தேடுதல்

ஆண்டவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! (தி.பா. 8:9) ஆண்டவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! (தி.பா. 8:9) 

விவிலியத்தேடல்:திருப்பாடல் 8–இறை மாட்சியும் மானிட மேன்மையும் 3

கடவுளுக்குச் சற்றே சிறியவர்களாகப் படைக்கப்பட்டுள்ள மனிதர்களாகிய நாம், இந்த பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் காலங்களில், பணிவுடனும், பொறுப்புடனும் வாழப் பழகிக்கொள்வோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 8 – இறை மாட்சியும் மானிட மேன்மையும் 3

மே 12, இப்புதனன்று, தாதியரின் உலகநாளைச் சிறப்பிக்கிறோம். தாதியர் பணியை உருவாக்கி, அதை, மாண்புமிக்கதொரு துறையாக வடிவமைத்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence NIghtingale) அவர்களின் பிறந்த நாளான மே 12ம் தேதியை, தாதியரின் உலகநாளாகச் சிறப்பிக்கிறோம்.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி, கடந்த 18 மாதங்களாக, உலகின் அனைத்து நாடுகளிலும், கோவிட் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கப் போராடிவரும் மருத்துவர்கள், இன்னும் சிறப்பாக, தாதியர் ஆற்றிவரும் பணிகள் போற்றுதற்குரியன.

2020ம் ஆண்டு, மே 12ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாதியரின் உலகநாளையொட்டி அனுப்பியச் செய்தியில் பதிவுசெய்துள்ள சில கூற்றுகள், இன்றைய விவிலியத்தேடலைத் துவக்குவதற்கு உதவியாக உள்ளன: "கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடியால், தாதியர் ஆற்றிவரும் பணிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் கண்டுணர்ந்துள்ளோம்... மனித உயிர் பிறக்கும்போதும், இறக்கும்போதும், இடைப்பட்ட காலத்தில், உடல்நலம் குன்றியிருக்கும்போதும், தாதியரின் பணி அவசியமாகிறது... இவர்கள், உயிரைமட்டும் காப்பவர்கள் அல்ல, அத்துடன், நமக்கு, நம்பிக்கையையும், துணிவையும் வழங்குகின்றனர்" என்று, திருத்தந்தை, தன் செய்தியில் கூறியுள்ளார்.

மனித வாழ்வின் அடித்தளமாக விளங்கும் உயிர், அந்த உயிரைக் காக்கும் நம்பிக்கை ஆகியவற்றை, மருத்துவப் பணியாளர்கள், வழங்கவும் முடியும், நீக்கவும் முடியும். சென்ற ஆண்டு, ஏப்ரல், மே மாதங்களில், கோவிட்-19 பெருந்தொற்று, இத்தாலியின் பல நகரங்களில் சூறாவளியாக வீசிக்கொண்டிருந்த வேளையில், மருத்துவர்கள் பலர், யாருடைய உயிரைக் காப்பது, யாருடைய உயிரை, காப்பாற்றாமல் விட்டுவிடுவது என்ற முடிவை, வயதின் அடிப்படையில் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாண்டு, ஏப்ரல், மே மாதங்களில், இந்தியாவில், அத்தகைய ஒரு சூழல் உருவாகியுள்ளது என்பதை நாம் அறிவோம்.

உயிரை உருவாக்கவும், அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் சக்தி பெற்றவர், இறைவன் ஒருவரே. ஒரு சில வேளைகளில், மருத்துவத் துறையினர், மனித உயிரைக் காக்கவும், நீக்கவும், தாங்கள் சக்தி பெற்றவர்கள்போல் உணர்வதற்கு வாய்ப்பு உண்டு. அந்த சக்தி, தங்கள் உரிமைச்சொத்து என்றும், அதை, தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம் என்றும், தவறாக எண்ணும்போது, மருத்துவர்கள், தங்களை, கடவுளுக்கு இணையாக, அல்லது, கடவுளாகவே கற்பனை செய்துகொள்ளும் பேராபத்து உண்டு.

