தேடுதல்

Vatican News
திருத்தந்தை சக்கரியாஸ் திருத்தந்தை சக்கரியாஸ் 

திருத்தந்தையர் வரலாறு - துறவியான அரசர், அரசரான திருத்தந்தை

பதவியைத் துறந்து தன் மனைவியோடும் மகளோடும் திருத்தந்தையின் முன்னிலையில் துறவற வாழ்வு வாக்குறுதிகளுடன் துறவு வாழ்வில் புகுந்தார் மன்னர் Ratchis.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை சக்கரியாஸ் அவர்கள், ஆட்சியாளர்களிடம் மிகுந்த மதிப்பை பெற்றிருந்தார். இத்திருத்தந்தையின் தன்னலமற்ற பணியே இதற்கு காரணம். உரோம் நகரை லொம்பார்திய மன்னர் Luitprand கைப்பற்ற முயன்றபோது, இத்திருத்தந்தையே நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்தார். சண்டையை தடுத்துநிறுத்தியது மட்டுமல்ல, நான்கு நகர்களையும் மன்னரிடமிருந்து உரோமுக்கு பெற்றுத்தந்தார். அதற்கு முந்தைய 30 ஆண்டுகளில் லொம்பார்தியர்கள் கைப்பற்றிய திருஅவை சொத்துக்கள் அனைத்தையும் பெற்றுத்தந்தார். உரோமைக்கும் லொம்பார்தியர்களுக்கும் இடையே இருபதாண்டு அமைதி ஒப்பந்தத்தையும் உருவாக்கினார். கான்ஸ்தாந்திநோபிள் பேரரசு உரோமைத் திருஅவையை தன் கீழ் வைத்திருந்தபோது, லொம்பார்திய மன்னரோ ரவென்னாவின் மீது போர் தொடுத்தார். ரவென்னாவோ, கான்ஸ்தாந்திநோபிள் பேரரசின், இத்தாலியப் பிரதிநிதியின் உறைவிடம். லொம்பார்தியர்களிடம்  இருந்து ரவென்னாவைக் காப்பாற்ற கான்ஸ்தாந்திநோபிளில் இருந்து படைகள் வருமுன், ரவென்னா நகர் வீழ்ந்திருக்கும். இந்நேரத்தில்,  திருத்தந்தை சக்கரியாஸ் அவர்கள், தானே ரவென்னா சென்றார். Luitprand மன்னரை சந்தித்து, ஆக்கிரமிப்பு எண்ணத்தை கைவிட வேண்டி, ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளை, ரவென்னா நகருக்கே பெற்றுத்தந்தார். சிறிது காலத்திலேயே மன்னர் Luitprand காலமானதால், Hildebrand என்பவர், லொம்பார்தியர்களின் மன்னரானார். அவருடைய ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. அதற்குப்பின் ஆட்சிக்கு வந்தார் Ratchis என்ற மன்னர். இவர் திருத்தந்தையின் நல்ல நண்பர். உரோமை மாவட்டத்தோடு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தினார். அதோடு நிற்கவில்லை. யாரும் எதிர்பாராத ஒன்றையும் செய்தார்.

ஆம். தன் பதவியைத் துறந்து, தன் மனைவியோடும் மகளோடும் திருத்தந்தை சக்கரியாஸ் முன்னிலையில், துறவற வாக்குறுதிகளை எடுத்து துறவுவாழ்வில் புகுந்தார். திருத்தந்தை சக்கரியாஸின் காலத்தில்தான் புனித Bonifaceன் அயராத முயற்சியால், ஜெர்மனியின் அனைத்து ஆயர்களும் திருத்தந்தையின் ஒரே குடையின் கீழ் வந்தனர். ஒருமுறை வெனிஸ் நகர வியாபாரிகள் அடிமைகளைக் கொண்டுவந்து விற்க முயன்றபோது, அவர்களை தானே விலைகொடுத்து வாங்கி, அவர்களை நண்பர்களாக நடத்தியவர் இத்திருத்தந்தை. அக்காலத்திலேயே அடிமைத்தனத்தை இவ்வாறு எதிர்த்தார், திருத்தந்தை சக்கரியாஸ். 

752ல் திருத்தந்தை  சக்கரியாஸுக்குப் பின் தேர்வு செய்யப்பட்டவர், இரண்டாம் ஸ்டீபன். ஆனால் இவர் தேர்வு செய்யப்பட்ட நான்காம் நாளே இறந்துவிட்டார். அதாவது, திருத்தந்தையாக பதவியேற்பதற்கு முன்னரே இவர் இறந்துவிட்டதால், சில வரலாற்று ஆசிரியர்கள், இவர் பெயரை திருத்தந்தையர்களின் பட்டியலில் இணைப்பதில்லை. இத்தகைய ஒரு சூழலில், அதற்கு அடுத்து வந்தவரும் ஸ்டீபன் என்ற பெயரை தேர்ந்துகொண்டதால், அவரை, இரண்டாம் ஸ்டீபன் என்பதா? அல்லது 3ம் ஸ்டீபன் என்று அழைப்பதா? என்ற குழப்பம், வரலாற்று ஆசிரியர்களிடையே, இன்றும் நிலவுகிறது.

