தேடுதல்

Vatican News
மூவொரு இறைவன் ஓவியம் மூவொரு இறைவன் ஓவியம் 

மூவொரு இறைவன் பெருவிழா: ஞாயிறு சிந்தனை

நம் ஒவ்வொருவருக்கும், குழந்தைப் பருவத்தில், அறிவுசார்ந்த கருத்தாக இல்லாமல், உணர்வுசார்ந்த உறவாக மூவொரு இறைவன் அறிமுகமானார் என்பதே உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

மூவொரு இறைவன் பெருவிழா: ஞாயிறு சிந்தனை

உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்கள் எழுதிய 'மூன்று தவமுனிவர்கள்' (Three hermits) என்ற சிறுகதை, இன்றைய சிந்தனைகளைத் துவக்கிவைக்க உதவியாக உள்ளது.

ஆயர் ஒருவர், புகழ்பெற்ற ஒரு திருத்தலம் நோக்கி, கப்பலில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் பயணித்த எளிமையான மீனவர் ஒருவர், அப்பகுதியில், ஒரு தீவில், தனியே வாழும் மூன்று தவமுனிவர்களைப் பற்றி கூறினார். முனிவர்கள் மூவரும், மீட்படையும் நோக்கத்துடன், கடுந்தவம் புரிந்துவருவதாகக் கூறினார். அம்முனிவர்களை, தான் காண விழைவதாக, ஆயர், கப்பல் தலைவரிடம் கூறவே, அவரோ, "அம்மூவரும் படிப்பறிவு ஏதுமற்ற மிகச் சாதாரண முனிவர்கள். அவர்களைக் காண்பதற்கு, ஆயராகிய நீங்கள், நேரத்தை வீணாக்கவேண்டாம்" என்று கூறினார். இருப்பினும், ஆயர் மிகவும் வற்புறுத்தவே, அவர், அத்தீவை நோக்கி, கப்பலைச் செலுத்தினார்.

தீவில் தன்னை வரவேற்க வந்திருந்த மூன்று முனிவர்களிடமும், மீட்படைய அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பற்றி ஆயர் கேட்டார். அவர்கள் மூவரும், தாங்கள் ஒரு சிறு செபத்தை திரும்பச் திரும்பச் சொல்லி, மீட்பைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறினர். அவர்கள் பயன்படுத்தும் செபம் என்ன என்று ஆயர் கேட்டதும், மூவரும் சேர்ந்து, "நீங்கள் மூவர், நாங்கள் மூவர், எங்கள் மேல் இரக்கமாயிரும்" என்று சொன்னார்கள்.

அம்முனிவர்கள் மூவரும், மூவொரு இறைவனைப்பற்றி கூறுகின்றனர் என்பதை ஊகித்துக்கொண்ட ஆயர், அவர்களிடம், மூவொரு இறைவன், மீட்பின் வரலாறு ஆகிய மறையுண்மைகளைப்பற்றி சுருக்கமாகக் கூறினார். பின்னர் அவர்களுக்கு, இயேசு கற்பித்த செபத்தை, அன்று முழுவதும், பொறுமையாகச் சொல்லித்தந்தார்.

மாலையானதும், ஆயர் அவர்கள், கப்பலில், அத்தீவைவிட்டுக் கிளம்பினார். அவர் புறப்பட்டு, கடலில் சிறிது தூரம் பயணம் செய்தபின், கடல் நீர்ப்பரப்பின் மீது மூன்று ஒளிவட்டங்கள், கப்பலை நோக்கி வருவதைக் கண்ட ஆயர், கப்பலை நிறுத்தச் சொன்னார். தான் தீவில் சந்தித்த முனிவர்கள் மூவரும், கடினமான தரைமீது ஓடிவருவதுபோல், அந்த நீர்ப்பரப்பில், கப்பலை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்ததைக் கண்டு, ஆயர், வியப்பில் ஆழ்ந்தார். அம்மூவரும் கப்பலை நெருங்கியதும், உரத்தக் குரலில், "ஆயர் அவர்களே, எங்களை மன்னியும். நீங்கள் சொல்லித்தந்த செபத்தை அதற்குள் மறந்துவிட்டோம். தயவுசெய்து, மீண்டும் ஒருமுறை அதை எங்களுக்குச் சொல்லித்தாரும்" என்று வேண்டினர்.

