தேடுதல்

புதுடெல்லியில் தயார்படுத்தப்பட்டுள்ள தற்காலிக, கோவிட் மருத்துமனை புதுடெல்லியில் தயார்படுத்தப்பட்டுள்ள தற்காலிக, கோவிட் மருத்துமனை 

இனம், மதம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி மருத்துவ உதவிகள்

அனைவரும் தடுப்பூசிப் போடவேண்டும், மற்றும், அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்ற பிரச்சாரத்தில், அரசுடன் இணைந்து, இந்தியத் திருஅவையும் பணியாற்றுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 60 ஆயிரம் படுக்கை வசதிகளுடன், ஆயிரம் மருத்துவமனைகள் வழியாக இந்திய தலத்திருஅவை பணியாற்றி வருவதாக, இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

இந்தியாவின் மருத்துவமனைகளில் பணியாற்றும் 50 ஆயிரம் அருள்சகோதரிகள், மதம், இனம் என்ற எவ்வித பாகுபாடும் பார்க்காமல், பணியாற்றுவதாகவும், இவர்களில், ஏறத்தாழ ஆயிரம்பேர், மருத்துவர்கள் எனவும் உரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன்னால் இயன்ற அனைத்தையும், தலத்திருஅவை செய்துவருவதாக தெரிவித்தார்.

கத்தோலிக்கக் கல்விக்கூடங்களும், ஏனைய கட்டடங்களும், தடுப்பூசி மையங்களாகவும், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு தங்குமிடங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று, மேலும் கூறினார், கர்தினால் கிரேசியஸ்.

பாகுபாடு ஏதுமின்றி, அனைத்து மதத்தினருக்கும் உதவிகளை வழங்க, காரித்தாஸ் இந்தியா பிறரன்பு அமைப்புடன் இணைந்து, தலத்திருஅவை திட்டங்களைத் தீட்டியுள்ளதாகவும், தொற்றுநோய் பாதித்துள்ளவர்களுக்கு மேலும் உதவிகளை அதிகரிக்கும் திட்டம் குறித்து கத்தோலிக்க மருத்துவமனைகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் கூறினார், மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ்.

அனைத்து மக்களையும் காப்பாற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், சுவாசிப்பதற்கு உதவும் கருவிகளை வாங்க நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், மருத்துவக்கருவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும் உரைக்கும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஏற்கனவே, காசநோய், தொழுநோய், எயிட்ஸ், போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறப்பு மருத்துவச் சேவைகளை ஆற்றிவரும் இந்தியத் திருஅவை, இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு என தன் பணிகளை அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

அனைவரும் தடுப்பூசிப் போடவேண்டும், மற்றும், அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்ற பிரச்சாரத்தில் அரசுடன் இணைந்து தலத்திருஅவையும் பணியாற்றுகின்றது என, மேலும் எடுத்துரைத்தார், கர்தினால் கிரேசியஸ். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2021, 14:30