தேடுதல்

Vatican News
பங்களாதேஷில் பத்திரிகை சுதந்திர நாள் பங்களாதேஷில் பத்திரிகை சுதந்திர நாள் 

பங்களாதேஷில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட திருஅவை

பங்களாதேஷில், திட்டமிட்ட கைதுகள், சித்ரவதைகள், சட்டத்திற்குப் புறம்பே கொலைகள் உட்பட, ஊடகவியலாளர்கள் மீது இடம்பெறும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஊடகத்துறையினர் அரசின் கட்டுப்பாடுகளை அதிகமாக எதிர்கொள்ளும் பங்களாதேஷ் நாட்டில், பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது, அந்நாட்டு தலத்திருஅவை.

பத்திரிகை சுதந்திரம் உலக நாள் சிறப்பிக்கப்பட்ட மே 03, இத்திங்களன்று, பங்களாதேஷில் ஊடகத்துறையினர் பாதுகாக்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்த எட்டு ஆசிய மனித உரிமை அமைப்புக்களுடன், தலத்திருஅவையும் இணைந்து குரல் எழுப்பியது.

இந்த அமைப்புக்களுடன் இணைந்து, குரல் எழுப்பியுள்ள, பங்களாதேஷ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமூகத்தொடர்பு பணிக்குழுவின் செயலர், அருள்பணி Augustine Bulbul Rebeiro அவர்கள், திட்டமிட்ட கைதுகள், சித்ரவதைகள், சட்டத்திற்குப் புறம்பே கொலைகள் உட்பட, அந்நாட்டில், ஊடகவியலாளர்கள் மீது இடம்பெறும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று கூறினார்.

பங்களாதேஷில் ஊடகவியலாளர் சந்திக்கும் துயரங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு மடல் அனுப்பியுள்ள இந்த அமைப்புகள், அந்நாட்டில், பேச்சு சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் மதிக்கப்படவும், பாதுகாக்கப்படவும், அந்நாட்டு அதிகாரிகளை, ஐ.நா. தனது அனைத்து அதிகாரங்களையும் கொண்டு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளன.

தங்களது விருப்பமின்றி காணாமல்போயுள்ளவர்களுக்கு எதிரான ஆசிய கூட்டமைப்பு (AFAD), ஆசிய மனித உரிமைகள், மற்றும், வளர்ச்சி கழகம் (FORUM-ASIA), ஆசிய மனித உரிமைகள் அமைப்பு (AHRC), சுதந்திரத் தேர்தல்கள் வலையமைப்பு (ANFREL), பத்திரிகையாளர் பாதுகாப்பு குழுமம், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, உலகளாவிய மனித உரிமைகள் கூட்டமைப்பு (FIDH), இராபர்ட் கென்னடி மனித உரிமைகள் அமைப்பு ஆகிய அமைப்புகள் சேர்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் Michelle Bachelet அவர்களுக்கு அனுப்பிய மடலில், தலத்திருஅவையும் கையெழுத்திட்டுள்ளது.

உலகில், பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படுவது குறித்து 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பங்களாதேஷ், 152வது இடத்தில் உள்ளது. பங்களாதேஷில், 2020ம் ஆண்டில், குறைந்தது 247 ஊடகவியலாளர்கள், அரசின் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். (UCAN)

04 May 2021, 15:00