தேடுதல்

Vatican News
உயிர்த்த ஆண்டவர் உயிர்த்த ஆண்டவர் 

வாரம் ஓர் அலசல் - உயிர்ப்புப் பெருவிழா, நம்பிக்கையின் விழா

இயேசுவைப்போல் நாமும் நம்பிக்கை வார்த்தைகளால் பிறரின் பயம் களைந்திவோம். நற்செயல்களால் குடும்ப சமூக உறவுகளில் மன அமைதியையும், சமூக அமைதியையும் ஏற்படுத்தும், திடப்படுத்தும் செயலில் ஈடுபடுவோம்!

மேரி தெரேசா: வத்திக்கான்

கொரோனா உலகப் பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, இரண்டாவது முறையாக, ஏப்ரல் 04, இஞ்ஞாயிறன்று, கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்துள்ளனர். எகிறிக்கொண்டிருக்கும் இந்த நோயின் இரண்டாம் அலை, துயரங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வேளையில் நம்பிக்கையோடு வாழ, ஒருவருக்கொருவர் நம்பிக்கையைப் பரிமாறிக்கொள்ள, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நம் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கிறது என்று, வேலூர் மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி அருள் ஜான் போஸ்கோ அவர்கள் சொல்கிறார். அவரின் சிந்தனைகள் இதோ...

உயிர்ப்புப் பெருவிழா, நம்பிக்கையின் விழா

பணி.அருள் ஜான் போஸ்கோ, வேலூர் மறைமாவட்டம்

 • வத்திக்கான் வானொலியில்... உயிர்ப்பின் திங்கள்
 • நம்பிக்கையை பரிமாறுவதே அர்த்தமுள்ள உயிர்ப்புப் பெருவிழா!
 • வத்திக்கான் வானொலியின் இனிய சொந்தங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின
 • உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களும், வணக்கங்களும்!

அன்பு நேயர்களே! உங்களுடனான என்னுடைய உயிர்ப்பின் திங்கள் செய்தியினை புனித

அகுஸ்தினாரின் வார்த்தைகளோடு தொடங்க ஆசிக்கிறேன். புனித அகுஸ்தினார் இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி கூறும்போது, இயேசுவை அடக்கம் செய்திருந்த கல்லறையின் கல் புறட்டப்பட்டது, இயேசுவை வெளியே கொண்டு வருவதற்கு அல்ல, மாறாக சீடர்களை உள்ளே கொண்டு வருவதற்குத்தான்! சீடர்கள் ஏன் கல்லறைக்குள் செல்லவேண்டும்? சீடர்கள் கல்லறைக்குள் சென்றால்தான் இயேசுவின் உயிர்ப்பை அறிந்து உணர்ந்து, அடுத்தவர்க்கும் அறிவிக்க முடியும். அடிப்படையில் உயிர்ப்புப் பெருவிழா என்பது, நம்பிக்கையின் விழா. கல் புறட்டப்பட்டிருந்த கல்லறையில் இடம்பெறும் விழுமியங்கள், தடயங்கள் இவைகளே நம் நம்பிக்கையின் நங்கூரமாக மாறியுள்ளது. நற்செய்தியாளர்கள், சீடர்கள் கல்லறைக்குள் சென்ற நிகழ்வினை விளக்கும்போது, கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருந்தது, அடக்கம் செய்திருந்த உடல் இல்லை, துணிகள் இருந்தன. தலையை மூடியிருந்த துண்டு தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. சீடர்கள் இவற்றைக் கண்டார்கள், நம்பினார்கள் என எழுதப்பட்டுள்ளது.

‘உயிர்ப்பு என்பது, அழிவில்லா வாழ்வின் அஸ்திவாரம்’

உறக்கம் என்பது, இறப்பின் முன்னோட்டம் என்பதுபோல, விழிப்பு என்பதும் உயிர்ப்பின் முன்னோட்டம். ஏனெனில், உறக்கம் என்பது, தற்காலிக இறப்பு, விழிப்பு என்பது தற்காலிக

வாழ்வு. இந்த இரண்டு நிலைகளும், தற்காலிகத்தன்மையை கடந்து, நிலைத்த தன்மையை

இறப்பு, உயிர்ப்பு என்னும் நிலைகளில் எய்துகின்றது. உயிர்ப்பின் இந்த நிலைத்த தன்மையைத்தான் நிலைவாழ்வு, நிறைவாழ்வு, முடிவில்லா வாழ்வு, பேரின்ப வாழ்வு என பல பெயர் கொண்டு அழைக்கின்றோம்.

