தேடுதல்

Vatican News
நல்ல ஆயன் நானே - யோவான் 10:11 நல்ல ஆயன் நானே - யோவான் 10:11 

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

பெருந்தொற்று நோயாளிகளில் பலரை, வாழ்வுதரும் நீர்நிலைகளுக்கும், பசும்புல் வெளிகளுக்கும் அழைத்துச்சென்ற மருத்துவப் பணியாளர்கள், இந்த ஞாயிறன்று நாம் சிறப்பிக்கும் நல்லாயனின் மறு உருவங்கள்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

கனத்த இதயத்தோடும், கவலைகள் நிறைந்த எண்ணங்களோடும் இந்த ஞாயிறு சிந்தனையைத் துவக்குகிறோம். கோவிட்-19 பெருந்தொற்றின் 2வது அலை, இந்தியாவை, அதிக அளவில் தாக்கியுள்ளதாக, ஊடகங்கள் கூறிவருகின்றன. இதுவரை, ஓர் எண்ணிக்கையாக, யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பாக இருந்த கோவிட் ஆபத்து, இப்போது, நம் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், ஆகியோரைத் தாக்கியிருப்பது, நம்மை நிலைகுலையச் செய்துவருகிறது.

இத்தருணத்தில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக, இந்தப் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மத்தியில், தங்கள் உடல்நலம், உயிர் ஆகியவற்றைப் பணயம் வைத்து உழைத்துவரும் மருத்துவப் பணியாளர்கள் மீது நம் கவனத்தைத் திருப்புவோம். சாவின் இருள் சூழ்ந்த பாதையில் பயணித்த நோயாளிகளில் பலரை, வாழ்வுதரும் நீர்நிலைகளுக்கும், பசும்புல் வெளிகளுக்கும் (காண்க. திருப்பாடல் 23) அழைத்துச்சென்ற இந்த மருத்துவப் பணியாளர்கள், இந்த ஞாயிறன்று நாம் சிறப்பிக்கும் நல்லாயனின் மறு உருவங்கள்.

மனித நலனையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதெற்கென்று உருவாக்கப்பட்டுள்ள ‘ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ (Amnesty International) என்ற அமைப்பு, மார்ச் மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், உலகெங்கும், 17,000த்திற்கும் அதிகமான மருத்துவர்களும், மருத்துவப்பணியாளர்களும், கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

17,000 என்பதை, வெறும் எண்ணிக்கையாக சிந்திக்கும்போது, அது, நம்மில், பெரும் தாக்கங்களை உருவாக்காமல் போகும் ஆபத்து உள்ளது. இதே எண்ணிக்கையை, வேறு வகையில் நாம் சிந்திக்கவேண்டும். அதாவது, ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு மருத்துவப் பணியாளர், உலகின் ஏதோ ஒரு பகுதியில், குறிப்பாக, வறுமைப்பட்ட நாடுகளில், கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்கும் போராட்டத்தில் உயிரிழந்துள்ளார் என்று கூறும்போது, இவர்களின் தன்னலமற்ற பணி, இன்னும் தெளிவாகப் புரிகிறது.

பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரிடையே உழைத்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், இந்த பெருந்தொற்றினால் இறந்தோரை அடக்கம், அல்லது, தகனம் செய்தோர், அவசரக்கால உதவிகள் செய்தோர், தன்னார்வத் தொண்டர்கள் என்று, பலரும், இந்தப் பெருந்தொற்றின் ஆபத்துக்களை அறிந்திருந்தும், நோயுற்றோரைக் காப்பதற்காக, தங்களையே வழங்கியுள்ளனர். இந்த உன்னத உள்ளங்களுக்காக, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

குறிப்பாக, இவ்வேளையில், சீனாவின் வுஹான் (Wuhan) நகரில் பணியாற்றிய மருத்துவர் லீ வென்லியாங் (Li Wenliang) அவர்களை தனிப்பட்ட முறையில் எண்ணிப்பார்ப்போம். கோவிட் பெருந்தொற்று, இனம்தெரியாத ஒரு கிருமியாக வுஹான் நகரில் தோன்றிய வேளையில், அதைப்பற்றிய முதல் எச்சரிக்கையை விடுத்தவர், மருத்துவர் லீ வென்லியாங். அவரை, முற்றிலும் அடக்கி, ஒடுக்க, சீன அரசு முயற்சி செய்து, வெற்றியும் கண்டது. இறுதியில், மருத்துவர் லீ வென்லியாங் அவர்கள், இந்தக் கிருமியினால் பாதிக்கப்பட்டு, 2020ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி, தன் 35வது வயதில் உயிரிழந்தார். அவர் வெளியிட்ட உண்மைகளை, வதந்தி என்றும், பொய் என்றும் முத்திரை குத்தி, சீன அரசு பொய்யானச் செய்திகளை வெளியிட்டது.