ஆயர், அவர்கள்முன் தலைபணிந்து, "இதுவரை நீங்கள் சொல்லிவந்த செபமே, உங்களை இறைவனிடம் கொண்டுசேர்க்கும். வேறெதுவும் உங்களுக்குச் சொல்லித்தர எனக்குத் தகுதியில்லை. பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என்று கூறினார். அவர் சொன்னதைக் கேட்டு, முனிவர்கள் மூவரும், மகிழ்வுடன், கடல் மீது நடந்து, தங்கள் தீவுக்குத் திரும்பினர்.

"நீங்கள் மூவர், நாங்கள் மூவர், எங்கள் மேல் இரக்கமாயிரும்" என்ற சொற்களை, ஒரு செபம் என்றோ, மூவொரு இறைவனைப்பற்றிய கூற்று என்றோ, ஏற்றுக்கொள்ள, நாம் பெரிதும் தயங்குவோம். ஆனால், அத்தகைய எளிமையான சொற்களை, வாழ்நாளெல்லாம் கூறிவந்த அம்மூன்று முனிவர்கள், புனிதத்தின் சிகரத்தை அடைந்தனர் என்பதை, டால்ஸ்டாய் அவர்கள், இச்சிறுகதை வழியே நமக்கு உணர்த்த முயல்கிறார்.

குழந்தை உள்ளத்துடன் மூவொரு இறைவனுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட அம்மூன்று முனிவர்கள், மூவொரு இறைவனைப்பற்றிய உண்மைகளை, அவர்களுக்கு விளக்கமுயன்ற ஆயருக்கு மட்டுமல்லாமல், மூவொரு இறைவனைக் குறித்து ஆய்வுகளும், விவாதங்களும் மேற்கொண்டு, ஆழமான இறையியல் கருத்துக்களை வெளியிட்ட பல இறையியல் மேதைகளுக்கும் வழிகாட்டிகளாக அமைந்துள்ளனர்.

இறையியல் மேதையான புனித அகுஸ்தினுக்கும், குழந்தை வடிவில் அவரைச் சந்தித்த வானதூதருக்கும் கடற்கரையில் நிகழ்ந்த சந்திப்பைப்பற்றிய கதை நமக்கு நினைவில் இருக்கும். எல்லைகளற்ற இறைவனை, தன் சிறு அறிவுக்குள் அடக்கிவிட, புனித அகுஸ்தின் அவர்கள் மேற்கொண்ட முயற்சி, கடல் நீர் முழுவதையும், கரையில் தோண்டப்பட்ட ஒரு சிறு குழிக்குள் ஊற்றிவிடும் முயற்சி என்பதை, குழந்தை வடிவில் வந்த வானதூதர் அவருக்கு உணர்த்திச்சென்றார் என்ற இக்கதையிலும், பணிவுப்பாடங்கள் உணர்த்தப்பட்டுள்ளன.

அன்று, அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம், புனித அகுஸ்தின் அவர்களை, வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளைப் பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. "அன்பைக் காணமுடிந்தால், மூவொரு இறைவனையும் காணமுடியும்" என்று, புனித அகுஸ்தின், பின்னொரு காலத்தில் சொன்னார்.

இஞ்ஞாயிறன்று, மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாட, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். திருஅவையில் நாம் கொண்டாடும் பெரும்பாலான விழாக்களுக்கும், இந்த விழாவுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் துவங்கி, அவரது பிறப்பு, திருமுழுக்கு, உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற வரிசையில், நாம் சிறப்பிக்கும் விழாக்கள் அனைத்தும், ஒரு நிகழ்வை மையப்படுத்தியவை, மூவொரு இறைவன் என்ற இந்த விழாவோ, அறிவு சார்ந்த ஒரு கருத்தை மையப்படுத்திய விழாவென்று எண்ணத் தோன்றுகிறது.

ஆழ்ந்து சிந்தித்தால், நம் ஒவ்வொருவருக்கும், குழந்தைப் பருவத்தில், அறிவுசார்ந்த கருத்தாக இல்லாமல், உணர்வுசார்ந்த உறவாக மூவொரு இறைவன் அறிமுகமானார் என்பதே உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். மதநம்பிக்கையுள்ள கிறிஸ்தவக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்ற குடும்ப உறவுகளுக்கு அடுத்தபடியாக அறிமுகமாவது, மூவொரு இறைவன்.

