தேடுதல்

Vatican News
மன்னிப்பு மன்னிப்பு 

மகிழ்வின் மந்திரம்: அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்

நாம் புண்படுத்தப்படும்போது அல்லது, ஏமாற்றப்படும்போது, மன்னிப்பு இயலக்கூடியதே, மற்றும், தேவைப்படுவதும் அதுவே (அன்பின் மகிழ்வு 106)

மேரி தெரேசா: வத்திக்கான் 

“அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்” என்று, அன்பின் 13 பரிமாணங்களில் அன்பு பற்றி பவுலடிகளார் (1கொரி.13:1-13) கூறியிருப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலில் (அன்பின் மகிழ்வு 105, 106) கூறியுள்ள கருத்துக்கள்...

தீமை நம் இதயங்களில் வேரூன்றிவிட்டால், அது, ஆழமான மனக்கசப்புக்கு, தணியாத கோபத்திற்கு இட்டுச்செல்லும். இதற்கு எதிர்மறையானது மன்னிப்பு. பொறுத்துக்கொள்ளுதல். இது, மற்றவரின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு, அவர்களை மன்னிக்கும் வழிகளைத் தேடுகின்ற, நேர்மறை எண்ணத்தில் வேரூன்றப்பட்டதாகும். “தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக்.23:34) என, இயேசு சொல்லியுள்ளார். ஆயினும், நாம் தொடர்ந்து அதிகமதிகமான தவறுகளையே பார்க்கிறோம். பெரிய தீமைகளையே கற்பனைசெய்கிறோம். அனைத்துவிதமான தீய எண்ணங்களையே உண்மையென நினைக்கின்றோம். ஆதலால் கோபம், வளர்கிறது, மற்றும், ஆழப்படுகிறது. எனவே, தம்பதியரின் ஒவ்வொரு தவறும் அல்லது, குறையும், அன்பின் பிணைப்பையும், குடும்பத்தின் உறுதியான கட்டமைப்பையும் வீழ்த்துகிறது. ஒவ்வொரு பிரச்சனையையும் கடுமையானது என்று, நாம் அதைப் பார்க்கும்போது, அங்கே ஏதோ தவறு நடக்கிறது. இதனால், மற்றவரின் தவறுகளில் நேர்மையற்ற முறையில், கடுமையாய் நடந்துகொள்ளும் ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோம். நமது உரிமைகள் மதிக்கப்படுவதைப் பார்ப்பதற்குள்ள நியாயமான ஆவல், நமது மாண்பை அறிவுப்பூர்வமாகப் பாதுகாப்பதைவிடுத்து, பழிவாங்குவதற்காகத் தாகமாக இருப்பதாக மாறுகிறது. (அன்பின் மகிழ்வு 105)

நாம் புண்படுத்தப்படும்போது அல்லது, ஏமாற்றப்படும்போது, மன்னிப்பு இயலக்கூடியதே, மற்றும், தேவைப்படுவதும் அதுவே. ஆயினும், இது எளிதானது என்று யாராலும் சொல்ல முடியாது. தியாகம் என்ற மிகப்பெரும் உணர்வு வழியாக மட்டுமே, குடும்ப ஒன்றிப்பு பாதுகாக்கப்படும், மற்றும், முழுமையடையும். உண்மையில், இதற்கு, புரிந்துணர்வு, பொறுத்துக்கொள்ளுதல், மன்னிப்பு, ஒப்புரவு ஆகியவற்றுக்கு, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் தாராளமிக்க திறந்தமனமும், தயார்நிலையும் தேவைப்படுகின்றன. தன்னலம், இணக்கமின்மை, பதட்டம், மோதல், வன்முறைத் தாக்குதல், சில நேரங்களில் உடலளவில் காயப்படுத்தல் ஆகியவை, குடும்பத்தின் ஒன்றிப்பை எவ்வளவுதூரம் பாதிக்கின்றன என்பதை அறியாத குடும்பங்களே இருக்க முடியாது. இவை, குடும்ப வாழ்வில் பல்வேறு வடிவங்களில் பல பிரிவினைகள் உருவாகவும் காரணமாக அமைகின்றன  (அன்பின் மகிழ்வு 106)

06 May 2021, 13:07