தேடுதல்

யாஸ் புயலின் பாதிப்பு யாஸ் புயலின் பாதிப்பு   (AFP or licensors)

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலத்திருஅவை உதவி

பங்களாதேஷ் மற்றும், இந்தியாவில் வீசிய யாஸ் புயலால், மேற்கு வங்க மாநிலத்தில், குறைந்தது பத்து இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேற்கு இந்திய கடற்கரைப் பகுதியில், Tauktae புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, தலத்திருஅவைப் பணியாளர்கள், அடிப்படை உதவிகளை வழங்கி வருகின்றனர்.

Tauktae புயலால், குஜராத் மாநிலத்தின் கடற்கரைப் பகுதியிலுள்ள வீடுகள், நிலங்கள், பயிர்கள் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, மற்றும், குடிநீர் வசதிகளை, திருஅவைப் பணியாளர்கள் ஆற்றிவருகின்றனர்.

தலத்திருஅவையின் இப்பணிகள் பற்றி விளக்கிய, ராஜ்காட் மறைமாவட்டத்தின் சமுதாய நலப்பணி இயக்குனர் அருள்பணி தாமஸ் மாத்யூ அவர்கள், இம்மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் வீசிய Tauktae கடும் புயலால், குறைந்தது 169 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும், ஏறத்தாழ 2 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று கூறினார்.

விளைநிலங்கள், மரங்கள், மின்கம்பிகள், சாலைகள் ஆகியவை சேதமடைந்துள்ளதோடு, ஐம்பதாயிரம் வீடுகளும் அழிந்துள்ளன என்றும், கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளால், அடிப்படை தேவைகளைச் சேகரிப்பது கடினமாக உள்ளது என்றும், அருள்பணி மாத்யூ அவர்கள் கூறினார்.

யாஸ் புயல்

மேலும், மே 26, இத்திங்களன்று பங்களாதேஷ் மற்றும், இந்தியாவில், 130 முதல், 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய யாஸ் புயலால், மேற்கு வங்க மாநிலத்தில், குறைந்தது பத்து இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், குறைந்தது இருபதாயிரம் வீடுகள் அழிந்துள்ளன என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பங்களாதேஷ் நாட்டில், யாஸ் புயலின் பாதிப்பு குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, அந்நாட்டு Khulna மாநில காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் Daud Jibon Das அவர்கள், இந்தப் புயல் வீரியம் குறைந்ததாக கருதப்பட்டாலும், அதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் அதிகம் என்று தெரிவித்தார். (UCAN)

28 May 2021, 14:49