தேடுதல்

Vatican News
சுற்றுச்சூழலை மையப்படுத்தி நடத்தப்பட்ட மெய்நிகர் கூட்டத்தில் அரசுத்தலைவர் ஜோ பைடன் சுற்றுச்சூழலை மையப்படுத்தி நடத்தப்பட்ட மெய்நிகர் கூட்டத்தில் அரசுத்தலைவர் ஜோ பைடன் 

அமெரிக்க சுற்றுச்சூழல் அர்ப்பணத்திற்கு ஆயர்கள் ஆதரவு

2030ம் ஆண்டிற்குள், மாசுவாயு வெளியீட்டை 50 விழுக்காடாக குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்களில், ஏனைய நாடுகளுக்கு உதவிகளை வழங்கவும், அமெரிக்க ஐக்கிய நாடு முடிவெடுத்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்க, அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசு முடிவெடுத்திருப்பது குறித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டு வரவேற்றுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருந்துவந்த அமெரிக்க ஐக்கிய நாடு, முன்னாள் அரசுத்தலைவர் டொனால்ட்டு டிரம்ப் அவர்களின் பணிக்காலத்தில், அதிலிருந்து ஒதுங்கியிருந்ததற்கு மாறாக, கடந்த வார இறுதியில், புதிய அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுச்சுழல் பாதுகாப்புக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் குறித்த புதிய அரசின் அர்ப்பணம் வெளிப்படுத்தப்பட்டது.

உலகம் வெப்பமாகிவருவதை தடுக்கும் நோக்கத்தில் 2015ம் ஆண்டில் பாரிசில் கையெழுத்திடப்பட்ட ஐ.நா. ஒப்பந்தத்தில், மீண்டும் இணைவதற்கு, அமெரிக்க ஐக்கிய நாடு முன்வந்திருப்பது, மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்று, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலை மையப்படுத்தி, இணையம் வழியாக நடத்தப்பட்ட மெய்நிகர் கூட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணியில் நிற்க உள்ளது குறித்து அறிவித்த அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள், 2030ம் ஆண்டிற்குள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாசுவாயு வெளியீட்டை 2015ம் ஆண்டு நிலைகளிலிருந்து 50 விழுக்காடாக குறைக்கவுள்ளதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்களில், ஏனைய நாடுகளுக்கு உதவிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பல நாடுகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், உலகம் வெப்பமயமாகி வருவதைத் தடுக்க பிரேசில், சீனா, மற்றும் இரஷ்யாவின் தலைவர்களும் தங்கள் அர்ப்பணத்தை வெளியிட்டுள்ளனர்.

அரசுத் தலைவர் ஜோ பைடனின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த புதிய முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணியில் நிற்பதற்கும் அரசு எடுத்துள்ள முடிவு பாராட்டிற்குரியது என தெரிவித்துள்ளனர்.

2015ம் ஆண்டின் பாரீஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கி வந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், 2017ம் ஆண்டு முன்னாள் அரசுத்தலைவர் டொனால்ட் டிரம்ப் அதிலிருந்து விலகியது குறித்து, தங்கள் ஆழ்ந்த கவலையை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

29 April 2021, 14:28