தேடுதல்

Vatican News
புது டில்லியில் ஆக்சிஜன் கலன்களை நிரப்புவதற்காக காத்திருப்போர் புது டில்லியில் ஆக்சிஜன் கலன்களை நிரப்புவதற்காக காத்திருப்போர்  (AFP or licensors)

தேர்தல் கூட்டங்களால் உருவான, கோவிட் பெரும் துன்பம்

கோவிட்-19 பெருந்தொற்று பரவாமல் இருக்க விதிக்கப்பட்ட தடைகளை மக்கள் மதிக்காமல் போனதால், அதன் விளைவை, ஆயிரமாயிரம் உயிரிழப்புகளாக கண்டுவருகிறோம் - டில்லி பேராயர், அனில் கூட்டோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று பரவாமல் இருக்க விதிக்கப்பட்ட தடைகளை, மக்கள் மதிக்காமல் போனதால், அதன் விளைவை, ஆயிரமாயிரம் உயிரிழப்புகளாக கண்டுவருகிறோம் என்று, டில்லி உயர்மறைமாவட்ட பேராயர், அனில் கூட்டோ அவர்கள் கூறியுள்ளார்.

'தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவி' என்று பொருள்படும் Aid to the Church in Need (ACN) அமைப்பிடம் பேசிய பேராயர் கூட்டோ அவர்கள், கடந்த சில மாதங்களாக நடைபெற்ற தேர்தல் கூட்டங்கள், இந்த பெரும் துன்பத்தை இந்திய சமுதாயத்தின் மீது சுமத்தியுள்ளது என்று கூறினார்.

இந்தியாவின் மிகப்பெரும் தலைவர்கள், ஊர் ஊராகச் சென்று, தேர்தல் கூட்டங்களை நடத்தியதால், மக்கள் கூட்டம் கூடுதலாக இருந்தது என்றும், அவர்கள் யாரும் எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவில்லை என்றும், பேராயர் கூட்டோ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே வண்ணம், ஏப்ரல் மாதத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹரித்வார் புண்ணியத் தலத்தில் நடைபெற்ற கும்ப மேளா என்ற விழாவிலும், ஐந்து கோடிக்கும் அதிகமான பக்தர்கள், எவ்விதப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் கலந்துகொண்டது, இன்னும் பெரும் ஆபத்துக்களைக் கொணர்ந்துள்ளது என்று, பேராயர் கூட்டோ அவர்கள் கூறியுள்ளார்.

கத்தோலிக்க, மற்றும் கிறிஸ்தவ மருத்துவமனைகள், தங்களால் இயன்ற அளவு உதவிகளைச் செய்துவருகிறது என்றாலும், இவ்வள்வு பிரம்மாண்டமான நெருக்கடி நேரத்தில், மருத்துவப் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் எனபதை, பேராயர் கூட்டோ அவர்கள், வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

ACN அமைப்பு, இந்தியாவில், கோவிட்-19 நெருக்கடியைக் களையும் 27 திட்டங்களுக்கு, 3,20,000 பவுண்டுகள், அதாவது, 3,48,80,000 ரூபாய்கள், அவசர உதவியாக வழங்கியுள்ளது. (ICN)

05 May 2021, 16:12