தேடுதல்

Vatican News
மத்திய ஆப்ரிக்க குடியரசு மத்திய ஆப்ரிக்க குடியரசு  (AFP or licensors)

இதயங்களிலிருந்து வெறுப்புணர்வுகள் அகற்றப்படவேண்டும்

மத்திய ஆப்ரிக்க குடியரசில், புரட்சியாளர்கள் மட்டுமல்ல, குடிமக்கள் அனைவருமே சமநிலை காத்து, அமைதிக்கு வழியமைக்கும் பாதைகளை உருவாக்கவேண்டும் - கர்தினால் Nzapalainga

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மாற்றங்கள் இடம்பெற்றுவரும் மத்திய ஆப்ரிக்க குடியரசில், மக்களின் இதயங்களில் வெறுப்புணர்வுகள் அகற்றப்படுவதற்கு, அமைதிபற்றிய நல்லுணர்வு உருவாக்கப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்று, அந்நாட்டு கர்தினால் Dieudonné Nzapalainga அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

2012ம் ஆண்டிலிருந்து உள்நாட்டுப் போர் இடம்பெற்றுவந்த மத்திய ஆப்ரிக்க குடியரசில், தற்போது, ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்கள், நகரங்களில் நுழைந்து, ஆயுதங்களைக் கைவிட்டு, காடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும், இச்செயல், உண்மையானதா, அல்லது, வெறும் தற்காலிக அமைதிக்காக இடம்பெற்றுள்ளதா என்பதை, பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று, கர்தினால் Nzapalainga அவர்கள் கூறியுள்ளார்.

புரட்சியாளர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருமே சமநிலை காத்து, அமைதிக்கு வழியமைக்கும் பாதைகளை உருவாக்கவேண்டும் என்றுரைத்த, Bangui பேராயர்,  கர்தினால் Nzapalainga அவர்கள், உள்நாட்டுப் போரால், பல்லாயிரக்கணக்கான மக்கள் அருகாமையிலுள்ள நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருந்தாலும், நாட்டின் தற்போதையநிலை, வருங்காலத்தின் மீது ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய நிலைமை, ஒப்புரவு சூழலை உருவாக்கியுள்ளது என்றும், புரட்சியாளர்கள், தங்களின் ஆயுதங்களை முழுமையாக கைவிட்டு, சமுதாயத்தில் ஒன்றிணைந்து, தரமான வேலைக்குத் திரும்பவேண்டும், இத்தகைய மாற்றமின்றி, நாட்டில் அமைதியைக் கொணர்வது கடினம் என்றும், கர்தினால் Nzapalainga அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசில், புரட்சியாளர்களை முறியடிப்பதற்கு, ருவாண்டா, இரஷ்யா ஆகிய நாடுகளிடமிருந்து, அரசு, உதவிகளைப் பெற்றது என்றும், தற்போது நாட்டின் குறைந்தது 75 விழுக்காட்டுப் பகுதி, அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், நாட்டில் தீவிர நல்மாற்றத்தைக் கொணரவேண்டியது அரசுக்கு முன்வைக்கப்பட்டுள்ள சவால் என்றும், கர்தினால் Nzapalainga அவர்கள் எடுத்துரைத்துள்ளார். (Fides)

07 May 2021, 15:19