மக்களிடம் உண்மையைக் கூறி, எச்சரிக்கைவிடுத்து, அவர்களைக் காப்பதற்காக உழைக்கும் மருத்துவத்துறையினர், ஒருபுறம். மக்களிடமிருந்து உண்மைகளை மறைத்து, அவர்களை இன்னும் அதிக ஆபத்தில் சிக்கவைத்திருக்கும் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், மறுபுறம். அதேவண்ணம், இந்தப் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கப் போராடுவோர், ஒருபுறம். இந்தப் பெருந்தொற்றை மூலதனமாக்கி, மருத்துவ வியாபாரம் செய்வோர், மறுபுறம்.

மக்களைக் காப்பதற்காகப் போராடி, 30 நிமிடத்திற்கு ஒருவராக, 17,000 மருத்துவப் பணியாளர்கள் இறந்துள்ள 2020ம் ஆண்டில், எத்தனை தலைவர்கள், எத்தனை அரசியல் பெரும்புள்ளிகள், எத்தனை மருத்துவ வியாபாரிகள் மரணமடைந்தனர் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். ஒருவேளை, உலகெங்கும் கணக்கெடுத்தால், அரசியல் மற்றும் மருத்துவத் தரகர்கள் நடுவே, 500 பேர் இறந்திருக்கக்கூடும். அவர்களிலும், எத்தனை பேர் மக்களுக்கு உதவிகள் செய்யவந்த வேளையில் இறந்தனர் என்பதை நினைத்தால், அந்த எண்ணிக்கை பூஜ்யமாக இருக்கும்.

மக்களின் நலனுக்காகவே தாங்கள் வாழ்வதாக மேடைகளில் முழக்கமிடும் அரசியல்வாதிகள், மக்களை துன்பங்கள் தாக்குகின்றன என்பதை அறிந்ததும், ஓடி ஒளிந்துகொள்வர் என்பதை அறிவோம். அதேவண்ணம், மக்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டவை என்று, தங்கள் மருத்துவ இல்லங்களைப் பற்றி, விளம்பரங்கள் வழியே முழக்கமிடும் வியாபாரிகள், மக்களின் ஆபத்தை மூலதனமாக்கி, இலாபம் ஈட்டுவதிலேயே குறியாய் உள்ளனர் என்பதையும் அறிவோம்.

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இவ்விரு குழுவினர், இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் ஆயனையும், கூலிக்கு மேய்ப்பவரையும் மனதில் பதிக்கின்றனர்:

யோவான் 10: 11-13

நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டுபோய், மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.

அண்மையில், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றன என்பதை நாம் அறிவோம். இந்தத் தேர்தல்களையொட்டி, மக்களை, கூட்டம் கூட்டமாகச் சேர்ப்பதில், அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டினர். இந்தக் கூட்டங்களின் பின்விளைவாக, இந்தப் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, இவ்வளவு கடுமையாய் தாக்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்களுக்காக தேர்தல் என்ற நிலை மாறி, தேர்தலுக்காக மக்களைப் பலியாக்கும் போக்கு உருவாகியிருப்பது, வேதனையைத் தருகிறது.

கூலிக்கு மேய்க்கும் அரசியல்வாதிகள், தேர்தல் விழா முடிந்த கையோடு, பாதுகாப்பான தங்கள் அரண்களுக்குள் அடைக்கலம் புகுந்துவிட்டனர். தற்போது, மக்களை, கோவிட் பெருந்தொற்று என்ற ஓநாய் வேட்டையாடுவதைப்பற்றி அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

தன்னைப் பின் தொடர்பவர்களின் இன்ப, துன்பங்களில்... முக்கியமாக, அவர்களின் துன்பங்களில் தன்னையே இணைத்துக்கொள்பவரே, உண்மையானத் தலைவர், உண்மையான ஆயர்; தேவைப்பட்டால், தன் உயிரையும் தருபவர், உண்மையான ஆயர் என்பதை, இயேசு, இன்றைய நற்செய்தியில், வலியுறுத்திக் கூறியுள்ளார்:

யோவான் 10: 14-15

நல்ல ஆயன் நானே. ... நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

எந்த ஒரு சூழலிலும், தன்னைப்பற்றி சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப்போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது, தன்னைக்குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும், வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டானச் சூழல்களிலும், தன்னைப்பற்றிய கவலை துளியும் இல்லாமல், அடுத்தவரைப்பற்றி கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம். மனித வரலாற்றில் தங்களையே மறந்து, பிறருக்காக வாழ்ந்த பலரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

'டைட்டானிக்' (Titanic) என்ற புகழ்பெற்ற கப்பல், 1912ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15ம் தேதி, அட்லான்டிக் கடல் நடுவே, பனிப்பாறையில் மோதி, கடலில் மூழ்கியது என்பது நம் நினைவில் பதிந்திருக்கும். அக்கப்பலின் வீழ்ச்சி, மனித ஆணவத்திற்கு விழுந்த மரண அடி. ஆனால், 'டைட்டானிக்' மூழ்கிய நேரத்தில் நிகழ்ந்த செயல்கள், மனிதத் தியாகத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒளி விளக்குகளாக இன்றும் நம் மனங்களுக்கு நிறைவு தருகின்றன. அந்த ஒளி விளக்குகளில், Thomas Byles, Benedikt Peruschitz, Juozas Montvila, என்ற மூன்று அருள்பணியாளர்களும் அடங்குவர்.

