தேடுதல்

நைஜீரியாவில் எரிசக்தி எண்ணெய்  குழாய்கள் நைஜீரியாவில் எரிசக்தி எண்ணெய் குழாய்கள் 

எரிசக்தி எண்ணெய் உருவாக்கும் உயிர் பலிகள்

வாழ்வாதாரங்கள் பலவும் பாதிக்கப்படுவதுடன், நோய்களுக்கும் காரணமாகும், எரிசக்தி எண்ணெய் எடுக்கும் தொழிலை நிறுத்த, நைஜீரிய அரசுக்கு விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நிலத்தடியிலிருந்து எரிசக்தி எண்ணெயை எடுக்கும் முயற்சியில் நைஜீரிய அரசு, ஆற்று முகப்பு விளைநிலங்களை பாழாக்கியுள்ளதுடன், பலரை நோய்க்கு பலியாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார், நைஜீரிய ஆயர் ஒருவர்.

குழாய்கள் வழியாக எரிசக்தி எண்ணெயை வெளியே எடுக்கும் முயற்சியில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களும், எரிசக்தி எண்ணெய் சிதறல்களும் தண்ணீரில் கலப்பதால், அதை குடிக்கும் மக்கள் புற்றுநோயால் இறந்துவருவதாக உரைத்த நைஜீரியாவின் Bomadi ஆயர் Hyacinth Egbebo அவர்கள், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு பேரிழப்பை உருவாக்கிவருகின்றன என்று கூறியுள்ளார்.

தண்ணீர் மாசுக்கேட்டினால், தன்னுடைய உறவினர்கள் சிலரே புற்றுநோய்க்கு பலியாகியுள்ளதாக உரைத்த ஆயர் Egbebo அவர்கள், ஆற்றுப்படுகைகளில் வாழும் சமுதாயங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து, மக்கள் இறப்புக்கான காரணங்களும், புற்றுநோய் பாதிப்புக்களும், தெளிவாகத் தெரியவந்துள்ளதாக உரைத்தார்.

எரிசக்தி எண்ணெயை எடுத்துச்செல்லும் கப்பல்களும், எண்ணெயை ஒழுகவிட்டு, தண்ணீரை மாசுபடுத்துவதால், மீன்பிடித் தொழிலை நம்பியிருக்கும் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என உரைக்கும் ஆயர், வாழ்வாதாரங்கள் பலவும் பாதிக்கப்படுவதுடன், நோய்களுக்கும் காரணமாகும் இந்த எரிசக்தி எண்ணெய் எடுக்கும் தொழிலை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குரலை உயர்த்தும்போது, இராணுவத்தால் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார், ஆயர்  Egbebo.

எரிசக்தி எண்ணெய் எடுக்கப்படும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு சாலை, மின்சாரம், குடிநீர் என எந்தவித வசதிகளையும் செய்து கொடுக்காத அரசு, வளங்களை சுரண்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்த ஆயர் Egbebo அவர்கள், வளர்ச்சித்திட்டங்களிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் நைஜீரிய அரசு தனிக்கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2021, 11:46