தேடுதல்

Vatican News
குடும்ப அன்பு குடும்ப அன்பு  (©Africa Studio - stock.adobe.com)

மகிழ்வின் மந்திரம் : வாழ்நாள் முழுவதும் பகிர்தல்

வாழ்நாளின் இறுதிவரையான இணைப்பு குறித்த திருமண வாக்குறுதி, ஒரு சடங்குமுறையோ, பாரம்பரிய பழக்கவழக்கத்தின் தொடர்ச்சியோ அல்ல, மாறாக, மனிதனின் இயல்பு நிலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 4ம் பிரிவில், 'திருமணத்தில் அன்பு' என்ற தலைப்பில், முதலில் அன்பின் பண்புகள் குறித்து விளக்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர், தாம்பத்திய அன்பில் வளர்தல், என்பது குறித்து எடுத்துரைத்தபின், அதே அன்பை, வாழ்வு முழுவதும் பகிர்தல் குறித்து எடுத்துரைப்பவைகள் இதோ:

கடவுளுடன் நம்மை இணைக்கும் அன்பிற்குப்பின், இல்லற அன்பு என்பது, நட்பின் மிகச் சிறந்த வடிவமாகிறது. அடுத்திருப்பவரின் நலன் குறித்த அக்கறை, ஒருவருக்கொருவர் அன்புகூர்தல், நெருக்கம், அரவணைப்பு, நிலையான தன்மை என, நட்புறவின் அனைத்துக் கூறுகளையும் இது கொண்டுள்ளது. வாழ்வு முழுவதையும் வடிவமைத்து வளர்ப்பதில் திருமணமும், இந்த நட்புறவின் உயரிய கூறுகளில் இணைகிறது.  அன்பு கூர்பவர்கள் தங்கள் அன்பை தற்காலிகமான ஒன்றாக நோக்குவதில்லை.  திருமணம் புரிவோரும், தங்கள் மனக்கிளர்ச்சி, காலப்போக்கில் குறைந்துவிடும் என எதிர்பார்ப்பதில்லை. குழந்தைகளும், தங்கள் பெற்றோர் ஒருவருக்கொருவர் அன்புகூர்பவர்களாக, வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் விசுவாசமாக, இணைந்திருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுவே இல்லற அன்பின் இயல்பு நிலை. வாழ்நாளின் இறுதிவரையான இந்த இணைப்பு குறித்த நம் திருமண வாக்குறுதி, ஒரு சடங்குமுறையோ, பாரம்பரிய பழக்கவழக்கத்தின் தொடர்ச்சியோ அல்ல, மாறாக, மனிதரின் இயல்பு நிலை. கிறிஸ்தவர்களுக்கு இது, விசுவாசமாக இருப்பதற்கு இறைவன் முன் உருவாக்கப்பட்ட உடன்படிக்கை. இங்கு இந்த உடன்படிக்கைக்கு, இறைவனே சாட்சியாக உள்ளார். “உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார். அப்படியிருக்க, உன் துணைவியும் உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் செய்தாயே. எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக. ஏனெனில், “மணமுறிவை நான் வெறுக்கிறேன்” என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் (மலா. 2:14-16). மரணம்வரை சவால்களை எதிர்கொள்ளத் தயங்கும் பலவீனமான அன்பு, உயரிய அர்ப்பணத்தைக் கொண்டிருக்க முடியாது. வளர்ச்சியைத் தடைசெய்யும், குறுகிய கண்ணோட்டமுடைய கலாச்சாரத்தினால் இது மடிந்துவிடும். ஆனால், நாம், அன்புகூர்பவருக்கு விசுவாசமாக இருந்து அவரிடம் நம்மை முழுமையாக கையளிக்கும்போது, அது என்றும் நிலைத்திருக்கும், வாக்களிக்கப்பட்ட அன்பாக மாறுகிறது. இந்த அன்பு, அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, வெற்றிகண்டு நிலைத்திருக்க, அதனை உறுதிப்படுத்தும் அருளின் தேவை உள்ளது.  புனித இராபர்ட் பெல்லார்மின் அவர்களின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், 'ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு பிரிக்கமுடியாத பந்தத்தில் இணையும்போது, எத்தனை துன்பங்கள் வந்தாலும், குழந்தைப் பேற்றிற்குரிய நம்பிக்கை இல்லாத வேளைகளிலும் கூட, பிரிக்க முடியாதவகையில் ஒன்றித்து தம்பதியர் இருப்பது, மிக உயரிய மறையுண்மையின் அடையாளமே. திருமணம் என்பது, காதல் உணர்வுகளைக்கொண்ட நட்பு எனக்கூறலாம். ஆனால், இந்த உணர்வு நிலையோ, நெருங்கிய ஒன்றிப்பை நோக்கிச் செல்வது. திருமணம் என்பது, குழந்தைகளைப் பெற்றெடுக்க என்பதற்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல, அதேவேளை, ஒருவருக்கொருவரிடையே நிலவும் திருமண அன்பு, சரியானமுறையில் வெளிப்படுத்தப்பட்டு, வளர்ந்து முதிர்ச்சியடைவதையும் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான இந்த தனிச்சிறப்புடைய அன்பு, இல்லற அன்பிற்குள், அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையுடையது. அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் இந்த ஒன்றிப்பு, தனிச்சிறப்புடையது, விசுவாசமாக இருப்பது, மற்றும் புதிய வாழ்வுக்கு தன்னை திறந்ததாகச் செயல்படுவது. ஒருவர் ஒருவருக்குரிய மதிப்பில் இது அனைத்தையும் தொடர்ந்து பகிர்கின்றது. மனிதனையும் இறைவனையும் இணைத்துக் கொண்டுவரும் இந்த அன்பு, தம்பதியர், மற்றவர்களின் கட்டாயப்படுத்தலின்றி, வாழ்வு முழுவதும் தங்களை ஒருவருக்கொருவர் வழங்கவும், மென்மையிலும், செயல்பாட்டிலும், அந்த அன்பை உணரவும் வழிநடத்திச் செல்கின்றது. (அன்பின் மகிழ்வு 123,124,125)

19 May 2021, 14:36