தேடுதல்

திருப்பலியில் எத்தியோப்பிய திருஅவைத் தலைவர்கள் திருப்பலியில் எத்தியோப்பிய திருஅவைத் தலைவர்கள் 

60 இலட்சம் மக்களுக்கு உதவியுள்ள எத்தியோப்பிய திருஅவை

எத்தியோப்பியாவிற்குள்ளேயே 25 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தவர்களாகவும், 23 இலட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

2020ம் ஆண்டில், இனம், மதம், என்ற எல்லைகளைத் தாண்டி, 189 திட்டங்கள் வழியே, 60 இலட்சம் எத்தியோப்பிய மக்களுக்கு உதவியுள்ளதாக தலத்திருஅவையின் ஆண்டறிக்கைத் தெரிவிக்கிறது.

எத்தியோப்பியாவின் Addis Ababa பேராயர், கர்தினால் Berhaneyesus Demerew Souraphiel அவர்களின் தலைமையில் இடம்பெற்ற  ஆயர் பேரவையின், வளர்ச்சி மற்றும் சமுதாய விவகார அவையினால் நடத்தப்பட்ட மூன்று நாள் கூட்டத்தின் இறுதியில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

நல ஆதரவு, கல்வி, உணவு, மற்றும் குடிநீர் வழங்கல், அகதிகள், மற்றும் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தோருக்கு உதவி என, பல்வேறு திட்டங்களைத் தீட்டி உதவிவரும் எத்தியோப்பியத் திருஅவை, கோவிட் பெருந்தொற்று, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, வெள்ளப்பெருக்கு, ஆயுத மோதல்கள் என, பல்வேறு துயர்களால் துன்புறும் மக்களுக்கு, தங்கள் திட்டங்கள் வழி, நிவாரணத்தை வழங்கிவருகிறது.

எத்தியோப்பியாவில், துன்புறும் மக்களுக்கு, உணவு உதவிகளை வழங்கவும், உணவு சாரா பொருட்களையும், கோவிட் பாதுகாப்பு சாதனங்களையும் கத்தோலிக்க மருத்துமனை பணியாளர்களுக்கு வழங்கவும், 9 இலட்சத்து 60 ஆயிரம் டாலர் நிதி உதவிகளை வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து திரட்டியுள்ள எத்தியோப்பியத் திருஅவை, நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்த மக்களுக்கு, நிதி, மற்றும் உணவு விநியோகத்திற்கென, 19 இலட்சத்து 20 ஆயிரம் டாலர்களை மேலும் செலவிட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் Tigray பகுதியில் அந்நாட்டு இராணுவத்திற்கும்,  TPLF பிரிவினைவாத புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களால் 60,000த்திற்கும் அதிகமானோர், அண்மைய நாடான சூடானுக்குள் அடைக்கலம் தேடியுள்ளனர். அதேவேளை, 96,000த்திற்கும் அதிகமான எரித்திரியா நாட்டு மக்கள், எத்தியோப்பியாவில் அடைக்கலம் தேடி, முகாம்களில் வாழ்ந்துவருகின்றனர். எத்தியோப்பியாவிற்குள்ளேயே 25 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தவர்களாக வாழும் நிலையில், 23 இலட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2021, 13:05