தேடுதல்

Vatican News
காடுகளில் வாழும் Karen இனத்தவர் காடுகளில் வாழும் Karen இனத்தவர்  

மியான்மார் புலம்பெயர்ந்தோருக்கு தாய்லாந்து கத்தோலிக்கர் உதவி

புலம்பெயர்ந்துள்ள மியான்மார் மக்களுக்கு, உணவு, தண்ணீர், மருந்து, மற்றும், ஏனைய அன்றாட அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன - தாய்லாந்து ஆயர் Vira

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியிலிருந்து, இராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் மியான்மார் நாட்டிலிருந்து புலம்பெயரும் மக்களை வரவேற்பதற்கு, தாய்லாந்து அரசு ஆர்வம்காட்டாமல் இருக்கும்வேளை, தாய்லாந்தின் கத்தோலிக்கர், அம்மக்களை வரவேற்று, ஆதரவளித்து வருகின்றனர் என்று, தாய்லாந்து ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

மியான்மாரின் Kayin மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து, மியான்மார்-தாய்லாந்து எல்லையிலுள்ள Thanlyin ஆற்றுக்கு அருகிலுள்ள காடுகளில் மறைந்துவாழ்கின்ற, ஆயிரக்கணக்கான Karen இன மக்களை, தன் மறைமாவட்ட கத்தோலிக்கர் வரவேற்று, உதவி வருகின்றனர் என்று, Chiang Mai ஆயர் Francis Xavier Vira Arpondratana அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

மியான்மாரிலிருந்து புலம்பெயரும் மக்களுக்கு, Chiang Mai மறைமாவட்ட தன்னார்வலப் பொதுநிலையினர், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் போன்ற அனைவரும் உதவி வருகின்றனர் என்றுரைத்துள்ள ஆயர் Vira அவர்கள், தாய்லாந்தின் மற்ற உதவி நிறுவனங்களும், அம்மக்களுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

புலம்பெயர்ந்துள்ள மியான்மார் மக்களுக்கு, உணவு, தண்ணீர், மருந்து, மற்றும், ஏனைய அன்றாட அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன என்றும், ஆயர் Vira அவர்கள் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மியான்மாரிலிருந்து புலம்பெயரும் மக்களைப் பாதுகாப்பதற்கு, Ching Mai மறைமாவட்டத்தோடு, தாய்லாந்து காரித்தாஸ் அமைப்பும், தாய்லாந்து துறவியர் கூட்டமைப்பும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்தப் பணிகள் பற்றி விவரித்த, தாய்லாந்து துறவியர் கூட்டமைப்பின் தலைவர் அருள்சகோதரி Aranya Kitbunchu அவர்கள், Karen இனத்தவர் வாழ்கின்ற கிராமங்களில் இடம்பெறுகின்ற வன்முறைக்கு அஞ்சி, அவ்வினத்தைச் சேர்ந்த, ஏறத்தாழ மூவாயிரம் கிறிஸ்தவர்கள், தாய்லாந்து எல்லையில் அடைக்கலம் தேடியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மியான்மார் இராணுவத்திற்கும், Karen இன புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் ஆயுதமோதல்கள், அந்நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப்பின் அதிகரித்துள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக்கொண்ட மியான்மாரில், ஏறத்தாழ ஆறு விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். (UCAN)

இதற்கிடையே, மியான்மாரில் இடம்பெறும், இராணுவ ஆட்சி, மற்றும் நிதி நெருக்கடியால், இன்னும் சில மாதங்களில் இலட்சக்கணக்கான மக்கள், உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குவர், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழப்பர், மற்றும், வறுமை நிலையில் உள்ள மக்கள் மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

23 April 2021, 14:57