தேடுதல்

Vatican News
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை விடுவிப்பதற்கு அழைப்பு அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை விடுவிப்பதற்கு அழைப்பு 

அருள்பணியாளரின் விடுதலைக்கு பிரபலங்கள் கடிதம்

எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடாதவர், நேர்மையானவர், மற்றும், ஏழை மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்தவர், பிணையல் மறுக்கப்பட்டு, இன்னும் சிறையில்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை, பிணையலில் விடுவிப்பதற்கு விடுக்கப்பட்ட விண்ணப்பம், நீதிமன்றத்தால், பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்ற விண்ணப்பத்தில், இந்தியாவின் பிரபலங்கள் 2500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி, இந்திய தேசியப் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு 9ம் தேதி முதல் மும்பையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் 84 வயதான இயேசுசபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பல்வேறு நோய்களால் அவதியுறுவதைக் காரணம்காட்டி பிணையலில் விடுதலை வழங்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது பிரபலங்கள் பலர் இணைந்து அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

மகராஷ்டிரா காவல்துறையுடனும், தேசியப் புலனாய்வு அமைப்புடனும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து செயலாற்றிவரும் அருள்பணி  ஸ்டான் சுவாமி அவர்கள் எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடாதவர் மட்டுமல்ல, நேர்மையானவர், மற்றும், ஏழை மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் என இவ்விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத் தலைநகரில் இருந்துகொண்டு, பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துவந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலைக்கு அரசை விண்ணப்பிக்கும் கடிதத்தில், இந்தியாவின் பிரபல கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், மனித உரிமை நடவடிக்கையாளர்கள் என பல்வேறு துறையினர் கையெழுத்திட்டுள்ளனர்.

05 April 2021, 11:41