தேடுதல்

மன்னிப்பை வழங்குவோம் மன்னிப்பை வழங்குவோம் 

மகிழ்வின் மந்திரம் : அன்பு, மன்னிக்கும் மனமுடையது

கடவுளின் அன்பு முன்நிபந்தனையற்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்வோமானால், அந்த எல்லைகளற்ற அன்பை, நாமும், பிறருக்கும் வழங்கி, அவர்கள் நமக்கு எதிராகச் செய்த குற்றங்களை மன்னிக்க முன்வருவோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித பவுலடியார் அன்பு குறித்து விவரித்துள்ள (1கொரி.13:1-13) பண்புகளில், “அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்”, என்ற பண்பைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் 105 முதல் 108 வரையுள்ள பத்திகளில் கூறியுள்ளார். இவற்றில், 107 மற்றும் 108ம் பத்திகளில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ:

பிறரை மன்னிக்க முடிவது என்பது, நம்மையே நாம் புரிந்துகொள்வதையும், மன்னிப்பதையும் கொண்ட விடுதலை உணர்வை உள்ளடக்கியது. நம் தவறுகளோ, அல்லது நம் அன்புக்குரியவர்கள் நம்மைக் குறித்து எடுத்துரைக்கும் குறைகளோ, நம் சுய மதிப்பீட்டை இழக்க காரணமாகலாம். நாம் பிறரிலிருந்து விலகி, நம்மிடையே நிலவும் உறவில் பாசத்தை அகற்றி, அச்சத்துடன் வாழும் நிலை உருவாகிறது. மற்றவர்களை குறைகூறுவது, நமக்கு பொய்யான பாதுகாப்பைத் தருகிறது. நாம், நம்மை ஏற்றுக்கொண்டு, நம் குறைபாடுகளுடன் வாழவும், நம்மையே நாம் மன்னிக்கவும், அதன் வழி மற்றவர்களை மன்னிக்கும் மனநிலையைக் கொள்ளவும் உதவும் வகையில், நம் கடந்தகால வாழ்வைக் குறித்து சிந்தித்து, செபிக்க கற்றுக்கொள்ள வேண்டும். (107)

இவையெல்லாம், நாம் நம்முடைய சிறப்புத் தகுதியினால் அல்ல, மாறாக, இறைவனின் அருளால் மன்னிக்கப்பட்டுள்ள அனுபவத்தைக் கொண்டுள்ளோம் என்பதை உள்ளடக்கியது. நாம் அன்புகூர முயல்வதற்கு முன்னரே, கதவுகளை திறக்கும், ஆதரிக்கும், மற்றும் ஊக்கமளிக்கும் ஓர் அன்பு குறித்து நாம் அறிந்துள்ளோம். கடவுளின் அன்பு முன்நிபந்தனையற்றது, அது வாங்கவோ, விற்கவோ முடியாதது என்பதை நாம் ஏற்றுக்கொள்வோமானால், அந்த எல்லைகளற்ற அன்பை, நாமும், பிறருக்கு வழங்கி, அவர்கள், நமக்கு எதிராகச் செய்த குற்றங்களை மன்னிக்க முன்வருவோம். இல்லையெனில், நம் குடும்ப வாழ்வு, புரிதல், ஆதரவு, மற்றும் ஊக்கத்தின் இடமாக இல்லாமல், தொடர் பதட்ட நிலைகள், மற்றும் குறைகூறலின் இடமாக மாறிவிடும். (அன்பின் மகிழ்வு 107, 108)

07 May 2021, 15:09