியிட்டுள்ளனர்.

தனிமனிதர், மற்றும் சமுதாயத்தின் உள்மன அமைதியை சீர்குலைத்துள்ள கடத்தல் எனும் தீமையை எதிர்த்துப் போரிடுவோருக்கு தங்கள் நன்றியை வெளியிட்டுள்ள ஹெய்ட்டி ஆயர்கள், தங்கள் அழைப்பைக் கேட்டு, அக்கறையற்று செயல்பட்ட சில சமுதாய அமைப்புக்கள் குறித்து, தங்கள் ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் ஹெய்ட்டியில் கடத்தப்பட்டு வருவது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கும் மக்கள் குறித்தும், இது குறித்து பாராமுகமாகச் செயல்படுவோர் குறித்தும், கடத்துவோருக்கு உதவும் வகையில் அமைதி காப்போர் குறித்தும், தங்கள் ஆழ்ந்த வேதனையையும் வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

இதற்கிடையே, குற்றக்கும்பல் ஒன்றால் ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து கடத்தி வைக்கப்பட்டிருந்த 5 அருள்பணியாளர்கள், 2 அருள்சகோதரிகள், மற்றும் இரண்டு பொதுநிலையினர், மூன்று வாரத்திற்குப்பின் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

மே 6ம் தேதி, வியாழக்கிழமையன்று, ஹெய்ட்டி நாட்டின் அனைத்துப் பங்குதளக் கோவில்களிலும், நாட்டின் அமைதிக்காகவும், முழு விடுதலைக்காகவும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.(Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2021, 14:22