தேடுதல்

Vatican News
மியான்மாரில் வன்முறையில் இறந்தவர்கள் மியான்மாரில் வன்முறையில் இறந்தவர்கள்  

மியான்மாரில் வன்முறை முடிய பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

மூவொரு கடவுள் பெருவிழாவாகிய மே 30, வருகிற ஞாயிறன்று, பிலிப்பீன்சின் அனைத்து ஆலயங்களிலும் மியான்மார் நாட்டிற்காக திருப்பலிகள் நிறைவேற்றப்படும் - பேராயர் வாலெஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியன்று இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளையும், பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தொடர்ந்து கவனித்து வருவதாக, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Romulo Valles அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மாரில் வன்முறை முடிவுக்கு வரவேண்டும் என, அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறு, மே 25, இச்செவ்வாயன்று, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் போ அவர்கள் அழைப்பு விடுத்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, பேராயர் Valles அவர்கள் வெளியிட்டுள்ள மடலில், மியான்மார் நாட்டிற்காக, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர் கடவுளிடம் மன்றாடி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மியான்மாரில், ஒவ்வொரு நாளும், வன்முறை மற்றும், துயர் நிறைந்த நாளாக அமைந்துள்ளது என்றும், மூவொரு கடவுள் பெருவிழாவாகிய மே 30, வருகிற ஞாயிறன்று, பிலிப்பீன்சின் அனைத்து ஆலயங்களிலும் மியான்மார் நாட்டிற்காக திருப்பலிகள் நிறைவேற்றப்படும் என்றும், பேராயர் Valles அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.    

கர்தினால் போ அவர்களின் விண்ணப்ப அறிக்கை, மியான்மார் நாட்டில் மக்கள் அடையும் துன்பங்களை விளக்கியுள்ளது என்றுரைத்துள்ள பேராயர் Valles அவர்கள், அந்நாட்டில் துன்புறும் மக்களுக்காக, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர் உருக்கமாக இறைவேண்டல் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

மியான்மாரில் ஆலயங்கள் தாக்கப்படல்

கடந்த பல மாதங்களாக, பொது மக்கள் இராணுவ ஆட்சிக்கெதிராக, போராட்டங்களை மேற்கொண்டுவரும்வேளை, அண்மை நாள்களில், Kayah மாநிலம் உட்பட, அந்நாட்டின் பல்வேறு மாநிலங்களின் போராளிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் மீண்டும் வலுவடைந்துள்ளன.

இம்மோதல்களில், இராணுவம், Kayanthayarல் அமைந்துள்ள இயேசுவின் திருஇதய கத்தோலிக்க ஆலயத்தைத் தாக்கியதில், நான்கு பேர் இறந்துள்ளனர், மற்றும், எட்டுப் பேருக்கு மேல் காயமுற்றுள்ளனர்.

இதையடுத்து, வழிபாட்டுத்தலங்கள் மற்றும், மத நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படுமாறு உருக்கமான விண்ணப்பம் ஒன்றை விடுத்த கர்தினால் போ அவர்கள், அவை, உலகளாவிய சட்டத்தின்கீழ் கலாச்சார கருவூலங்கள் என்றும் கூறியுள்ளார். 

கர்தினால் போ அவர்கள், இந்த விண்ணப்பத்தை விடுத்ததற்குப்பின்னும், கத்தோலிக்கர் அதிகமாக வாழ்கின்ற காயா மாநிலத்தில், Demoso நகரில் அமைந்துள்ள புனித யோசேப்பு ஆலயமும், இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN)

28 May 2021, 14:53