தேடுதல்

பாகிஸ்தான் கத்தோலிக்க ஆலயத்தில் பக்தர் வேண்டுதல் பாகிஸ்தான் கத்தோலிக்க ஆலயத்தில் பக்தர் வேண்டுதல்  (AFP or licensors)

அருள்பணியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக...

கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகெங்கும் சூழ்ந்துள்ள இருளில், மறைக்கல்வி ஆசிரியர்கள், பாகிஸ்தான் தலத்திருஅவைக்கு ஒளியைக் கொணர்ந்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நற்செய்தியை எடுத்துரைப்பதும், மறைக்கல்வி வழங்குவதும் மட்டுமே நமது பணி. மனமாற்றத்தை உருவாக்குவது இறைவனின் அருள் என்று பாகிஸ்தானின், இலாகூர் உயர்மறைமாவட்ட பேராயர், செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள் கூறினார்.

பைசலாபாத் நகரில் அமைந்துள்ள புனித ஆல்பர்ட் மறைக்கல்வி ஆசிரியர் மையத்தில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று இலாகூர் மறைமாவட்டத்தில் பணியாற்ற வந்திருக்கும் மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கிய உரையில் பேராயர் ஷா அவர்கள் இவ்வாறு கூறினார்.

தன் சுய விருப்பத்தால் என்று பொருள்படும் Motu Proprio வடிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 11 இச்செவ்வாயன்று வெளியிட்ட “Antiquum ministerium” என்ற திருத்தூது மடலைக் குறித்து, பீதேஸ் செய்தியிடம் கருத்து தெரிவித்த பேராயர் ஷா அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகெங்கும் சூழ்ந்துள்ள இருளில், மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று திரும்பியிருக்கும் மறைக்கல்வி ஆசிரியர்கள், பாகிஸ்தான் தலத்திருஅவைக்கு ஒளியைக் கொணர்ந்துள்ளனர் என்று கூறினார்.

1952ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புனித ஆல்பர்ட் மறைக்கல்வி ஆசிரியர் மையம், கடந்த 60 ஆண்டுகளாக 1000த்திற்கும் அதிகமான மறைக்கல்வி ஆசிரியர்களை உருவாக்கியுள்ளது என்றும், இந்த மையத்தில் மூன்றாண்டுகள் பயின்ற ஆசிரியர்களுக்கு, அவ்வப்போது, கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன என்றும் பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

பாகிஸ்தானைப் பொருத்தமட்டில், மறைக்கல்வி ஆசிரியர்கள், அருள்பணியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமைகின்றனர் என்றும், மக்களின் வாழ்வில் பல்வேறு நிலைகளில் அவர்கள் பெரும் அருளடையாளங்களுக்கு தயாரிப்பது, மறைக்கல்வி ஆசிரியர்களின் முக்கியப் பணியாக அமைந்துள்ளது என்றும், ஹைதராபாத் உயர் மறைமாவட்ட மறைக்கல்விப்பணி மையத்தின் இயக்குனர், அருள்பணி James Castellino அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார். (Fides)

12 May 2021, 17:23