தேடுதல்

ஈரான் நாட்டு தம்பதி ஈரான் நாட்டு தம்பதி 

மகிழ்வின் மந்திரம் : தன்னை வெளிப்படுத்தி, பெருகும் அன்பு

குடும்பத்தில், மூன்று வார்த்தைகளின் அத்தியாவசியத் தேவை உள்ளது. 'தயவுசெய்து', 'நன்றி', 'வருந்துகிறேன்' என்பவையே அவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலின் 4ம் பிரிவில், முதலில், அன்பின் பண்புகள் பற்றி புனித பவுல் கூறியுள்ளவற்றிற்கு விளக்கமளித்த திருத்தந்தை, 'தன்னை வெளிப்படுத்தி, பெருகும் அன்பு' என்ற தலைப்பில் கூறும் கருத்துக்கள் இதோ:

நட்புறவின் அன்பு என்பது, திருமண வாழ்வின்  கூறுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, குடும்ப அங்கத்தினர்கள் தொடர்ந்து வளர உதவுகின்றது. இந்த அன்பு சுதந்திரமாக, வார்த்தையாலும், செயல்களாலும் வெளிப்படுத்தப்படவேண்டும். குடும்பத்தில், மூன்று வார்த்தைகளின் அத்தியாவசியத் தேவை உள்ளது. 'தயவுசெய்து', 'நன்றி', 'வருந்துகிறேன்' என்பவையே அவை. இந்த மூன்று வார்த்தைகளும் குடும்பங்களில் அமைதியையும் மகிழ்வையும் கொணரவல்லவை. இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் கஞ்சத்தனமாக இல்லாமல், தினமும் இதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம். ஏனெனில், பல வேளைகளில், குடும்பங்களில் மௌனம் என்பது, அடக்குமுறையானதாக இருக்கலாம். சரியான நேரத்தில் பேசப்படும் சரியான வார்த்தை, அன்புக்கு உரமூட்டி அதனை வளர்க்கிறது.(அன்பின் மகிழ்வு 133)

திருமணத்தில் காணப்படும் அன்பு, புனித தாமஸ் அக்குவினாஸ், பிறரன்பு பற்றிக் கூறும் அனைத்துக் கூறுகளையும் தன்னுள் கொண்டுள்ளது. பிறரன்பு என்பது, அது மேலும் பெருகுவதில்  எவ்வித எல்லைகளையும் அதன் இயல்பிலேயே கொண்டிருக்கவில்லை. ஏனெனில், இது முடிவற்ற பிறரன்பாம் தூய ஆவியாரில் பங்கெடுப்பதாக உள்ளது. அதன் எல்லையை நாம் அறுதியிட்டு கூற முடியாது. ஏனெனில், பிறரன்பு வளரும்போது, அது மேலும் வளர்வதற்குரிய அதன் திறனும் வளர்கிறது. புனித பவுலும், 'நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!' (1தெச.3:12) எனவும், சகோதர அன்பைப்பற்றி உங்களுக்கு எழுதவேண்டிய தேவையில்லை……… அன்பர்களே! இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம் (1தெச.4:9-10) எனவும் வேண்டுகிறார். திருமண அன்பு என்பது, அருளின் தூண்டுதலால் மேலும் பலம்பெறுகிறது. வளர்ச்சிக் காண முடியாத அன்பு, ஆபத்தையே எதிர்நோக்குகிறது. இறையருளுக்கு, நம் அன்பு, மற்றும், கருணையின் செயல்பாடுகள் வழியாக பதிலளிக்கும்போது, அன்பு வளர்ச்சியைக் காணும் அதேவேளையில், அடிக்கடி நிகழ்வதாகவும், தாராளமனதுடையதாகவும், நெருக்கமானதாகவும், இதமானதாகவும், மகிழ்வு நிரம்பியதாகவும் மாறுகிறது. கணவனும் மனைவியும் தங்கள் ஒன்றிப்பு குறித்து மேலும் உணர்ந்து, அதை ஆழமாக அனுபவிப்பவர்களாக மாறுகின்றனர். தம்பதியர் மீது பொழியப்படும் இறையன்பெனும் கொடை, அருளில் தொடர்ந்து வளர்வதற்கான அழைப்புமாகும். (அன்பின் மகிழ்வு 134)

வளர்வதற்கான தூண்டுதலே தேவைப்படாத ஒரு முழுமையான அன்பு குறித்து நாம் கனவு காண்பது, எவ்வகையிலும் உதவுவதில்லை. இவ்வுலக அன்பின் முதிர்சசி, காலப்போக்கிலேயே இடம்பெறும், ஏனெனில், நல்ல திராட்சை இரசத்தின் முதிர்ச்சி, கால அளவைப் பொறுத்துள்ளது. சிலே நாட்டு ஆயர்கள் கூறியுள்ளதுபோல், நுகர்வுக் கலாச்சார விளம்பரங்கள் முன்வைக்கும், குறையில்லாக் குடும்பங்கள் என்பவை உண்மையிலேயே இல்லை. அத்தகைய குடும்பங்களில் எவரும் மூப்படைவதில்லை, நோயடைவதில்லை, கவலைகளோ மரணமோ இல்லை......நுகர்வுக் கலாச்சார விளம்பரங்கள், ஒருவித மாயத்தோற்றத்தைத் தருகின்றனவே ஒழிய, அங்கே, குடும்பத் தலைவர்கள் தினமும் எதிர்நோக்கும் உண்மை நிலைகள் காட்டப்படுவதில்லை. நம்முடைய இயலாமைகள், நமக்குள்ள வரையறைகள், குறைபாடுகள் ஆகியவைகளை உணர்ந்தவர்களாக, ஒன்றிணைந்து வளர்வதற்கும், அன்பின் முதிர்ச்சியைக் கொணர்வதற்கும், என்ன நடந்தாலும் நம் ஒன்றிப்பை பலப்படுத்துவதற்கும் விடப்பட்டுள்ள அழைப்பிற்கு பதிலளிப்பது மிகவும் நலமுடையதாக இருக்கும்.(அன்பின் மகிழ்வு 135)

26 May 2021, 14:20