குழந்தையாக நாம் பிறந்ததும், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும், நமது நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, மூவொரு இறைவன் பெயரால் நம்மை ஆசீர்வதித்தனர். நாம் திருமுழுக்கு பெற்றபோது, மூவொரு இறைவன் பெயரால், நமக்குரிய பெயரை, அருள்பணியாளர் நமக்கு வழங்கினார். பெற்றோர், கோவிலுக்குள் நம்மை சுமந்து சென்றபோதும், தட்டுத்தடுமாறி, தளிர் நடைபயின்று, நாமாகவே கோவிலுக்குள் சென்றபோதும், கோவில் வாசலில் இருந்த புனித நீரால், பெற்றோர் நம்மீது சிலுவை அடையாளம் வரைந்து, மூவொரு இறைவனை மீண்டும் மீண்டும் நமக்கு அறிமுகப்படுத்தினர். "தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்" என்ற எளிமையான செபமும், அதனுடன் இணைந்துசெல்லும் அடையாளச்செயலும், மூவொரு இறைவனுடன் குழந்தைகள் மேற்கொள்ளும் முதல் உறவுமுயற்சிகள். ஒவ்வொரு குழந்தைக்கும் தான் இவ்விதம் அறிமுகமாவதில், இறைவன் பேரானந்தம் அடைகிறார் என்பது நிச்சயம்.

குழந்தைப்பருவம் முதல், ஓர் உறவினராக, நம்முடன் வாழும் மூவொரு இறைவன், நாம் வயதில் வளர, வளர, ஒரு மறையுண்மையாக மாறுகிறார். இந்த மறையுண்மையைப் புரிந்துகொள்வதில் நாம் அதிகம் ஈடுபாடு கொள்ளும்போது, உண்மை இறைவனை மறந்துவிட்டு, அவரைப்பற்றி நாம் உருவாக்கியுள்ள கருத்துக்களைக் கொண்டாடும் ஆபத்து ஏற்படுகிறது.

திருஅவை வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும்போது, மூவொரு இறைவன் என்ற பேருண்மை, பெரும்பாலும் ஏட்டளவு சிந்தனையாக, இறையியல் நூல்களின் பக்கங்களையும், பல்வேறு திருச்சங்க ஏடுகளையும் நிறைத்துவிட்டனவோ என்ற நெருடல், நம் உள்ளங்களில் எழுகின்றது. மூவொரு இறைவனை, உயிரோட்டமுள்ள ஓர் உறவாக இயேசு நமக்குத் தந்தார். நாமோ, அவரை, ஒரு கருத்தாக மாற்றி, நூல்களிலும், கோவில்களிலும் பாதுகாத்துவருகிறோம். இக்கோணத்தில் சிந்திக்கும்போது, ஆப்ரிக்காவில் சொல்லப்படும் கதையொன்று நினைவுக்கு வருகிறது.

ஆப்ரிக்காவின் பழங்குடியினரிடையே மறைபரப்புப்பணியாற்றிவந்த அருள்பணியாளர் ஒருவர், விடுமுறைக்கு, தன் தாயகம் திரும்பிச்சென்றார். அங்கு அவர், சூரிய சக்தியைப் பயன்படுத்தி இயங்கும் 'சூரிய மணிகாட்டி' (Sun dial) என்ற அற்புதப் படைப்பைக் கண்டார். அதன் பயனை, தன் மக்கள் புரிந்து, பயன்படுத்தவேண்டும் என்ற ஆவலுடன், அருள்பணியாளர், விடுமுறை முடிந்து திரும்பியபோது, சூரிய மணிகாட்டி ஒன்றை வாங்கிச்சென்றார்.

அவர் கொண்டுவந்திருந்த சூரிய மணிகாட்டியைக் கண்ட பழங்குடியினர், ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தனர். சூரிய மணிகாட்டியின் பயனை, தன் மக்கள் புரிந்துகொண்டனர் என்ற மகிழ்வில், அருள்பணியாளர், அதை அவ்வூருக்கு நடுவே ஒரு திறந்தவெளித் திடலில், சூரிய ஒளி தடையின்றி விழும் இடத்தில் பொருத்திவைத்தார்.