மனிதர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுத்திறனைக்கொண்டு, எத்தனையோ அறிவியல் அற்புதங்களை ஆற்றிவருகின்றனர். மனிதரின் முயற்சிகள், இவ்வுலகையும் தாண்டி, விண்வெளியிலும் வெற்றிகள் கண்டுள்ளன. இச்சாதனைகள் அனைத்திற்கும் தாங்களே காரணம், என்ற எண்ணம் உருவாகும்போது, அவர்கள், தங்களையே கடவுளாக எண்ணிப்பார்க்கவோ, அல்லது, கடவுளை, தங்கள் போட்டியாக எண்ணிப்பார்க்கவோ வாய்ப்புண்டு. தொடக்கநூலில் கூறப்பட்டுள்ள 'பாபேல் கோபுரம்' கட்டப்பட்ட கதையில் (காண்க. தொ.நூ. 11:1-9) இத்தகைய ஒரு சூழல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடவுள் மனிதர்களை, தனக்கு 'சற்றே சிறியவர்'களாக உருவாக்கியுள்ளார் என்பதை, தாவீது, 8ம் திருப்பாடலில் நினைவுறுத்துகிறார். 'சற்றே சிறியவர்'கள் என்ற இந்த உண்மையை, மறக்கவும், மறுக்கவும் விரும்பும் மனிதர்கள், தங்களையே கடவுள்களாக மாற்றிக்கொள்கின்றனர். இதனால், மனித சமுதாயம், பல்வேறு துயரங்களை, வரலாற்றில் சந்தித்துள்ளது. இத்துயரங்களில் ஒன்றாக வெளிப்பட்ட ஒரு நுண்கிருமி, மனிதர்களாகிய நம்மை, கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக, மண்டியிட வைத்துள்ளது.

நாம் மண்டியிட்டிருப்பது, நாம், நமக்கென எழுப்பிய பீடங்களுக்கு முன் என்றால், நாம் உருவாக்கியுள்ள வேதனைகள் தொடரும். இதற்குப்பதிலாக, நாம் மண்டியிட்டிருப்பது, இறைவனின் சந்நிதி என்றால், அவரிடமிருந்து நமக்கு மீண்டும் சக்தி பிறக்கும். நாம் எழுந்து நிற்கவும், நம் உயர்ந்த நிலையை மீண்டும் அடையவும் முடியும்.

மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயர்நிலையைக் குறித்து, தாவீது, 8ம் திருப்பாடலில் அழகாக விளக்கிக் கூறியுள்ளார்:

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர். (திருப்பாடல் 8: 5-8)

நாம் இப்போது வாசித்த இந்த வரிகளில், மனிதர்களுக்கு முடிசூட்டுதல், படைத்தவற்றை ஆளுதல், படைப்பைக் கீழ்ப்படுத்துதல் என்ற உருவகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த உருவகங்கள், மனிதர்களுக்கும், ஏனைய படைப்பிற்கும் இடையே உள்ள உறவைக் குறித்து சிந்திக்க நம்மை அழைக்கின்றன.

மனிதர்கள், படைப்பின்மீது ஆட்சிசெலுத்த அழைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்து, யூத, பாரம்பரியத்திலும், கிறிஸ்தவ பாரம்பரியத்திலும், நிலவுகிறது. இதற்கு, அடித்தளமாக, தொடக்க நூலில் இறைவன் முதல் பெற்றோருக்கு வழங்கிய ஆசீர் அமைந்துள்ளது.

  • தொடக்க நூல் 1:26-28

அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.

தொடக்க நூலில் கூறப்பட்டுள்ள இச்சொற்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலைகொள்ளச் செய்துள்ளன. இறைவன் கூறியதாக ஒலிக்கும் இந்த ஆசி மொழிகள், மனிதர்கள், படைப்பை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி பயன்படுத்துவதற்கு, உத்தரவு வழங்குவதுபோல் தெரிகிறது. மண்ணுலகை நிரப்பவும், அதனை தங்கள் ஆற்றலுக்கு உட்படுத்தவும், நீர், நிலம், வானம் அனைத்திலும் உள்ள உயிர்களை ஆளவும், மனிதர்களை இறைவன் பணித்தார் என்ற இந்த எண்ணத்தை, 8ம் திருப்பாடலும் எதிரொலிக்கிறது.

