தேடுதல்

Vatican News
கர்தினால் சார்லஸ் மாங் போ கர்தினால் சார்லஸ் மாங் போ 

21ம் நூற்றாண்டின் கல்வாரியைக் காணும் மியான்மார்

கர்தினால் போ : மியான்மார் நாட்டு மக்களின் சிலுவைப் பயணம் வீணாகிவிடாது என்ற நம்பிக்கையுடன், சுதந்திரம், மற்றும், மக்களாட்சியின் உயிர்ப்பு நோக்கிச் செல்வோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இராணுவம், மற்றும், பாதுகாப்புத் துறையின் இரக்கமற்ற படுகொலைகளைக் கண்டுவரும் மியான்மார் மக்கள், நம்பிக்கையைக் கைவிடாமல், தொடர்ந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ.

பாஸ்காத் திருவிழா திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் போ அவர்கள், மியான்மார் நாட்டு மக்கள், தங்கள் சிலுவைப் பயணம் வீணாகிவிடாது என்ற நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, சுதந்திரம், மக்களாட்சி, அமைதி, வளம் ஆகியவற்றின் உயிர்ப்பை காணமுடியும் என உரைத்தார்.

குழந்தைகள் உட்பட,  நுற்றுக்கணக்கானோர் மியான்மார் நாட்டில் கொல்லப்பட்டுள்ளனர், என்றும், இந்த புனித பூமியில் இரத்த ஆறு ஓடியுள்ளது என்றும் கூறிய கர்தினால் போ அவர்கள், உயிர்ப்பு என்பது நம்பிக்கையை நினைவூட்டுவது என்பதால், நாட்டை குணப்படுத்தும் பாதையை இப்போதே துவக்குவோம் என அழைப்பு விடுத்தார்.

தெருக்களில் இளையோரைக் கொன்று நடத்தப்பட்ட போர், மனித மாண்புக்கு எதிரானது மட்டுமல்ல, இரக்கமற்ற கொலைகளும், சித்திரவதைகளும், மனித உரிமை மீறல்களும் 21ம் நூற்றாண்டின் கல்வாரியை உருவாக்கியுள்ளன எனவும் எடுத்துரைத்தார் மியான்மார் கர்தினால்.

இளையோரின் போராட்டம், மக்களாட்சிக்கு உரியது மட்டுமல்ல, இது மனித குலத்திற்கானது என உரைத்த கர்தினால் போ அவர்கள், வன்முறையற்ற வழிகளில் போராடுமாறும், தேவையின்றி உயிரிழக்கவேண்டாம் என்றும் இளையோரைக் கேட்டுக்கொண்டார்.

இராணுவ ஆடசி இடம்பெற்றுவந்த மியான்மார் நாட்டில், 10 ஆண்டுகால மக்களாட்சிக்குப்பின், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் இராணுவ ஆடசி மீண்டும் இடம்பெற்று வருகிறது. இதில் 44 குழந்தைகள் உட்பட 557 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 2600க்கும் மேற்பட்டோர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

05 April 2021, 11:35