தேடுதல்

Vatican News
இறைவேண்டல் நேரம் இறைவேண்டல் நேரம்  (ANSA)

சீனாவிற்காக செபிக்க ஒதுக்கப்பட்டுள்ள மே கடைசி வாரம்

மே 24ம் தேதியை, சீன நாட்டிற்காக செபிக்கும் நாளாக ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்க வேண்டும் என, 2007ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சீனாவில் சித்ரவதைகளுக்கு உள்ளாகும் மனச்சான்றின்  கைதிகள், மற்றும், சிறுபான்மை இனத்தவருக்காக இறைவேண்டல் செய்வதற்கென, இம்மாதத்தின் கடைசி வாரத்தை ஒதுக்கியுள்ள மியான்மார் கர்தினாலின் அழைப்புக்கு, உலகம் முழுவதுமிருந்து ஆதரவு பெருகியுள்ளது.

சீனாவின் Shanghai நகருக்கு அருகில் உள்ள Sheshan மரியன்னை திருத்தல விழாவான மே 24ம் தேதியை, சீன நாட்டிற்காக செபிக்கும் நாளாக ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்க வேண்டும் என 2007ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,  இவ்வாண்டு மே மாதம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரையுள்ள ஒரு வாரத்தை, சீனாவிற்காக இறைவேண்டல் மேற்கொள்ளும் வாரமாக சிறப்பிக்க, மியான்மார் கர்தினால், சார்லஸ் மாங்க் போ அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆசிய ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் போ அவர்களின் அழைப்பை ஏற்று, சீனாவின் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், ஹாங்காங் மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் மனச்சான்றின் கைதிகளுக்கு என செபிக்கும் நோக்கத்துடன் இந்த ஒருவார இறைவேண்டலில் இணைய உலகின் அரசியல் நடவடிக்கையாளர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் குழு, தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மே மாதத்தின் இறுதி வாரத்தில் உலகெங்கும் சீனாவிற்காக நடத்தப்படும் செபக்கூட்டங்கள், சீனாவில் மத விடுதலையின் இன்றைய நிலை, அந்நாட்டின் மத, மற்றும், அரசியல் கைதிகள் குறித்த விவரங்கள் போன்றவற்றையும் இந்த குழு கண்காணித்து, மக்களுக்கு இவ்வாரத்தில் அறிவிக்க உள்ளது.

இந்த இறைவேண்டல் வாரம் குறித்து அழைப்பு விடுத்திருந்த கர்தினால் போ அவர்கள் கூறுகையில், சீன மக்கள் மீதான அன்பையும், அவர்களின் தொன்மை கலாச்சாரம், மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பையும் வெளிப்படுத்தும் அதேவேளை, இந்நாடு, நன்மைகளின் பலம் மிகுந்த சக்தியாகவும், உலக வறியோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் குரலாகவும் செயல்படவேண்டும் என விண்ணப்பிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, சீனக் கத்தோலிக்கர்கள் அனைவரும், திருத்தந்தையர்கள் பிரான்சிஸ், 16ம் பெனடிக்ட், மற்றும், அகில உலக திருஅவையோடு இணைந்து, இறையன்பிற்குச் சான்றாக விளங்கி, திருஅவை கட்டப்பட்டிருக்கும் புனித பேதுரு என்ற பாறையை இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார், மியான்மார் கர்தினால் போ. (AsiaNews)

 

11 May 2021, 14:24