தேடுதல்

வெனெசுவேலாவில் தடுப்பூசி போடப்படுகின்றது வெனெசுவேலாவில் தடுப்பூசி போடப்படுகின்றது 

கோவிட்-19ஆல் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் அதிகம் பாதிப்பு

வெனெசுவேலா நாட்டு மக்கள் புலம்பெயர்ந்தது, அண்மை வரலாற்றில் சிரியாவுக்கு அடுத்தபடியாக, இடம்பெற்றுள்ள மிகப்பெரிய புலம்பெயர்வு - JRS

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக மக்கள் தொகையில் 8.4 விழுக்காட்டினரைக் கொண்டிருக்கும், இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதியே, உலகில், கோவிட்-19 பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி என்றும், உலக அளவில் இந்நோயால் இடம்பெற்றுள்ள மரணங்களில் 28 விழுக்காடு, அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய இயேசு சபையின், JRS எனப்படும் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதி கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பகுதி நாடுகள், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகளில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்கா, மற்றும், கரீபியன் பகுதியில், அதிகமாக நிலவும் சமத்துவமின்மை, சமுதாயப் பாதுகாப்பின்மை, வறுமை, நிரந்தரமற்ற வேலை போன்ற அமைப்புமுறை பிரச்சனைகள், பெருந்தொற்று பரவலை அதிகரித்துள்ளன என்றும், அவ்வறிக்கை கூறுகிறது.

அந்த அமைப்புமுறைகள், கோவிட்-19 பெருந்தொற்று பரவலை அதிகரித்துள்ளதோடு, பொருளாதார மற்றும், சமுதாயப் பாதிப்புக்களையும் மோசமாக்கியுள்ளன என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.  

புலம்பெயர்வு, பல்வேறு விதமான மோதல்கள், காலநிலை மாற்றத்தின் எதிர்த்தாக்கங்கள் போன்ற பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டியுள்ள JRSன் அறிக்கை, வெனெசுவேலா நாட்டு மக்கள் புலம்பெயர்ந்தது, அண்மை வரலாற்றில் சிரியாவுக்கு அடுத்தபடியாக, இடம்பெற்றுள்ள மிகப்பெரிய புலம்பெயர்வு என்றும் கூறுகின்றது. (Fides)

இதற்கிடையே, மூன்று இலட்சத்து எண்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பியிருப்பதாக, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம், ஏப்ரல் 08, இவ்வியாழனன்று அறிவித்துள்ளது.(UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2021, 14:45