தேடுதல்

Vatican News
புது டில்லியின் மருத்துவமனையில் கொரோனா பிரிவு புது டில்லியின் மருத்துவமனையில் கொரோனா பிரிவு  (ANSA)

கோவா, கர்நாடகா ஆந்திரா – கத்தோலிக்கரின் கொரோனா பணி

வானகத்தந்தையின் பேரன்பிலும், பராமரிப்பிலும் நம்பிக்கை கொண்டு கோவிட்-19 பெருந்தொற்றின் வீரியத் தாக்குதலை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் - டில்லி பேராயர் அனில் கூட்டோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வானகத்தந்தையின் பேரன்பிலும், பராமரிப்பிலும் நம்பிக்கை கொண்டு கோவிட்-19  பெருந்தொற்றின் வீரியத் தாக்குதலை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என்று, டில்லி உயர் மறைமாவட்ட பேராயர் அனில் கூட்டோ அவர்கள் பீதேஸ் செய்திக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் நெருக்கடியை சரிவரப் புரிந்துகொள்ளாத அரசு அதிகாரிகளின் அக்கறையற்ற செயல்பாடுகளாலும், தற்போதைய பெரும் தாக்குதலுக்கு ஏற்ற முறையில் தயாரிப்புகளை செய்யாததாலும், இவ்வளவு இழப்புக்களையும், துன்பங்களையும் சந்தித்துவருகிறோம் என்று பேராயர் கூட்டோ அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் உருவாகியிருக்கும் பெரும் நெருக்கடியைக் களைவதற்கு, கோவா, கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டுவரும் முயற்சிகளை பீதேஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.

கோவா-டாமன் உயர் மறைமாவட்டத்தில், கத்தோலிக்க நிறுவனங்கள் பலவும், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும், ஒய்வுபெற்ற மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட, பலர், இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பேராயர் Filippe Neri Ferrao அவர்கள் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில், பல்வேறு துறவுசபைகள், கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களோடு இணைந்து, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, ஒவ்வொரு நாளும், இலவச உணவு வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத் எவஞ்செலிக்கல் கிறிஸ்தவ சபை, 'கல்வாரி ஆலயம்' என்ற பெயரில், 300 படுக்கை வசதி கொண்ட ஒரு மையத்தில், பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வறியோருக்கு இலவச மருத்துவ உதவிகளும், உணவும் வழங்கி வருகிறது. (Fides)

12 May 2021, 17:16