தேடுதல்

இக்னேசியசுடன் நடந்து செல்லுதல் – இயேசுசபை உலகத்தலைவர்

127 நாடுகளில் பணியாற்றிவரும் இயேசு சபையினர், தங்கள் உடன் உழைப்பாளர்கள், அனைவரோடும் இணைந்து, நம்பிக்கை வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொணர்வதற்கு, "இக்னேசியஸ் 500" ஆண்டு நிகழ்வுகள் உதவியாக இருக்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு சபையின் உலகத்தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா (Arturo Sosa) அவர்கள், இஸ்பானிய பத்திரிக்கையாளர் தாரியோ மெனோர் (Dario Menor) என்பவரின் உதவியோடு, புனித இக்னேசியஸைக் குறித்து உருவாக்கியுள்ள ஒரு நூல், மே 11, இச்செவ்வாய் மாலை, உரோம் நகரிலுள்ள இயேசு சபை தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

புனித இக்னேசியஸ் மனமாற்றம் அடைந்த நிகழ்வின் 500ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, அருள்பணி சோசா அவர்கள், மெனோர் அவர்களுடன் மேற்கொண்ட ஓர் உரையாடல், "இக்னேசியசுடன் நடந்து செல்லுதல்" ("Walking with Ignatius") என்ற நூலாக வெளியாகியுள்ளது.

துறவு சபைகளின் உலகத்தலைவர்கள் ஒன்றியத்தின் தலைவர், அருள்சகோதரி Jolanda Kafka அவர்கள், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியதோடு, இந்நூல் வெளியீட்டு நிகழ்வில், இயேசுசபை உலகத்தலைவர் அருள்பணி சோசா அவர்களும், அருள்சகோதரி Kafka அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

127 நாடுகளில் பணியாற்றிவரும் இயேசு சபையினர், தங்கள் உடன் உழைப்பாளர்கள், குடும்பத்தினர் அனைவரோடும் இணைந்து, தங்கள் நம்பிக்கை வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொணர்வதற்கு, இந்த 500ம் ஆண்டு நிகழ்வுகள் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக, அருள்பணி சோசா அவர்கள் இந்நூலில் கூறியுள்ளார்.

இஸ்பானிய மொழியில் உருவாக்கபப்ட்டுள்ள இந்நூலை, மே 3ம் தேதி, அருள்பணி சோசா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் வழங்கினார் என்றும், இந்நூல், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகீசியம், தமிழ், அரேபியம் உட்பட ஒன்பது மொழிகளில், வெளியிடப்பட்டுள்ளது என்றும் இயேசு சபை தலைமையகம் கூறியுள்ளது.

1521ம் ஆண்டு, பாம்பலோனா கோட்டையைக் காக்க, இளம் வீரர் இக்னேசியஸ், போரில் ஈடுபட்டிருந்த வேளையில், மே 20ம் தேதி, அவரது காலை பீரங்கி குண்டு தாக்கியது. அந்நிகழ்வு, இக்னேசியஸ் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்ததால், அந்நிகழ்வின் 500ம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்படுகிறது.

இம்மாதம் 20ம் தேதி, துவங்கும் "இக்னேசியஸ் 500" என்ற சிறப்பு ஆண்டு, 14 மாதங்கள் நடைபெற்று, 2022ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி, புனித இக்னேசியஸ் திருநாளன்று நிறைவு பெறும்.

"இக்னேசியஸ் 500" சிறப்பு ஆண்டின் முதல் நிகழ்வு, மே 23, பெந்தக்கோஸ்து ஞாயிறன்று இணையத்தளம் வழியே உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் இயேசு சபையினரும், உடன் உழைப்பாளர்களும் கலந்துகொள்ளும் ஒரு செப நிகழ்வுடன் துவங்கும் என்று, இந்த சிறப்பு ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் இயேசு சபை இளவல் Pascal Calu அவர்கள் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, 2022ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, இக்னேசியஸ் மற்றும் பிரான்சிஸ் சேவியர் ஆகிய இருபெரும் இயேசு சபையினர், புனிதர்களாக உயர்த்தப்பட்டதன் 400ம் ஆண்டு நினைவு சிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12 May 2021, 17:30