தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வி உரை (04112018) புதன் மறைக்கல்வி உரை (04112018)  (Vatican Media)

மகிழ்வின் மந்திரம்: திருமண வாழ்வில், நட்பின் மகிழ்வு

மற்றவரை அன்புகூர்தல் என்பது, அவரின் உள்மன அழகு பற்றிச் சிந்திப்பதையும், பாராட்டுவதையும் உள்ளடக்கியது (அன்பின் மகிழ்வு 127)

மேரி தெரேசா: வத்திக்கான் 

அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் நான்காம் பிரிவில், கணவர், மனைவியருக்கிடையே நிலவும் அன்பு பற்றி, தன் கருத்துக்களை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்வு, மற்றும், அழகு என்ற துணைதலைப்பின்கீழ், திருமணத்தில், அன்பின் மகிழ்வு, நட்பின் அன்பு, அன்பின் அழகுணர்வு அனுபவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை, அந்த மடலின் 126,127,128ம் பத்திகளில் விளக்கியுள்ளார்.

அன்பின் மகிழ்வு

திருமணத்தில், அன்பின் மகிழ்வு பேணி வளர்க்கப்படவேண்டும். அந்த அன்பில் புலன் இன்பத்தைத் தேடும்போது, அது, திருப்திப்படுத்தும் மற்ற காரியங்களை அடையவிடாமல் செய்துவிடுகின்றது. ஆனால், மகிழ்வு, உடல் அளவில் கிடைக்கும் இன்பம் குறைவுபடும் நேரங்களிலும்கூட, பல காரியங்களில் நிறைவைக்காண உதவுகிறது. “மகிழ்வு” என்ற சொல், இதயத்தில் அன்பு விரிவடைவதைக் குறிக்கின்றது என்று, புனித தாமஸ் அக்குய்னாஸ் அவர்கள் கூறியிருக்கிறார். திருமணம்சார்ந்த மகிழ்வை, துன்பங்கள் மத்தியிலும் அனுபவிக்கலாம். திருமணம் என்பது, இன்ப துன்ப நேரங்களின் கலவை , மற்றும், அவை அந்த வாழ்வில் தவிர்க்கமுடியாதவை என்று ஏற்றுக்கொள்வதை உள்ளடக்கியது. அதேநேரம், தம்பதியர் எப்போதும் நட்புறவுப் பாதையில் நடக்கவேண்டும். இது, ஒருவர், ஒருவர் மீது அக்கறை காட்ட, ஒருவர் ஒருவருக்கு உதவ, மற்றும், தொண்டுபுரியத் தூண்டும் (அன்பின் மகிழ்வு 126)

நட்பின் மகிழ்வு

நட்பின் மகிழ்வு, பிறரன்புக்கு அழைப்புவிடுக்கிறது. அந்த மகிழ்வு, தம்பதியர், ஒருவர் ஒருவரை, விலைமதிப்பற்றவர்கள் என்பதை உணர்ந்து, அதை உயர்வாக மதிக்கும்போது இடம்பெறுகின்றது. இத்தகைய மேலான எண்ணம், ஒருவரை தனக்கென வைத்துக்கொள்ளும் உணர்வின்றி, அந்த மனிதரின் புனிதத்துவத்தைப் போற்றுவதற்கு உதவுகின்றது. ஒரு நுகர்வு சமுதாயத்தில், அழகுணர்வு குறைகின்றது, மற்றும், அதனால் மகிழ்வு மறைகின்றது. அத்தகைய சமுதாயத்தில், மக்கள் உட்பட, அனைத்தும், விலைக்கு வாங்கப்படுகின்ற, அல்லது, தனக்குமட்டுமே சொந்தம் என வைத்துக்கொள்கின்ற, அல்லது, நுகர்வுப் பொருள்களாக மாறுகின்றன. ஆனால், கனிவு என்பது, தனக்கென வைத்துக்கொள்வதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் சுதந்திரமான அன்பின் அடையாளம். இது ஒரு மனிதரின் சுதந்திரத்தைப் பறித்துவிடாமல், அவரைப் புண்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல், அவரை மிகப்பெரிய அளவில் மதிக்கச் செய்கின்றது. மற்ற மனிதரை அன்புகூர்தல் என்பது, அந்த மனிதரின் உள்மன அழகு பற்றிச் சிந்திப்பதையும், பாராட்டுவதையும் உள்ளடக்கியது. இது, அந்த மனிதர் நம்மைச் சார்ந்தவராக இருக்க இயலாது என்ற நிலையிலும், உடலளவில் கவர்ச்சியாக அவர் இல்லாதிருக்கும்போதும்கூட, அவர்களின் நலனைத் தேடச்செய்கின்றது. ஏனெனில், ஒருவர், மற்றவரை மகிழ்ச்சிப்படுத்தும் அன்பு என்பது, அவர் அடுத்தவருக்கு, ஏதாவது ஒன்றை சுதந்திரமாகக் கொடுப்பதாகும். (அன்பின் மகிழ்வு 127)  

அன்பின் அழகுணர்வு அனுபவம்

அன்பின் அழகுணர்வு அனுபவம் என்பது, மற்ற மனிதர்கள், நோயுற்றவராக, வயதுமுதிர்ந்தவராக, அல்லது, உடலளவில் கவர்ச்சியற்றவராக இருக்கும்போதும்கூட, அவர்களில் இருக்கின்ற அழகை வியந்து, சிந்திப்பதில் வெளிப்படுத்தப்படுகின்றது. சிலநேரங்களில், தம்பதியரும், குழந்தைகளும், தாங்கள் கவனிக்கப்படவேண்டும் என்று எத்தனையோ காரியங்களைச் செய்கின்றனர். ஒருவர் மற்றவரை நோக்குவது நிறுத்தப்படும்போது, பல மனக்காயங்கள், மற்றும், பிரச்சனைகள் உருவாகின்றன. இது, குடும்பங்களில் நாம் அடிக்கடி கேட்கும் புகார்கள், மற்றும், மனக்குறைகளுக்குப் பின்னணியாக உள்ளது. எனது கணவர் என்னைப் பார்ப்பதில்லை என்று மனைவியும், எனது மனைவி பிள்ளைகளை மட்டுமே பார்க்கிறார் என்று கணவனும் புகார் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். “நான் பேசும்போது தயவுகூர்ந்து என்னைப் பார்” என்ற மனக்குமுறல்கள், கணவன் மற்றும், மனைவியரிடமிருந்து வருகின்றன. எனது வீட்டில் என்னைப் பற்றி கவலைப்பட யாருமில்லை, அவர்கள் என்னைப் பார்ப்பதுகூட கிடையாது என்ற புகார்களையும் கேட்டிருக்கிறோம். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு, ஒரு மனிதரின் விலைமதிப்பற்ற தன்மையைப் பார்ப்பதற்கு, நம் கண்களைத் திறக்கின்றது (அன்பின் மகிழ்வு 128)

20 May 2021, 14:33