தேடுதல்

Nyaung Lay Pin லூர்து அன்னை திருத்தலம் Nyaung Lay Pin லூர்து அன்னை திருத்தலம் 

பல்சுவை – பெருந்தொற்று ஒழிய செபமாலை பக்திமுயற்சிகள்

Nyaung Lay Pin லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெறும் விழாவில், புத்தமதத்தினர், இந்துக்கள், முஸ்லிம்கள் என, அந்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொள்கின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலக மக்களை, குறிப்பாக, இந்தியாவில் வாழ்கின்ற மக்களை, வயதுவேறுபாடின்றி கடுமையாய்த் தாக்கி வருகின்றது. இத்தொற்றுநோய் உலகினின்று மறையும்படியாக, இந்த மே மாதத்தில் செபமாலை பக்திமுயற்சி வழியாக, அன்னை மரியாவிடம், சிறப்பாக மன்றாடி வருகின்றோம். புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை, இதற்கென்று, உலகின் முப்பது முக்கிய திருத்தலங்களைக் குறித்துள்ளது. இந்த பக்தி முயற்சியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் முதல் தேதி மாலையில், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் செபமாலை செபித்து ஆரம்பித்து வைத்தார். அச்சமயத்தில், திருத்தந்தை, உலகின் முப்பது முக்கிய திருத்தலங்களுக்கென, செபமாலைகளை ஆசிர்வதித்து அவற்றுக்கு அனுப்பி வைத்தார். இம்மாத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருத்தலத்தில் ஒவ்வொரு கருத்துக்காக இப்பக்தி முயற்சி நடைபெறு வருகிறது. மே 24, இத்திங்களன்று, மியான்மார் நாட்டின் Nyaung Lay Pin நகர், லூர்து அன்னை மரியா திருத்தலத்தில், அத்தியாவசியப் பணிகளை ஆற்றும் எல்லாருக்காவும், செபமாலை பக்திமுயற்சி நடைபெறுகின்றது. இப்பக்திமுயற்சிக்கென்று, ASEAN எனப்படும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில், இத்திருத்தலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மியான்மார் Nyaung Lay Pin லூர்து அன்னை திருத்தலம்

Nyaung Lay Pin லூர்து அன்னை திருத்தலம், யாங்கூன் நகருக்கு வடக்கே, 145 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மூன்று நாள்கள் நடைபெறும் விழாவில், புத்தமதத்தினர், இந்துக்கள், முஸ்லிம்கள் என, அந்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொள்கின்றனர். 1892ம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டு கத்தோலிக்க மறைப்பணியாளர்கள், அப்போதைய பர்மாவுக்கு வந்தபோது, அருள்பணி Michael Mignot அவர்கள் Nyaung Lay Pin நகரில் தங்கினார். அவர் தன்னோடு லூர்து அன்னை திருவுருவத்தையும் கொண்டு வந்திருந்தார். பிரான்ஸ் நாட்டில் லூர்து அன்னை அளித்த காட்சிகள் மற்றும், அந்த அன்னையால் நடைபெறும் புதுமைகளை, அவர் மக்கள் மத்தியில் பரப்பினார். அப்போதைய தெற்கு பர்மாவின் திருப்பீட பிரதிநிதியாகப் பணியாற்றிய, MEP எனப்படும் மறைபோதகச் சபையைச் சார்ந்த ஆயர் Paul Ambrose Bigandet அவர்கள், இவ்விடத்தில் புதிய ஆலயம் ஒன்றை எழுப்பி, அதனை, லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். எனவே, 1902ம் ஆண்டில், அவ்விடத்தில், மரத்தால் கட்டப்பட்டிருந்த பழைய ஆலயம் அகற்றப்பட்டு, புதிய ஆலயம் கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து விழாக் கொண்டாட்டங்களும் ஆரம்பித்தன.

