தேடுதல்

Vatican News
கென்யாவின் Kakuma புலம்பெயர்ந்தோர் முகாம் கென்யாவின் Kakuma புலம்பெயர்ந்தோர் முகாம் 

புலம்பெயர்ந்தோர் முகாம்களைத் திறக்க ஆயர்கள் அழைப்பு

சொமாலியா மற்றும், தென் சூடான் நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த 4,10,000 பேர், Dadaab, Kakuma ஆகிய இரு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்க நாடாகிய கென்யாவின் வடபகுதியில், இரு புலம்பெயர்ந்தோர் முகாம்களை மூடுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள திட்டம், நிறுத்திவைக்கப்படுமாறு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டுப் போர், பஞ்சம் போன்ற காரணங்களால், சொமாலியா மற்றும், தென் சூடான் நாடுகளிலிருந்து தஞ்சம் புகுந்த மக்களுக்கென்று திறக்கப்பட்ட Dadaab, Kakuma ஆகிய இரு முகாம்களில், ஏறத்தாழ நான்கு இலட்சத்து பத்தாயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இன்னும் 14 நாள்களுக்குள் இந்த இரு முகாம்களையும் மூடவேண்டும் என்று, கென்யா அரசு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின், புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கு ஆணையிட்டிருப்பதையடுத்து, கென்யா ஆயர்கள், இவ்வாறு அரசுக்கு விண்ணப்பம் விடுத்துள்ளனர்.

Dadaab மற்றும், Kakuma முகாம்களை, மிகக் குறைந்த கால அவகாசத்தில் மூடவேண்டும் என்று கூறியிருப்பது வருந்தத்தக்கது மற்றும், பரிதாபத்திற்குரியது என்று கூறியுள்ள ஆயர்கள், இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்றுரைத்த கென்யா ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Philip Anyolo அவர்கள், இந்த கோவிட்19 காலத்தில், சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களை அரவணைத்து, பாதுகாப்பு அளிக்கவேண்டியது அரசின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, அல்-கெய்தா தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய, கிழக்கு ஆப்ரிக்காவில் இயங்கும் al-Shabab என்ற அமைப்பு, தனக்கென ஆள்களைத் தேர்வுசெய்யும் இடமாக Dadaab புலம்பெயர்ந்தோர் முகாமை மாற்றியுள்ளது என்று சொல்லி, 2016ம் ஆண்டிலே அதனை மூடுவதற்கு, கென்யா அரசு முதலில் திட்டமிட்டிருந்தது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. (UCAN)

13 April 2021, 15:06