தேடுதல்

நைரோபி ஆற்றங்கரையில் மரம் நடுகின்றனர் நைரோபி ஆற்றங்கரையில் மரம் நடுகின்றனர் 

கென்யாவில், சூழலியலைப் பாதுகாப்பதற்கு, வறியோரின் குரலுக்கு...

கென்யா நாட்டு பருவமழைக் காடுகள், அமேசான் பகுதி போன்றவை. இந்தக் காடுகளைப் பாதுகாப்பது, உலகளாவிய வெப்பநிலை உயர்வு பிரச்சனையைக் களைவதற்கு உதவும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கென்யா நாட்டிலும், ஆப்ரிக்க கண்டம் முழுவதிலும், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலையும், காடுகள் அழிவைத் தடுக்கும் திட்டங்களையும், ஊக்குவித்து வருவதாக, கப்புச்சின் துறவு சபை அருள்பணியாளர் Benedict Ayodi அவர்கள் கூறியுள்ளார்.

உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கத்தின் (GCCM), ஆப்ரிக்க அமைப்பிற்குத் தலைவராகப் பணியாற்றிவரும் அருள்பணி Benedict Ayodi அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய பேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டில் வெளியிட்ட, இறைவா உமக்கே புகழ் எனப்படும், Laudato si' திருமடல் பற்றிய சிந்தனைகளையும், ஆப்ரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றியும், அருள்பணி Ayodi அவர்கள், அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கென்யாவின் பருவமழைக் காடுகள்

200 சதுர கிலோ மீட்டருக்கு மேற்பட்ட அளவைக் கொண்டிருக்கும் கென்யாவின் பருவமழைக் காடுகள், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதி என்றும், இப்பகுதியின் தரிசுநிலங்களில், மூவாயிரத்திற்கு மேற்பட்ட பழங்குடி இன மக்களின் மரங்கள் நடப்பட்டுள்ளன என்றும், அருள்பணி Ayodi அவர்கள் குறிப்பிட்டார்.  

உள்ளூர் மக்கள், பங்குத்தளங்கள், காரித்தாஸ் அமைப்பு, ஆங்கிலக்கன் கிறிஸ்தவ சபை போன்றவற்றின் ஒத்துழைப்போடு, மற்ற பகுதிகளில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன என்றும், அந்த கப்புச்சின் அருள்பணியாளர் கூறியுள்ளார்.

"நம் பூமியைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில் இடம்பெறும் 2021ம் ஆண்டின் உலக காடுகள் நாள், மற்றும், ஏப்ரல் 22, வருகிற வியாழனன்று சிறப்பிக்கப்படும் பூமி நாள் ஆகிய முக்கிய நாள்களோடு ஒத்திணங்கும் முறையிலும், மரம் நடும் இந்த திட்டத்தைச் செயல்படுத்தினோம் என்றும், அருள்பணி Ayodi அவர்கள், கூறியுள்ளார்.

கென்யா நாட்டு பருவமழைக் காடுகள், அமேசான் பகுதி போன்றவை என்றும், இந்தக் காடுகளைப் பாதுகாப்பது, ஆப்ரிக்கா முழுவதற்குமே, பல்வகை உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய வெப்பநிலை உயர்வு பிரச்சனையைக் களைவதற்கும் முக்கியம் என்பதை, அருள்பணி Ayodi அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2021, 15:35