தேடுதல்

இறை இரக்க இயேசு இறை இரக்க இயேசு 

நேர்காணல்: இறை இரக்க பக்தி

போலந்து நாட்டு அருள்சகோதரி, புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள், இறை இரக்கத்தின் தூதர்

மேரி தெரேசா: வத்திக்கான்

போலந்து நாட்டு அருள்சகோதரி, புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள், (ஆக.25,1905– அக்.05,1938), ஓர் இறைக்காட்சியாளர். இறை இரக்க இயேசுவை இவர் காட்சிகளில் கண்டு, அவற்றில் இயேசு அவருக்கு கூறியவற்றை வெளிப்படுத்தியதன் பயனாக, இன்று உலகெங்கும் இறை இரக்கப் பக்தி பரவியுள்ளது. இவர், இறை இரக்கத்தின் தூதர் என்று அழைக்கப்படுகிறார். திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், அருள்சகோதரி பவுஸ்தீனா அவர்களை, புனிதராக அறிவித்து, திருஅவையில், உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்துவரும் ஞாயிறு, இறை இரக்க ஞாயிறாகச் சிறப்பிக்கப்படுமாறும் அறிவித்தார். உரோம் மாநகரில் வத்திக்கானுக்கு அருகில் அமைந்துள்ள Santo Spirito in Sassia என்ற ஆலயம், இறை இரக்க ஆன்மீக மையமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த ஆலயத்தில் ஏப்ரல் 11, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறை இரக்க ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றி, இறை இரக்கத்தின் வல்லமையை அறிவித்தார். இறை இரக்கத்தின் தூதர், ஏழைகளின் தோழர் என அழைக்கப்படும் இயேசு சபை இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்கள், ஓ! இயேசுவே,  அன்பின் அரசரே, உமது அளவில்லா இரக்கத்தில் நம்பிக்கை வைக்கிறேன் என்று, செபிக்க கற்றுக்கொடுத்தவர். 1884ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர், சிவகங்கை மறைமாவட்டத்தில் 52 ஆண்டுகள் உட்பட, இந்தியாவில் 65 ஆண்டுகள் மறைப்பணியாற்றி, 1973ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார். இவ்வாறு இறை இரக்க பக்தியை உலகெங்கும் பரப்பியிருப்பவர்களில் சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இன்று, அருள்சகோதரி மெரினா மேரி அவர்கள், இறை இரக்க பக்தியின் வரலாறு பற்றியும், தனது வாழ்வின் இறை இரக்க பக்தி அனுபவம் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார். சகோதரி மெரினா மேரி அவர்கள், திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சார்ந்தவர்.

இறை இரக்க பக்தி – அ.சகோ.மெரினா மேரி மஊச

இறை இரக்க பக்தி - அருள்சகோதரி மெரினா மேரி மஊச

உங்கள் வானகத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள் என்பது நமதாண்டவர் இயேசு கிறிஸ்து நமக்குச் சொன்ன செய்தி. வானகத்தந்தை மட்டுமல்ல, அவர்தம் மகன் இயேசு கிறிஸ்துவும் இரக்கம் நிறைந்தவர். இரக்கத்தின் பிறப்பிடமும் ஊற்றும், வற்றாத அருவியும் அவரே என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. அவரைப் போல நாமும் இரக்கமுள்ளவர்களாய் வாழ அழைக்கின்றார். உண்மையான இரக்கம் என்பது, எதையாவது எவருக்காவது கொடுப்பதல்ல, எது தேவையோ அதை, உரிய நேரத்தில் உரியவர்களுக்கு கொடுப்பதே. வானகத்தந்தை தன் மகன் இயேசுவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார், இயேசு தம் அன்புப் பிள்ளைகளாகிய நம்மீது அன்பு கொண்டிருக்கிறார். அவர் எவ்வாறு வாழ்ந்தாரோ அதைப் போல நாமும் வாழ வழிகாட்டிச் சென்றிருக்கிறார். வார்த்தைகளாகச் சொன்னால் போதாது என்று எண்ணி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அவரது இரக்கம் அளவற்றது. அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இறந்து உயிர்த்த பின்னும், அவரது இரக்கம் நம்மேல் நிலைத்து இருக்கிறது. இதை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கவே ஒவ்வோர் ஆண்டும் உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின்வரும் ஞாயிறு இறை இரக்க ஞாயிறாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

