தேடுதல்

Vatican News
இந்தியாவில் திருமணம் இந்தியாவில் திருமணம் 

மகிழ்வின் மந்திரம்:திருமண அன்பு, முழு மனிதரின் நலனை உள்ளடக்கியது

உள்ளத்து உணர்வுகளுக்கும், உடல்சார்ந்த செயல்களுக்கும் ஒரு தனிப்பட்ட மாண்பை அளிக்கும் திறன், திருமண அன்புக்கு உள்ளது (அன்பின் மகிழ்வு 142)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருமணம் மற்றும், குடும்ப வாழ்வின் உயரிய பண்புகள், இக்கால கட்டுப்பாடற்ற கலாச்சார வாழ்வுச்சூழலில், பல்வேறு நாடுகளில் பின்னடைவைக் கண்டுவரும்வேளை, அப்பண்புகளுக்கு மீட்டுரு கொடுக்கும் முறையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடல் அமைந்துள்ளது. இந்த மடலில்,  'திருமணத்தில் அன்பு' என்ற 4ம் பிரிவின், 142ம் பத்தியில், “உணர்ச்சிபொங்கும் அன்பு” (Passionate love) என்ற தலைப்பில், திருத்தந்தை தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்... 

திருமண அன்பு குறித்து இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் இவ்வாறு போதிக்கிறது. “திருமண அன்பு, முழு மனிதரின் நலனை உள்ளடக்கியது. உள்ளத்து உணர்வுகளுக்கும், உடல்சார்ந்த செயல்களுக்கும் ஒரு தனிப்பட்ட மாண்பை அளிக்கும் திறன், இவ்வன்புக்கு உண்டு. அதோடு, திருமண நட்பின் கூறுகளாகவும், தனிப்பட்ட அடையாளங்களாகவும் மேன்மைப்படுத்தவும், இவ்வன்பால் முடிகின்றது”. இக்காரணத்தால், தம்பதியரிடையே, பாசமிக்க, அல்லது, தாம்பத்திய உறவில் வெளிப்படுத்தப்படும் அன்பு இல்லாதபோது, திருமண அன்பு, மனித இதயம், கடவுளோடு, ஒன்றித்திருப்பதைக் குறித்துக் காட்ட போதுமானதாக, இல்லை. இல்லற வாழ்வில் தம்பதியர்க்கிடையே நிலவும் அன்பு, தெய்வீக அன்பு. அது, விண்ணக அன்பைப் போன்று உன்னதமானது. அது, நண்பர்களுக்கிடையே இருக்கும் உறவு, பெற்றோர், பிள்ளைகளுக்கிடையே இருக்கும் உறவு, மற்றும், சாதிக்கவேண்டும் என்ற வேட்கை, இவற்றையெல்லாம்விட உயர்ந்தது. இதனை இறை ஒன்றிப்பு நெறியாளர்கள் உறுதி செய்திருக்கின்றனர். எனவே திருமணம் பற்றிப் பேசும்போது, பாலுணர்வு, மற்றும், உணர்ச்சி பற்றிப் பேசுவதற்கு நாம் தயங்கக் கூடாது (அன்பின் மகிழ்வு 142)

31 May 2021, 14:25