3ம் ஸ்டீபன் (இரண்டாம் ஸ்டீபன்) என்று வரலாற்று ஆசிரியர்களால் அறியப்படும் திருத்தந்தை, 752ம் ஆண்டு பதவியேற்றார். இவர், புனித மேரி மேஜர் பெருங்கோவிலில், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவியேற்ற உடனேயே,  ஒரு பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது,  அதாவது, 751ம் ஆண்டு ரவென்னா நகரைக் கைப்பற்றி கான்ஸ்தாந்திநோபிள் பேரரசரின் பிரதிநிதியின் ஆட்சியை முடிவுக்கு கொணர்ந்த லொம்பார்தியர்கள், உரோம் மாகாணத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருந்த நேரம் அது. திருத்தந்தையின் பல முயற்சிகள் தோல்வியடைந்தன. லொம்பார்தியர்கள், பழைய திருத்தந்தையுடன் ஏற்படுத்திய ஒப்பந்தங்களையெல்லாம் மீறிச் செயல்பட்டனர். இதனால், திருத்தந்தை 3ம் ஸ்டீபன், Franks (மேற்கு ஜெர்மானிய ஓர் இனத்தினரின் ஆட்சி) மன்னர் Pepinன் உதவியை நாட வேண்டியிருந்தது. மன்னர் Pepin இருமுறை ஆல்ப்ஸ் மலையைக் கடந்துவந்து திருத்தந்தைக்கு பாதுகாப்பு அளித்தார். கான்ஸ்தாந்திநோபிள் பேரரசரிடம் இருந்து கைப்பற்றிய உரோம் மாகாணத்தின் அரசு நிர்வாகத்தை திருத்தந்தைக்கு வழங்குவதாக வாக்களித்தார் மன்னர் Aistulf. இதன் வழியாக, திருத்தந்தை 3ம் ஸ்டீபன், வரலாற்றிலேயே, அரசராக பணியாற்றிய முதல் திருத்தந்தையானார்.

இவ்வேளையில், மன்னர் Aistulf மரணமடைய, அவருக்குப்பின் தெசிதேரியுஸ் (Desiderius) என்பவர் மன்னராக முடிசூட்டிக்கொள்ள விரும்பினார். திருஅவைக்கு எதிராக லொம்பார்தியர்கள் செல்வதைக் கண்ட Ratchisம் அரியணையைக் கைப்பற்ற விரும்பினார். இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. Ratchis என்பவர், இறந்த மன்னர் Aistulfன் சகோதரர் மட்டுமல்ல, மன்னராக இருந்து, பின்னர் திருத்தந்தையின் முன்னிலையில், தன் மனைவியுடனும், மகளுடனும், துறவு வாழ்வுக்குள் புகுந்தவர் இவர். துறவியான இவர், இப்போது அரியணையை திரும்பப்பெற போட்டியாளராக வந்தார். அரியணைக்கு போட்டியிட்ட இன்னொருவரான தெசிதேரியுஸ், உடனே, திருத்தந்தையிடம் தஞ்சமடைந்தார். கான்ஸ்தாந்திநோபிள் பேரரசரிடமிருந்து கைப்பற்றிய பல நகர்களை திருஅவைக்கே வழங்கிவிடுவதாக வாக்களித்தார். சண்டையை விரும்பாத திருத்தந்தை 3ம் ஸ்டீபன் அவர்கள், உடனேயே, தன் பிரதிநிதிகளை அனுப்பி, துறவி Ratchisஐ சந்தித்து, துறவு வாழ்வுக்கே திரும்ப வைத்தார். 749ல் Monte Cassino துறவுமடத்தில் துறவியாக புகுந்த Ratchis, தற்போது அரியணையைக் கைப்பற்றும் போட்டியைக் கைவிட்டு, திருத்தந்தையின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு 757ல் மீண்டும் துறவு மடத்துக்குள் புகுந்தார். இதனால் 757 மார்ச்சில்  தெசிதேரியுஸ் லொம்பார்தியர்களின் மன்னரானார். ஆனால்,  மன்னர் தெசிதேரியுஸ் தன் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றவில்லை. திருத்தந்தையை ஏமாற்றிவிட்டார். திருத்தந்தையும் அதே ஆண்டு ஏப்ரல் 26ந்தேதி காலமானார்.

திருத்தந்தை 3ம் ஸடீபனுக்குப்பின் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அவரின் சகோதரர் திருத்தந்தை முதலாம் பவுல். இவர் தன் சகோதரரைப்போல் உரோமையின் மீதும் இத்தாலியின் மத்திய மாவட்டங்கள் மீதும் முழு அதிகாரத்தை, அதாவது ஒரு மன்னருக்குரிய அதிகாரங்களைக் கொண்டிருந்தார். இதனை லொம்பார்தியர்களும் கான்ஸ்தாந்திநோபிள் பேரரசும் எதிர்த்தனர். இதற்கிடையில் மன்னர் Pepinக்கு பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அது இறைவனின் கொடையே என மகிழ்ந்த மன்னர் Pepin, திருத்தந்தைக்கு பரிசுகளை அனுப்பிவைத்தார். அதுமட்டுமல்ல, தன் வாக்குறுதிகளை காப்பாற்றத்தவறிய தெசிதேரியுஸ் மன்னரிடமிருந்து திருச்சபை சொத்துக்களை திரும்பப் பெற்றுத்தரவும் ஆவல் கொண்டார். ஆனால், அரசியல் சதுரங்கத்தில் காட்சிகள் மாறின. இப்போது, லொம்பார்தியர்கள், கான்ஸ்தாந்திநோபிள் பேரரசர், Franks மன்னர் Pepin, உரோமை மன்னர் திருத்தந்தை, என நான்கு பிரிவுகளாக அரச நிரவாகம் இருந்த நிலை, பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. இம்மாற்றங்களைக் குறித்து அடுத்தவாரம் காண்போம்.

07 April 2021, 15:58