தேடுதல்

2012ம் ஆண்டு, மிலான் நகரில், குடும்பங்கள் உலக மாநாட்டில் பங்கேற்ற கணவன்-மனைவி மற்றும் குழந்தைகள் 2012ம் ஆண்டு, மிலான் நகரில், குடும்பங்கள் உலக மாநாட்டில் பங்கேற்ற கணவன்-மனைவி மற்றும் குழந்தைகள் 

மகிழ்வின் மந்திரம் : 'தாம்பத்திய அன்பில் வளர்தல்'

திருமண அருளடையாளத்தின் வழியே, கணவன்-மனைவி என்ற இருவரிடையே நிலவும், புனிதமாக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட, மற்றும் ஒளியேற்றப்பட்ட அன்பு, தாம்பத்திய அன்பு.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 4ம் பிரிவை, 'திருமணத்தில் அன்பு', அல்லது, 'திருமண வாழ்வில் அன்பு' என்ற தலைப்பில், வழங்கியுள்ளார். இப்பிரிவில், திருத்தூதரான புனித பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (13ம் பிரிவு) பதிவு செய்துள்ள 'அன்பின் பாடல்' என்ற பகுதியை அடித்தளமாகக் கொண்டு, 91 முதல் 119 முடிய எண்கள் கொண்ட 29 பத்திகளில், அன்பின் பல்வேறு பண்புகளைக் குறித்து, தன் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை. இந்த எண்ணங்களைத் தொடர்ந்துவரும் 120,121,122 ஆகிய மூன்று பத்திகளில், 'தாம்பத்திய அன்பில் வளர்தல்' என்ற தலைப்பில், திருத்தந்தை வழங்கியுள்ள ஒருசில கருத்துக்கள் இதோ:

"புனித பவுலின் 'அன்பின் பாடலில்' நாம் மேற்கொண்ட சிந்தனைகள், தாம்பத்திய அன்பைக்குறித்து சிந்திக்க நம்மை தயார் செய்துள்ளன. திருமண அருளடையாளத்தின் வழியே, கணவன்-மனைவி என்ற இருவரிடையே நிலவும், புனிதமாக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட, மற்றும் ஒளியேற்றப்பட்ட அன்பு,  தாம்பத்திய அன்பு. தம்பதியரிடையே, துவக்கத்தில் உருவாகும் உணர்ச்சிகளும், ஆர்வமும் தணிந்த பின்னரும் தொடரும், ஆன்மீக, தியாகம் நிறைந்த அன்பு இது. இந்த அன்பே, திருமண வாழ்வின் கடமைகளை நிறைவேற்ற உதவுகிறது என்று திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் கூறினார். (120)

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் திருமண அருளடையாளத்தைக் கொண்டாடும் வேளையில், இறைவன் தன் அன்பின் பிம்பத்தை அங்கு பதிக்கிறார். தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆள்களிடையே நிலவும் ஒன்றிப்பை, கடவுள், திருமணத்தில் இணையும் இருவரிடையே உருவாகும் ஒன்றிப்பில் நிறுவுகிறார். இனி, தம்பதியர், இருவர் அல்ல, ஒருவரே. கிறிஸ்து, தாய் திருஅவையை அன்புசெய்து, அவருக்காக, தன் உயிரை, தொடர்ந்து வழங்குவதுபோல், கணவன்-மனைவி ஒன்றிப்பு, குடும்ப வாழ்வின் ஒவ்வொருநாள் நிகழ்வுகளிலும் வெளிப்படுகிறது. (121)

இருப்பினும், கிறிஸ்துவுக்கும், திருஅவைக்கும் இடையே நிலவும் ஒன்றிப்பை, கணவன்-மனைவி உறவு அப்படியே பிரதிபலிக்கவேண்டும் என்ற பெரும் சுமையை, அவ்விருவர் மீது சுமத்தத் தேவையில்லை. கணவன் மனைவியிடையே நிலவும் ஒன்றிப்பு, படிப்படியாக வளர்ந்து, கடவுளின் கொடைகளை ஒருங்கிணைக்கிறது." (122) (அன்பின் மகிழ்வு 120-122)

18 May 2021, 13:57