'டைட்டானிக்' மூழ்கிக்கொண்டிருந்தபோது, இம்மூன்று அருள்பணியாளர்களும் உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை மறுத்துவிட்டனர். மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி, அவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர் என்று சொல்லப்படுகிறது. இம்மூவரில், அருள்பணி Thomas Byles அவர்கள், இங்கிலாந்தில், பங்குத் தந்தையாகப் பணிபுரிந்துவந்த புனித ஹெலன் கோவிலில், இவர் நினைவாக வைக்கப்பட்டுள்ள வண்ணக்கண்ணாடி சன்னலில் (stained-glass window) பொறிக்கப்பட்டுள்ள உருவம் என்ன தெரியுமா? நல்லாயனாம் இயேசுவின் உருவம்.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளையும் சிறப்பிக்க, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். ஏப்ரல், மே மாதங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை, இன்று, சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவைப் பின்பற்றி, மக்கள் பணிக்குத் தங்களையே வழங்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று, மன்றாடுவோம்.

கனத்த இதயத்தோடு இந்த ஞாயிறு சிந்தனைகளை ஆரம்பித்தோம். இப்போது மீண்டும் கனத்த இதயத்தோடு, ஒரு முக்கிய இறைவேண்டலை மேற்கொள்வோம். 200 நாள்களுக்கும் மேலாக, மும்பைச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஏப்ரல் 26, இத்திங்களன்று, தன் 84வது வயதை நிறைவு செய்கிறார்.

வயதில் மிக முதிர்ந்த ஒருவரை, சிறையில் அடைத்த அவலத்தை, இந்திய நடுவண் அரசு, முதல்முறையாக நடத்திக் காட்டியுள்ளது. அதுவும், ‘பார்கின்சன்ஸ்’ எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய், இருதயம் தொடர்பான குறைபாடுகள், கேட்கும் திறனில் குறைவு,  உட்பட, பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுள்ள அவரை, இந்தப் பெருந்தொற்று காலத்தில், இராஞ்சியிலிருந்து மும்பைக்கு இழுத்துச்சென்று, அங்கு சிறையில் அடைத்திருப்பது, மனிதாபிமானமற்ற கொடுமை.

இத்தனைக் கீழ்த்தரமான அரசியல் வேட்டைக்கு பலியாகும்வண்ணம், அருள்பணி ஸ்டான் அவர்கள் செய்தது என்ன? இந்திய நடுவண் அரசின் அத்துமீறிய அராஜகங்களை, குறிப்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் பழங்குடியின மக்கள்மீது அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்த, அருள்பணி ஸ்டான் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக உழைத்துவந்துள்ளார். எழுதப்படிக்கத் தெரியாத அந்த அப்பாவி மக்களின் உரிமைகளை அவர்களுக்கு உணர்த்திவந்தார்.

ஆயிரக்கணக்கான பழங்குடியின இளைஞர்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய வேளையில், அவர்களை 'நாக்சலைட்டுகள்' என்று முத்திரை குத்தி, எவ்வித வழக்கும் இன்றி, அவர்களை சிறையில் அடைத்தனர், காவல் துறையினர். அநியாயமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுவிக்க, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில், அருள்பணி ஸ்டான் அவர்கள், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வழக்கின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள், உலகின் பல பகுதிகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய அரசு, அருள்பணியாளரைப் பழிவாங்கத் துடித்தது. தற்போது Bhima-Koregaon வழக்கில் அவரைத் தொடர்புபடுத்தி, தன் பழியைத் தீர்த்துக்கொண்டது.

சிறையிலிருந்து இதுவரை அருள்பணி ஸ்டான் அவர்கள் பகிர்ந்துவரும் எண்ணங்கள், தன்னுடன் சிறையில் இருக்கும் மற்றவர்களைப் பற்றியே இருந்துவருகிறது. தன் உடன் கைதிகள் என்ற ஆடுகள் மீது பரிவு கொண்டுள்ள அந்த உண்மையான ஆயன், இதுவரை மனம் தளராமல் இருப்பது, இறைவன் அவருக்கு வழங்கியுள்ள அருள் என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.

பல்வேறு உடல்நலக் குறைவுடன் தன் 84வது ஆண்டை நிறைவுசெய்யும் அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு, இறைவன், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், பாதுகாப்பையும், தேவையான உடல், உள்ள உறுதியையும் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

24 April 2021, 13:48