தேடுதல்

கோவிட்-19  தடுப்பூசி போடுவதற்கு காத்திருக்கும் மும்பை மக்கள் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு காத்திருக்கும் மும்பை மக்கள் 

மருத்துவ ஆக்சிஜனை நோயாளிகள் பெறுவது, அடிப்படை உரிமை

இந்தியாவில் ஒரே நாளில் 2812 பேர் கோவிட் நோய்க்குப் பலியாகியுள்ளனர், 3 இலட்சத்து 52 ஆயிரத்து 991 பேர், இந்நோயை புதிதாகப் பெற்றுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

மருத்துவ ஆக்சிஜன் வாயு கையிருப்பு இல்லாததால், கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து திருப்பி அனுப்பப்படும் நிலையில், மருத்துவ ஆக்சிஜனை நோயாளிகள் பெறுவது, அவர்களின் அடிப்படை உரிமையாக கருதப்பட வேண்டும் என, இந்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார், கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி.

வாழ்வைக் காப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் வாயு கையிருப்பு இல்லாததால் பல நூற்றுக்கணக்கான் பெருந்தொற்று நோயாளிகள் உயிரிழந்து வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட சீரோ மலபார் வழிப்பாட்டுமுறை தலைவர், கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், மருத்துவமனைகளிலும் மருத்துவ மையங்களிலும் போதிய மருத்துவ ஆக்சிஜன் வாயு இன்மையால் துயர்களைச் சந்திக்கும் மக்களுக்கு உதவும் வகையில், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.

போதிய மருத்துவ ஆக்சிஜன் வாயு கையிருப்பு இன்மையாலும், போதிய படுக்கை வசதிகள் இன்மையாலும் இந்தியாவின் பல மருத்துவமனைகள், நுற்றுக்கணக்கான கோவிட் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்து, வீட்டுக்கு திருப்பி அனுப்பி வருவது, ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்தே இடம்பெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக இத்தொற்றுநோயைப் பெற்றுவருவதும், மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு இன்மையால் மருத்துவமனைகளில்கூட நோயாளிகள் உயிரிழப்பது தொடர்ந்து வருவதும் குறித்து கவலையை வெளியிட்ட கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படை உரிமைகளின் பட்டியலில், மருத்துவ ஆக்சிஜன் வாயுவும் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஏப்ரல் 26, இத்திங்கள்கிழமை மட்டும், 2812 பேர் கோவிட் நோய்க்குப் பலியாகியுள்ளனர், 3 இலட்சத்து 52 ஆயிரத்து 991 பேர் இந்நோயை புதிதாகப் பெற்றுள்ளனர். இந்தியாவில், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1 கோடியே 70 இலட்சத்தை தாண்டியுள்ளது எனவும், இறப்புக்களின் எண்ணிக்கை, ஏறக்குறைய ஒரு இலட்சத்து 98,000 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2021, 14:41