தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வி உரையில் புதுமணத் தம்பதியர் புதன் மறைக்கல்வி உரையில் புதுமணத் தம்பதியர்   (Vatican Media)

மகிழ்வின் மந்திரம்: அன்புக்காக திருமணம்

தம்பதியர், ஒருவரையொருவர் உண்மையிலே அன்புகூர்ந்தால், அவர்கள் அந்த அன்பை ஒருவர் ஒருவருக்கு இயல்பாகவே வெளிப்படுத்துவார்கள். (அன்பின் மகிழ்வு 132)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'திருமணத்தில் அன்பு' என்ற 4ம் பிரிவில், அன்புக்காக திருமணம் புரிதல் என்ற தலைப்பில் (அன்பின் மகிழ்வு 131,132) கூறியுள்ள கருத்துக்கள்... 

இளையோர், திருமணத்தில், தங்களின் அன்பு வெளிப்படுத்தப்படுவதைக் காணும்போது, எதுவும் அவர்களை இடருக்கு உள்ளாக்காது. திருமணத்தின்போது, சமுதாயம், காணக்கூடிய முறையில், சில அர்ப்பணங்களை மேற்கொள்வதன் வழியாக, அந்த வாழ்வைத் தேர்ந்துகொள்வது, உண்மையிலேயே, எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்பது வெளிப்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு மனிதரும், தங்களது குடும்பத்தில் அடைந்த இளம்பருவ சுதந்திரத்தை ஒதுக்குவதற்கு உறுதியான தீர்மானம் எடுப்பதையும், ஒருவர் மற்றவருக்கு உரியவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது. மேலும், இன்னொரு மனிதரோடு உறுதியான பிணைப்பைக் கட்டியெழுப்பவும், அவருக்கு புதிய பொறுப்புணர்வை ஏற்பதற்குமென, தான் வளர்ந்த குடும்பத்தின் பாதுகாப்புச் சூழலை உண்மையிலேயே விட்டுவிடுவதை வெளிப்படுத்துவதற்கும், திருமணம், ஒரு கருவியாக உள்ளது. திருமணம், ஒரு சமுதாய நிறுவனம் என்ற விதத்தில், அது, சமுதாயத்தின் நன்மைக்காக, அன்பிலும், ஒருவர் ஒருவருக்கு தன்னை அர்ப்பணித்து வாழ்வதிலும், மிக ஆழமாக வளருவதற்கு பாதுகாப்பளிக்கிறது. திருமணம், எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் அன்பில் பிறந்த, சில கடமைகளையும் உள்ளடக்கியது. (அன்பின் மகிழ்வு 131). அந்த முறையில் திருமணத்தைத் தேர்ந்துகொள்ள முன்வருவது, அவ்வாழ்வில் எது நேரிடினும், அதனை உண்மை, மற்றும், உறுதியான தீர்மானத்தோடு ஏற்பதை வெளிப்படுத்துகிறது. திருமணத்தில், ஒருவர் மற்றவருக்கு மட்டும் எனவும், அந்த அர்ப்பணம் என்றென்றும் எனவும் கூறுவது, எப்போதும் துணிந்து அந்த வாழ்வைத் தேர்ந்துகொள்வதை உள்ளடக்கியது. இத்தகைய அர்ப்பணத்தை மேற்கொள்ள விருப்பமின்றி இருப்பது, தன்னலமாகும். இது, அடுத்தவரின் உரிமைகளை ஏற்பதற்கும், அடுத்தவர், சமுதாயத்தில் வரையில்லா அன்பைப் பெற தகுதியுள்ளவராக, அவரை வெளிப்படுத்தவும் தவறுவதாக உள்ளது. தம்பதியர், ஒருவரையொருவர் உண்மையிலே அன்புகூர்ந்தால், அவர்கள் அந்த அன்பை ஒருவர் ஒருவருக்கு இயல்பாகவே வெளிப்படுத்துவார்கள். திருமண ஒப்பந்தத்தில், அனைத்து பொதுவான அர்ப்பணங்களோடு, மற்றவர்முன் அன்பு வெளிப்படுத்தப்படும்போது, அது ஒருவர் ஒருவரிடம் சுதந்திரமாகவும், கட்டுப்பாடுகள் இன்றியும், அர்ப்பணிப்பதை குறித்துக்காட்டுகின்றது. இந்த “அர்ப்பணம்”, திருமண வாழ்வில், இன்னல்கள் அல்லது, புதிய ஈர்ப்புகள்,  அல்லது, தன்னலப் போக்குகள் நேரிடும்போது, தம்பதியர், ஒருவர் ஒருவரை எப்போதும் நம்பமுடியும், அவர்கள் ஒருபோதும் கைவிடப்படமாட்டார்கள் என்பதை உணரச்செய்கின்றது (அன்பின் மகிழ்வு 132).

24 May 2021, 14:47