அடுத்தநாள் காலை, அருள்பணியாளர் அவ்விடம் சென்றபோது, அதிர்ச்சி அடைந்தார். அவ்வூர் மக்கள், சூரிய மணிகாட்டிக்கு மேல், கூரை ஒன்றை அமைத்திருந்தனர். வெயில், மழை இவற்றால் சூரிய மணிகாட்டி பாதிக்கப்படாமல் காக்கும்பொருட்டு, அந்தக் கூரையை அமைத்ததாக, அம்மக்கள், அருள்பணியாளரிடம் கூறினர்.

மூவொரு இறைவன் என்ற மறையுண்மையை சூரிய மணிகாட்டியாகவும், நம்மை, அந்தப் பழங்குடியினராகவும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூவொரு இறைவனின் மறையுண்மை, நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்புதமான கொடை. இக்கொடையைப் பெற்றுள்ள நாம், இம்மறையுண்மையை நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதைப் பாதுகாப்பாக வைக்கவேண்டுமென்ற ஆர்வத்தில், பிரம்மாண்டமானக் கோவில்களை எழுப்பி, அல்லது, மூவொரு இறைவனை, இறையியல் கருத்துக்களாக நூல்களில் எழுதி, அவற்றில், இம்மறையுண்மையை ஒரு காட்சிப்பொருளாக வைத்து, அழகுபார்க்கிறோம். இம்மறையுண்மையை, வழிபாட்டிற்குரிய ஓர் உண்மையாக வணங்குகிறோமே தவிர, நம் வாழ்வின் ஆதாரமாகப் பயன்படுத்தத் தயங்குகிறோம்.

தானாக இருப்பவர், தனித்திருப்பவர், அணுகமுடியாத ஒளியில் வாழ்பவர், பெயரிட்டு அழைக்கமுடியாதவர் என்றெல்லாம் இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான இறைவனை, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற கூட்டுக்குடும்பமாக இயேசு அறிமுகம் செய்துவைத்தார். உறவில் வாழ்வது ஒன்றே, இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம். நம் இறைவன், உறவுகளின் ஊற்றாக இருப்பதால், நாமும் உறவுகளுக்கு முதன்மையான, முக்கியமான இடம் தரவேண்டும் என்பதே மூவொரு இறைவன் பெருவிழா சொல்லித்தரும் உன்னதப் பாடம்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, குடும்ப உறவுகள், நட்பு வட்டங்கள், உறவினர்களின் கூட்டம் என்ற அனைத்து நிலைகளிலும், கோவிட் 19 பெருந்தொற்று பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் சுமத்தியுள்ளது. நம் நெருங்கிய உறவுகள், இவ்வுலகைவிட்டுப் பிரிந்துசென்ற சூழலிலும், அவர்களுக்குத் தகுதியான இறுதி மரியாதை வழங்க முடியாமல் தவித்தோம். இந்தப் பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் காலங்களில், நாம், உறவுகளுக்கு முதன்மை இடத்தை தரப்போகிறோமா என்ற கேள்வியை, மூவொரு இறைவன் பெருவிழா மீண்டும் நமக்கு முன் வைக்கிறது.

உறவுகளை வளர்ப்பதைவிட, செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது, அறிவியலின் உதவியோடு, இவ்வுலகை வெல்வதாக எண்ணி, இயற்கையைச் சீரழிப்பது என்ற மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும், மனித உறவுகளுக்கும், ஏனைய உயிரனங்களுடன் கொள்ளவேண்டிய உறவுகளுக்கும், முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று, இன்று சிறப்பாக மன்றாடுவோம்.

நாமும் நமது தலைமுறைகளும் இறைவன் காட்டும் வழியில் நடக்கும்போது, அவரது ஆசீரால் நிறைவோம் என்ற ஆறுதல்தரும் சொற்களை, மோசே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார்:

இணைச்சட்டம் 4: 40

நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

நமக்குத் துணையும், கேடயமுமாக விளங்கும் இறைவன், இந்தப் பெருந்தொற்று உருவாக்கிவரும் சாவிலிருந்து நம்மைக் காத்தருள, இன்றைய பதிலுரைப் பாடலில் ஒலிக்கும் சொற்களுடன் நாமும் இணைந்து மன்றாடுவோம்:

நம் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; நம்மைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! (திருப்பாடல் 33:19,20,22)

29 May 2021, 14:09