1929ம் ஆண்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர், இந்த ஆலயத்தின் லூர்து அன்னை கெபியிலிருந்த திருவுருவத்தை கீழே தள்ளினார். அதனால் அவ்வுருவம் உடைந்து போனது. பின்னர், 1942ம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரில், ஜப்பானிய படைகள், Nyaung Lay Pin நகரை ஆக்ரமித்தன. அச்சமயத்தில், அந்த படைகள், இந்த ஆலய வளாகத்தை, தங்களின் இராணுவத் தலைமையிடமாக மாற்றின. அதோடு, அந்தப் படைகளும், அத்திருவுருவத்தை உடைத்தன. அதனால் லூர்து அன்னை திருவுருவத்தின் கைகள் உடைந்தன. ஆயினும், 1949ம் ஆண்டில், அந்த கைகள் மீண்டும் பொருத்தப்பட்டன. இருந்தபோதிலும், அந்தக் கீறல்களை இன்றும் காண முடிகின்றது. மேலும், பர்மாவை ஜப்பான் ஆக்ரமித்திருந்த காலக்கட்டத்தில், அந்த ஆலயம் குண்டுவெடிப்பால் ஒரு பக்கம் அழிந்தது. அதனால் விழாக் கொண்டாட்டங்களும் நிறுத்தப்பட்டன. பின்னர், 1948ம் ஆண்டில் இவ்விழாக் கொண்டாட்டங்கள் மீண்டும் துவக்கப்பட்டன. அண்மை நாள்களில் இவ்விழாக் கொண்டாட்டங்கள், பிப்ரவரி 2ம் தேதியிலிருந்து 11ம் தேதி வரை நடைபெறுகின்றன. Nyaung Lay Pin லூர்து அன்னை திருத்தலத்தில், அந்த அன்னையிடம் நம்பிக்கையோடு செபிப்பவர்கள், அற்புதங்களைப் பெறுகின்றனர். Hmawbi நகரைச் சேர்ந்த 56 வயது நிரம்பிய Daw Khin Kyi என்பவர், தான் மார்புப் புற்றுநோயிலிருந்து குணம் அடைந்ததாகச் சொல்லியிருக்கிறார். பெருமளவான மக்களும், தங்களை அன்னை மரியா காப்பாற்றி வருகிறார் என்று சொல்லியுள்ளனர். மியான்மார் மக்கள் தொகையில், ஏறத்தாழ ஒரு விழுக்காட்டினரே கத்தோலிக்கர். மே 24, இத்திங்களன்று இத்திருத்தலத்தில் நடைபெறும் செபமாலை பக்தி முயற்சியில், நாமும், ஆன்மீக அளவில் பங்கெடுத்து, மியான்மாரில் அமைதி நிலவவும், உலகினின்று கொரோனா பெருந்தொற்று ஒழியவும் லூர்து அன்னை மரியாவிடம் மன்றாடுவோம்.   

கனடா நாட்டு Notre-Dame-du-Cap அன்னை மரியா திருத்தலம்

Notre-Dame-du-Cap அன்னை மரியா திருத்தலம்
Notre-Dame-du-Cap அன்னை மரியா திருத்தலம்

மே 23, இஞ்ஞாயிறன்று, கனடா நாட்டின் Trois-Rivières நகரிலுள்ள Notre-Dame-du-Cap தேசிய அன்னை மரியா திருத்தலத்தில், சட்டம் இயற்றுவோர், இராணுவத்தினர், மற்றும், தீயணைப்புப் படையினர் ஆகிய அனைவருக்காகவும் செபமாலை பக்தி முயற்சி நடைபெறுகின்றது. கனடா நாட்டின் இந்த அன்னை மரியா தேசிய திருத்தலம், அந்நாட்டிலுள்ள ஐந்து தேசிய திருத்தலங்களில் ஒன்றாகும். Cap-de-la-Madeleine என்ற மாவட்டத்திலுள்ள இந்த திருத்தலம், முதலில், 1659ம் ஆண்டில், மரத்தால், ஒரு சிறிய ஆலயமாக எழுப்பப்பட்டது. பின்னர், 1694ம் ஆண்டில், அங்கு முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருள்பணி Paul Vachon அவர்கள், Cap de la Madeleineல், செபமாலை பக்த சபையை உருவாக்கினார். இதன் வழியாக செபமாலை பக்தி வளரத் தொடங்கியது. 1720ம் ஆண்டில், இந்த சிறிய ஆலயம், செங்கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. 1729ம் ஆண்டில் அருள்பணி Paul Vachon அவர்கள் இறைபதம் சேர்ந்தார். அதற்குப்பின் அங்கு, நீண்ட காலமாக, பங்குத்தந்தையே இல்லாமல் இருந்தது. அதற்குப்பின், 1867ம் ஆண்டில் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருள்பணி Luc Desilets அவர்கள், செபமாலை பக்தியை மீண்டும் வளர்க்கத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, புதிய ஆலயம் கட்டுமானப் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், 1879ம் ஆண்டு மார்ச் மாதத்தில், வழக்கத்திற்கு மாறாக இருந்த குளிர் கால நிலையால், புனித லாரன்ஸ் ஆறு உறைந்துவிட்டது. பனியும் மழையும் பொழிந்தன. பங்குத்தந்தையும், பங்கு மக்களும், மிகவும் சிரமப்பட்டு, ஆற்றின் மீது பனிப் பாலம் ஒன்றை அமைத்து, ஆலயக் கட்டுமானப் பணிகளுக்குப் பொருள்களைக் கொண்டுசேர்த்தனர். இது அன்னை மரியா ஆற்றிய அற்புதம் என்றே மக்கள் கூறினர். இவ்வாறு அம்மக்கள் மத்தியில் செபமாலை அன்னை மரியா பக்தி வளர்ந்தது. 1904ம் ஆண்டு அக்டோபரில் திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள், இந்த திருத்தலத்தில் அன்னை மரியாவுக்கு முடிசூட்ட அனுமதியளித்தார். 1906ம் ஆண்டில் செபமாலை நிலைகளும் இங்கு அமைக்கப்பட்டன. இப்போதுள்ள திருத்தலம், 1964ம் ஆண்டில் கட்டப்பட்டது. 1984ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் இத்திருத்தலத்தில் செபித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் இத்திருத்தலம் சென்று செபித்து உடல், உள்ள சுகம் பெறுகின்றனர்.    

23 May 2021, 12:04