தேடுதல்

கை தூக்கிவிடும் கடவுளின் அன்பு கை தூக்கிவிடும் கடவுளின் அன்பு 

மகிழ்வின் மந்திரம் : அன்பு அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்

நாம் விரும்புவதுபோல் மாற்றங்கள் எப்போதும் இடம்பெறுவதில்லையெனினும், இறைவன், கோணலானவைகளை நேராக்குவார், இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து நல்லவைகளை கொணர்வார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலில், தூய பவுலடிகளார் அன்பு குறித்து விவரித்துள்ள (1கொரி.13:1-13) 13 பண்புகளில், “அன்பு அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்”, என்பது பற்றி, அம்மடலின் 116, மற்றும் 117ம் பத்திகளில் கூறியுள்ளவை இதோ:

வருங்காலத்தைப்பற்றி விரக்தி அடைவதில்லை, அன்பு. இந்தக் கூற்று, ஒருவரின் எதிர்நோக்கு குறித்துப் பேசுகின்றது. எவராலும் மாறவும், முதிர்ச்சியடையவும்,  எதிர்பாராத அழகையும், மறைந்திருக்கும் ஆற்றல் வளத்தையும் வெளிப்படுத்தவும் முடியும் என்பதில் இது நம்பிக்கைக் கொண்டுள்ளது. இவ்வுலக வாழ்வில் அனைத்தும் மாறிவிடும் என்பதை இது குறிப்பிடவில்லை. நாம் விரும்புவதுபோல் மாற்றங்கள் எப்போதும் இடம்பெறுவதில்லையெனினும், இறைவன், கோணலானவைகளை நேராக்குவார், இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து நல்லவைகளை கொணர்வார்  என்பதை நாம் உணர்ந்துகொள்வதை உள்ளடக்கியது இது. (அன்பின் மகிழ்வு 116)

இங்கு எதிர்நோக்கு என்பது, அதன் இயல்பு நிலைக்கு முழுமையாக திரும்புகிறது, ஏனெனில், மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டு என்ற நிச்சயத்தை அது ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு மனிதரும் தங்கள் தோல்விகளுடன், வானுலகில் முழுநிறை வாழ்வுக்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு கிறிஸ்துவின் உயிர்ப்பினால் முழுமையாக மாற்றம் பெறும்போது, அனைத்து பலவீனங்களும், இருளான நேரங்களும், குறைபாடுகளும் அகன்றுவிடும். அப்போது, மனிதரின் உண்மை இயல்பு நிலை அதன் அனைத்து நன்மைத்தனங்களிலும், அழகிலும் ஒளிர்விடும்.  இந்த உண்மை குறித்த உள்ளுணர்வு, தீமைகள் நிரம்பியுள்ள தற்போதையச் சுழல்களில், இயல்புநிலைகளையும் தாண்டிய ஒரு கண்ணோட்டத்தில், நம்பிக்கையின் ஒளியில் ஒவ்வொருவரையும் பார்க்கவும், நம் கண்களுக்கு இப்போதே தெரியாவிடினும், விண்ணரசில் பெறவுள்ள முழுமைக்காக காத்திருப்பது பற்றி உணர்ந்துகொள்ளவும் நமக்கு உதவுகிறது. (அன்பின் மகிழ்வு 117).

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2021, 16:02