முளைக்காது என்று தெரிகின்றபோது விவசாயி விதையை விதைக்கமாட்டான். விழிக்கமாட்டோம் என்று எண்ணுகின்றவன் நிம்மதியாக உறங்கச் செல்லமாட்டான். வாழ்க்கையின் அத்தனை செயல்களையும் மனிதன் தன் நம்பிக்கையின் ஊடாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்பதுதான் எதார்த்தம்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது மரணம், மரணத்தைத் தழுவிவிட்டது. திருவிவிலியம் உயிர்த்தெழுதலை விளக்கவில்லை. உயிர்த்தெழுதலே திருவிவிலிய முழுமைக்கும் விளக்கமாயிருக்கிறது என்பார் ஜான்வல். உலகம் பெற்றிராத சிறந்த செய்தி கல்லறையிலிருந்து வந்ததே - உயிர்த்தெழுதல் என்கிறார் ஆனன்.

உயிர்த்த இயேசு சீடர்களுக்கு அளித்த நம்பிக்கை மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது.

 • 1. முதலாவது அஞ்சாதீர்கள் எனும் தைரியப்படுத்தும் வார்த்தை.
 • 2. உங்களுக்கு அமைதி உரித்தாகுக எனும் திடப்படுத்தும் கொடை
 • 3. மூன்றாவதாக அவர் விடுத்த அழைப்பு - உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
 • நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்

இயேசுவின் இறப்பிற்குப்பின் தங்களின் பழைய வாழ்க்கைக்கே திரும்பிடவேண்டும் என்கிற எண்ணத்திலும், வெளியில் வெளிப்படையாகச் சென்றால் இயேசுவுக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் ஏற்படும் என பயந்தும் அறைக்குள் அடைந்துபோய் வாழ்ந்து வந்தவர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பும், உயிர்த்த இயேசுவின் சந்திப்பும், அவர் அளித்த சமாதானமும் சீடர்களுக்கு புதுவாழ்வின் ஊற்றாயிற்று.

நம்பிக்கையின் விழா, நம்பிக்கை பரிமாற்ற விழாவாக வேண்டும்!

மனித குலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கின்றது. கொரோனாவின் கொடுமை பலரது வாழ்வை நடைபிண வாழ்வாக்கியுள்ளது. மனித குலத்தை தன் உழைப்பினால் அன்றாடம் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகிக் கொண்டுள்ளது. சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமைகள், பாலின ஏற்றத்தாழ்வுகள், இலஞ்சம் ஊழல் என பிரச்சனைகளின் பட்டியில் நீண்டுகொண்டே செல்ல, மனிதர்களின் வாழ்வு குறித்த பயம் நிறைவாய் ஆட்கொண்டுள்ளது. அடுத்தவரை அரவணைக்கும் நிலைப்போய் அடுத்தவரைக் கண்டு அச்சம் கொள்ளும் நிலை மேலோங்கியுள்ளது.

இந்நிலையில் இயேசு தன் வாழ்வின் ஊடாகச் சொல்கிறார், எல்லாம் கடந்துவிடும், எனக்கேற்பட்ட சவுக்கடி, மறுதலிப்பு, சிலுவைத் துன்பம், தனிமை, ஏமாற்றம், சோகம், எல்லாம் நான் என் தந்தையின்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் என் உயிர்ப்பால் நொடிப்பொழுதில் மாறியதைப்போல உங்கள் துன்பங்களும் உங்கள் நம்பிக்கையால் உங்களைவிட்டு விலகும். முடிந்தது என்று நினைக்கும்போது அங்கே விடியும். இரவில் மறைந்த சூரியன் காலையில் எழுகின்றான். கிழக்கில் உதித்த சூரியனாய் இயேசு இன்றும  நம் நடுவில் உயிர்த்து நம்பிக்கை அளிக்கின்றார்.

இயேசுவைப்போல் நாமும்

 • நம்பிக்கை வார்த்தைகளால் பிறரின் பயம் களைந்திவோம்.
 • நற்செயல்களால் குடும்ப சமூக உறவுகளில் மன அமைதியையும், சமூக அமைதியையும்
 • ஏற்படுத்தும், திடப்படுத்தும் செயலில் ஈடுபடுவோம்!
 • நம்பிக்கை மனிதர்களின் வாழ்வை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்ற நற்செய்தியை
 • வார்த்தையாலும் வாழ்வாலும் உலகில் பறைசாற்றிக்கொண்டே இருப்போம்.

இவ்வாறு நம்பிக்கையின் விழாவான உயிர்ப்புப் பெருவிழாவை நம்பிக்கை பரிமாற்ற விழாவாக, அர்த்தமுள்ள விதத்தில் அன்றாடம் கொண்டாடுவோம்.

மீண்டுமாய் உங்கள் அனைவருக்கும் உயிர்ப்புப் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

(பணி.அருள் ஜான் போஸ்கோ, வேலூர் மறைமாவட்டம்)

05 April 2021, 10:37