தொடக்க நூலின் இப்பகுதியை சிறிது ஆழமாக ஆய்வுசெய்தால், இப்பகுதியின் துவக்கத்தில், இறைவன், மனிதர்களை தன் உருவிலும், சாயலிலும் படைத்தார் என்பதைக் காண்கிறோம். இறைவனின் உருவையும், சாயலையும் தாங்கியுள்ள மனிதர்கள், அவரைப்போல், இவ்வுலகை ஆள்வதற்கும் அழைப்பு பெற்றுள்ளனர் என்பதை உணரவேண்டும்.

இறைவன், இவ்வுலகின் மீதும், படைப்பு அனைத்தின் மீதும் முழுமையான அதிகாரம் கொண்டுள்ளார் என்பதை யூத, கிறிஸ்தவ பாரம்பரியங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த முழுமையான அதிகாரத்தை இறைவன் எவ்வழியில் பயன்படுத்துகிறார் என்பதைக் காணும்போது, படைக்கப்பட்ட ஒவ்வொன்றும், அதற்கென வகுக்கப்பட்ட முடிவை அடைவதற்கு உதவும்வண்ணம், இறைவன் அவற்றின்மீது ஆட்சி செலுத்துகிறார் என்ற உண்மையை உணர்கிறோம். இறைவனின் ஆட்சி, படைப்பை அடக்கி ஒடுக்கும் அதிகாரம் அல்ல, மாறாக, படைப்பு அனைத்தையும் வளர்த்தெடுக்கும் அதிகாரம். ஆனால், படைப்புக்களை ஆள்வதற்குரிய பொறுப்பை இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட மனிதர்களோ, தங்கள் வாழ்வையும், சுகத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி, படைப்பு அனைத்தையும் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தவறாக எண்ணி வருகின்றனர்.

மனிதர்களின் இந்த சுயநல எண்ணம் தவறானது என்ற பாடத்தை, சுற்றுச்சூழல் சீரழிவும், தற்போது நம்மை வதைத்துவரும் நோய் கிருமியும் நமக்குச் சொல்லித் தருகின்றன. 8ம் திருப்பாடலின் ஆசிரியரும், இத்திருப்பாடலின் இறுதி வரிகளில், அழகியதொரு பாடத்தை நமக்குச் சொல்லித்தருகிறார்.

இறைவனுக்கு சற்றே சிறியவர்களாக, அதே வேளையில் படைப்பனைத்தின் சிகரமாக மனிதர்கள் படைக்கப்பட்டனர் என்பதை கூறும் தாவீது, இறுதி வரிகளில் மீண்டும் இறைவனை நோக்கி தன் கண்களைத் திருப்புகிறார். இத்திருப்பாடலின் முதல் வரியில் இறைவனின் பெயரை போற்றிப் புகழ்ந்ததுபோல், திருப்பாடலின் முடிவிலும் அதே வரிகளை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார். மனிதர்களை இவ்வளவு உயர்வாக படைத்த இறைவனுக்கு புகழ் உரித்தாகட்டும் என்பதை மீண்டும் நினைவுறுத்தி, தாவீது இத்திருப்பாடலை நிறைவு செய்துள்ளார்: ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! (தி.பா. 8:9)

கடவுளின் உருவிலும், சாயலிலும், படைக்கப்பட்டுள்ள மனிதர்களாகிய நாம், கடவுளுக்குச் சற்றே சிறியவர்களாகப் படைக்கப்பட்டுள்ள மனிதர்களாகிய நாம், இந்த பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் காலங்களில், பணிவுடனும், பொறுப்புடனும் வாழப் பழகிக்கொள்வோம். படைப்பு அனைத்திற்கும் உரிமையாளர்கள் நாம் அல்ல, மாறாக, படைப்பைப் பாதுகாக்கும் பணியாளர்கள் என்ற எண்ணத்துடன் வாழ இறைவன் நமக்கு உதவட்டும் என்ற வேண்டுதலுடன்,  இத்திருப்பாடலில் நம் தேடலை நிறைவு செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2021, 14:57