தேடுதல்

Vatican News
பாலியல் முறை அத்துமீறல்கள் பாலியல் முறை அத்துமீறல்கள் 

அயர்லாந்து திருஅவையின் குணமளிக்கும் திட்டம்

பாலியல் முறையில் அத்துமீறல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு குணமளிக்கும் திட்டத்தின் அடிப்படையில், இதுவரை 7000 பேருக்கு உதவிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அயர்லாந்து திருஅவையின் அருள்பணியாளர்களால், பாலியல் முறையில் அத்துமீறல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு குணமளிக்கும் திட்டத்தின் அடிப்படையில், இதுவரை 7000 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அயர்லாந்து திருஅவை அறிவித்துள்ளது.

'குணப்படுத்தலை நோக்கி' என்ற தலைப்பில் அயர்லாந்து ஆயர்களால் செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம், பாலியல் முறையில் மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு, அத்தாக்கத்திலிருந்து வெளிவருவதற்குத் தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கிவருகிறது.

1996ம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இத்திட்டத்தின் தற்போதைய இயக்குனர் ஆயர் Michael Router அவர்கள் கூறுகையில், மனித உறவுகள் குறித்த கிறிஸ்தவ படிப்பினைகள், மனித பலவீனங்களால் நொறுக்கப்படுவதைக் கண்டுவருகிறோம் என கவலையை வெளியிட்டார்.

திருஅவையும் பலவேளைகளில் தன் கடமையிலிருந்து தவறியுள்ளதை மிகவும் கவலையுடன் நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது என்று கூறிய ஆயர் Router அவர்கள், இதனை உணர்ந்ததாக அயர்லாந்து திருஅவை, பொறுப்புணர்வுடனும், இறைஇரக்கத்துடனும், நம்பிக்கையுடனும், கடந்த 25 ஆண்டுகளாக, குணமளிக்கும் பணியை, 7000 பேரிடையே ஆற்றியுள்ளது என்று கூறினார்.

பாலியல் முறையில் மீறல்களுக்கு உள்ளானோர், அந்த பாதிப்புகளிலிருந்து வெளிவரவும், தங்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவும், புதிய நம்பிக்கைகளையும், குணமளித்தலையும் வழங்க ஆயர்களின் இத்திட்டம் செயல்பட்டுவருகிறது.

31 May 2021, 14:40