தேடுதல்

Vatican News
மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் 

மகிழ்வின் மந்திரம்: அன்பு, அனைத்திலும் மனஉறுதியோடு இருக்கும்

“ஒவ்வொரு மனிதரின் ஆழ்மனத்தில், கடவுளின் சாயலைப் பார்க்கும் நிலைக்கு, நீ வரும்போது, என்ன நடந்தாலும், அனைத்தையும் புறந்தள்ளி, அந்த மனிதரை நீ உண்மையிலேயே அன்புகூரத் தொடங்குவாய் (அன்பின் மகிழ்வு 118)

மேரி தெரேசா: வத்திக்கான் 

அன்பின் பாடல் எனப்படும், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் 13ம் பிரிவில் திருத்தூதர் பவுல், குறிப்பிட்டுள்ள அன்பின் 13 பரிமாணங்கள் (1கொரி.13:1-13) குறித்த தன் கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'திருமணத்தில் அன்பு'  என்ற 4ம் பிரிவில் ஒவ்வொன்றாக பதிவுசெய்துள்ளார். அவற்றில், அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் என்பது பற்றி, அம்மடலின் 118, 119ம் பத்திகளில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள்...

Panta hypoménei என்ற கிரேக்கச் சொல்லுக்கு, அன்பு, ஒவ்வொரு சோதனையையும் நேர்முகமான எண்ணத்தோடு பொறுத்துக்கொள்ளும் என்ற அர்த்தமாகும். அத்தகைய அன்பு, பகைமைச் சூழல்களில் உறுதியாய் இருக்கும். இந்த பொறுத்துக்கொள்ளுதல் என்பது, சினமூட்டும் சிலவற்றைச் சகித்துக்கொள்ளும் சக்தியை மட்டுமல்ல, அதைவிட மேலானதை, அதாவது, எந்தச் சவாலையும் சந்திப்பதற்கு தொடர்ந்து தயாராக இருப்பதை உள்ளடக்கியது. அந்த அன்பு, இருள்சூழ்ந்த காரிருள் நேரத்திலும்கூட, ஒருபோதும் கைவிட்டுவிடாது. அது, ஒருவித, மனஉறுதியுடைய வீரத்தைக் காட்டுகின்றது, ஒவ்வொரு எதிர்மறை எண்ணஓட்டத்தையும் எதிர்த்துநிற்கும் வல்லமையை, நன்மைத்தனத்திற்கு மிகுந்த ஆர்வத்தோடு அர்ப்பணிப்பதைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சோதனை மற்றும், வேதனைகளை உடன்பிறந்த அன்போடு சந்தித்த மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் சொற்களை, இவ்விடத்தில் நினைவுகூருகிறேன். “உன்னை அதிகம் வெறுக்கும் நபர், தன்னில் சில நன்மைத்தனத்தைக் கொண்டிருக்கிறார். உன்னை அதிகம் வெறுக்கும் நாடுகூட, தன்னில் சில நன்மைத்தனத்தைக் கொண்டிருக்கின்றது. உன்னை அதிகம் வெறுக்கும் இனம்கூட, தன்னில் சில நன்மைத்தனத்தைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மனிதரின் முகத்திலும், அவரது ஆழ்மனத்திலும், கடவுளின் சாயலைப் பார்க்கும் நிலைக்கு நீ வரும்போது, என்ன நடந்தாலும், அனைத்தையும் புறந்தள்ளி, அந்த மனிதரை நீ அன்புகூரத் தொடங்குவாய். நன்மைத்தனம் என்ற ஒன்று உண்டு. அதை அவரால் ஒருபோதும் நீக்கிவிட முடியாது.... உனது பகைவரை அன்புகூருவதற்கு மற்றொரு வழியும் உள்ளது. உனது எதிரியை வீழ்த்துவதற்கு உனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது, அச்சமயத்தில்தான் நீ அதை செய்யக் கூடாது.. அன்பின் மிகுந்த அழகு, மற்றும், வல்லமைக்கு நீ உயரும்போது, தீமையான அமைப்புமுறைகளைத் தோற்கடிக்க மட்டுமே நீ வழிகளைத் தேடுவாய். நீ அன்புகூரும் தனியாள்கள், அந்த அமைப்புமுறையில் சிக்கிக்கொள்ள நேரிடும்போது, அவர்கள், அந்த அமைப்புமுறையைத் தோற்கடிக்கும் வழிகளைத் தேடு.... வெறுப்புக்கு வெறுப்பைக் காட்டுவது, இப்பிரபஞ்சத்தில் ஏற்கனவே இருக்கும் வெறுப்பையும், தீமையையும் ஆழப்படுத்தவே செய்யும். நான் உன்னைத் தாக்கினால், மற்றும், நீ என்னைத் தாக்கினால், பதிலுக்கு நான் உன்னைத் தாக்கி, மற்றும், நீ என்னைத் தாக்கி, இது முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கும். அது ஒருபோதும் முடிவுறாது. எங்கோ, யாரோ ஒருவர், ஒரு நல்ல உணர்வைக் கொண்டிருக்கவேண்டும், அவரே உறுதியான மனிதர். அந்த திடமான மனிதரே, வெறுப்பின் சங்கிலியை, தீமையின் சங்கிலியை அறுத்தெறிகிறவர்...அன்பின் சக்திமிக்க அம்சத்தை, இந்த பிரபஞ்சத்தின் அமைப்பைமுறைக்குள்ளே புகுத்துவதற்கு யாராவது ஒருவர் போதுமான, மத, மற்றும், நன்னெறிப் பண்பைக் கொண்டிருக்கவேண்டும்”  (அன்பின் மகிழ்வு 118)

குடும்ப வாழ்வில், அதை அச்சுறுத்தும் ஒவ்வொரு தீமையையும் எதிர்ப்பதற்கு, நமக்கு உதவும் அன்பின் சக்தியை நாம் பேணி வளர்க்கவேண்டும். அன்பு,  தணியாக் கோபத்திற்கு, மற்றவரை அவமதிப்பதற்கு, அல்லது, அவர்களைப் புண்படுத்தும் ஆசைக்கு, அல்லது, சில சலுகைகளைப் பெறுவதற்கு இடம்கொடுக்காது. கிறிஸ்தவத்தின் உயரிய குறிக்கோள், குறிப்பாக குடும்பங்களில், எதையும் மனஉறுதியோடு ஏற்கும் அன்பாகும். சிலநேரங்களில், சொந்த பாதுகாப்பிற்காக, தங்களின் துணைவியார் அல்லது, துணைவரிலிருந்து பிரிந்துசெல்லும் ஆண்கள் அல்லது, பெண்களைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆயினும், நோய்கள், துன்பங்கள் மற்றும், சோதனைகளை, அவர்கள் எதிர்கொள்ளும் நேரங்களிலும், அவர்கள் மற்றவரால் விலக்கிவைக்கப்படும்போதுகூட, அவர்களின் உறுதியான திருமண அன்பு காரணமாக, அவர்களுக்கு உதவ முயற்சிக்க வேண்டும். இங்கும், அன்பு, ஒருபோதும் கைவிட்டுவிடாது, எப்போதும் மனஉறுதியோடு இருக்கும் என்பதை நாம் பார்க்கிறோம் (அன்பின் மகிழ்வு 119)

17 May 2021, 14:59