தேடுதல்

Vatican News
அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் அன்பிற்கு எடுத்துக்காட்டான அன்னை மரியா அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் அன்பிற்கு எடுத்துக்காட்டான அன்னை மரியா 

மகிழ்வின் மந்திரம் : நாவைக் கட்டுப்படுத்தும் அன்பு

சபிப்பதற்கு நாவு பயன்படுத்தப்படக்கூடும் என்றாலும், அன்பு, அடுத்தவரின் நற்பெயரை, ஏன், பகைவரின் நற்பெயரையும் போற்றி வளர்க்கிறது. (அன்பின் மகிழ்வு 112)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 13ம் பிரிவில், திருத்தூதர் பவுல், அன்பின் பல்வேறு பரிமாணங்களைத் தொகுத்து வழங்கியுள்ள அன்பின் கவிதை (1 கொரி. 13:1-13) பகுதியை அடித்தளமாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் நான்காம் பிரிவை உருவாக்கியுள்ளார்.

குறிப்பாக, இக்கவிதையின் நான்கு இறைவாக்கியங்களில் (1 கொரி. 13:4-7) திருத்தூதர் பவுல் குறிப்பிட்டுள்ள பண்புகளை, பதிமூன்று பகுதிகளாகப் பிரித்து, திருத்தந்தை தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார். இவற்றில், 'அனைத்து' என்ற சொல்லைப் பயன்படுத்தி, புனித பவுல் கூறும் நான்கு பண்புகளை திருத்தந்தை தன் மடலில் விளக்கிக் கூறியுள்ளார். இந்நான்கு பண்புகளில், "அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்" என்ற பண்பைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இதோ:

"பவுல் வழங்கியுள்ள பட்டியலில், 'அனைத்து' என்ற சொல்லை நான்கு முறை பயன்படுத்தியுள்ளார். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். தன்னை அச்சுறுத்தும் அனைத்தையும் சந்திக்கத் தயாராக இருக்கும் அன்பின் சக்தியை இங்கு தெளிவாகக் காண்கிறோம். (111)

முதலில், பவுல், 'அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்' என்று கூறுகிறார். இக்கூற்று, தீமையைச் சகித்துக்கொள்ளும், என்ற நிலையைத் தாண்டி, நாவை எவ்விதம் பயன்படுத்துகிறோம் என்பதைப்பற்றி எடுத்துரைக்கிறது. பிறரைக்குறித்து கண்டனத்தீர்ப்பை வழங்குவதிலிருந்து நம்மைத் தடுக்கும் குணம் இது. "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்" (லூக்கா 6:37). நமது நாவை வழக்கமாகப் பயன்படுத்தும் முறைக்கு எதிராகச் செல்லும் போக்கு இது. "சகோதர சகோதரிகளே, உங்களுள் ஒருவர் மற்றவரைப் பழித்துரைக்க வேண்டாம்" (யாக்கோபு 4:11) என்று இறைவார்த்தை சொல்கிறது. அடுத்தவரைப் பழித்துரைப்பது, அவர் அடையும் துன்பங்களைப்பற்றி கவலைப்படாமல், தன்னுடைய மேன்மையை பறைசாற்றும் முயற்சியாகும்.

பிறரைக்குறித்து அவதூறாகப் பேசுவது பாவம்; அடுத்தவரின் நற்பெயரைக் கெடுத்து, அதை மீண்டும் சீரமைக்க முடியாதவண்ணம் அவருக்குத் தீங்கு விளைவிப்பது, கடவுளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றம். எனவேதான், "நாவு, நெறிகெட்ட உலகின் உரு. இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது" (யாக். 3:6) என்றும், "நாவு, சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது" (யாக். 3:8) என்றும் இறைவார்த்தை தெளிவாகக் கூறுகிறது. சபிப்பதற்கு நாவு பயன்படுத்தப்படக்கூடும் என்றாலும், அன்பு, அடுத்தவரின் நற்பெயரை, ஏன், பகைவரின் நற்பெயரையும் போற்றி வளர்க்கிறது. கடவுளின் அன்பை உயர்த்திப்பிடிக்க விழைவோர், அன்பின் இந்த குறிப்பிட்டத் தேவையை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது." (அன்பின் மகிழ்வு 111,112)

11 May 2021, 14:50