தேடுதல்

மியான்மார் இராணுவத்திற்கு எதிராக மியான்மார் இராணுவத்திற்கு எதிராக 

மதத் தலைவர்களை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்க முயலும் மியான்மார்

மியான்மாரிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும், புத்த மதக் கோவில்களிலும் அத்துமீறி நுழைந்து சோதனைகளை நடத்தும் மியான்மார் இராணுவம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

வன்முறையாளர்கள் மறைந்திருக்கின்றனர், அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்ற காரணம் காட்டப்பட்டு, மியான்மாரில், கிறிஸ்தவ, மற்றும், புத்தமதக்  கோயில்கள் இராணுவத்தால் திடீர் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

மியான்மாரிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களும், புத்தமதக் கோவில்களும் திடீர் திடீரென இராணுவத்தால் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக உரைக்கும் மதத் தலைவர்கள், கச்சின் மாநிலத்தில் இது அதிகமாக இடம்பெறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Mohnyin நகரிலுள்ள கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் மற்றும், பாப்பிடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயங்களில் அத்துமீறி நுழைந்து சோதனைகளை நடத்தியுள்ள மியான்மார் இராணுவம், மியான்மார் நாடு முழுவதிலுமுள்ள புத்த கோவில்களிலும், துறவு இல்லங்களிலும் புகுந்து திடீர் சோதனைகளை நடத்தியுள்ளது.

மத விடுதலைக்கு எதிராக இராணுவத்தால் நடத்தப்படும் இந்தச் சோதனைகளில், ஆயுதங்களைப் புனித இடத்திற்குள் கொணர்ந்து, அவைகளை வன்முறைகளின் இடங்கள்போல் நடத்துவது, அனைவருக்கும் கவலைதருவதாக உள்ளது எனக்கூறும் மதத்தலைவர்கள், மக்களையும் மதத்தலைவர்களையும் அச்சுறுத்தி அடக்கி ஒடுக்க, இந்த வழிமுறையை அரசு கையாள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இளையோரும், மக்களாட்சி ஆதரவுத் தலைவர்களும், அடையாளம் காணப்பட்டு, இராணுவத்தால் தாக்கப்படுவதாகவும் கவலையை வெளியிட்டுள்ளனர், கிறிஸ்தவ மற்றும், புத்தமதத் தலைவர்களும், மனித உரிமை நடவடிக்கையாளர்களும்.

உண்மையையும் நீதியையும் போதிக்கும் கிறிஸ்தவ, புத்த, இந்து, மற்றும், இஸ்லாம் வழிபாட்டு இடங்கள், இராணுவ அத்துமீறல் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவது, மத உணர்வுகளைக் காயப்படுத்துவதாகவும், அச்சுறுத்தலை வழங்குவதாகவும் உள்ளதாக, மியான்மார் மதத்தலைவர்கள், தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் Lashio எனுமிடத்தில் உள்ள பாப்பிஸ்ட் கிறிஸ்தவ கோவிலுக்குள் புகுந்த இராணுவத்தினர், துப்பாக்கியை பயன்படுத்தி, மேல் நோக்கி சுட்டு பயமுறுத்தியதுடன், 10 பேரை கைதுசெய்து, இரண்டு நாள் சிறையில் வைத்து, பின் விடுவித்துள்ளனர். (Fides)

 

10 April 2021, 15:01