புனித மரிய பவுஸ்தினா கோவால்ஸ்கா

இறை இரக்க பக்தி என்பது, மிகவும் வலிமையானது. இதனை உணர்ந்து பின்பற்றுபவர்கள் ஏராளமான நன்மைகளை தங்களது வாழ்வில் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இறை இரக்க பக்தி உலகமெங்கும் மிக வேகமாகப் பரவ பலர் காரணமாக் இருந்திருக்கின்றனர். சகோதரி தெரேசா 1897, சகோதரி பெனினா கொன்சொலாத்தா 1916, சகோதரி மெண்டஸ் 1923, சகோதரி மரிய பவுஸ்தினா கோவால்ஸ்கா 1938... இப்படி பலருக்கு இறை இரக்க ஆண்டவர் காட்சி தந்து தனது பக்தியை பரப்பும் பணியை செய்யச் சொல்லி இருக்கிறார், இருந்தாலும் சகோதரி  பவுஸ்தினா அவர்களிடம் இப்பணி மிகச்சிறப்பாக அளிக்கப்பட்டது. அவரும் இப்பணியை மிக ஆர்வத்துடன் ஏற்று அதைத் திறம்பட செய்தும் முடித்தார். இன்று இறை இரக்க ஆண்டவரின் உருவமும் செபமும் நம் கைகளில் தவழ்வதற்கு மிகப் பெரிய காரணம் சகோதரி பவுஸ்தினா அவர்களே. இவர் போலந்து நாட்டில் 1905 ம் ஆண்டு ஆகஸ்டு 25ம் நாள் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே தனது பள்ளிக் கல்வியைப் பயில முடிந்தது. பிறப்பிலேயே தாழ்ச்சியையும் எளிமையையும் தன்னகத்தே கொண்ட இச்சகோதரி துறவியாக வேண்டும் என்று எண்ணினார். தனது ஆசையை தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். மும்முறை இவ்வாறு தன்னுடைய ஆசை மறுக்கப்பட்டு, இறுதியில்  பெற்றோரிடம் அனுமதியும் பெற்றார். இறை இரக்கத்தின் அன்னை மரியா சபையில் சேர்ந்தார். 1928ல் முதல் வார்த்தைப்பாடும். 1933ல் இறுதி வார்த்தைப்பாடும் பெற்றார். இவர் இறுதி வார்த்தைப்பாடு பெறும் முன்னரே இவரது எளிமை, மறைந்த வாழ்வு, தவவாழ்வு, தாழ்ச்சி, இரக்கம் போன்ற பல புண்ணியங்களினால் தன்னுடைய வாழ்வுக்கு வளமை சேர்த்தார். 1931ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாள் இறை இரக்க ஆண்டவர் இவருக்கு முதன்முறையாக காட்சி அளித்தார்.

மாலை வேளையில் தன்னுடைய அறையில் இருந்தபோது வெண்ணிற ஆடை அணிந்தபடியும், தனது வலது கையை உயர்த்தி ஆசீர்வதிப்பது போலவும், இடது கை விரலால் ஒளிக்கதிர் வெளிவரும் தன்னுடைய மார்பின் ஆடைப் பகுதியை தொட்டவாறும் இயேசு கிறிஸ்து இவருக்குக் காட்சி அளித்தார். தன்னுடைய இந்த காட்சியை "இயேசுவே நான் உம்மை நம்புகிறேன்" என்ற வார்த்தைகளோடு படமாக வரையுமாறு கூறியுள்ளார். 1938ம் ஆண்டு வரை அவரது காட்சிகள் நீடித்தன. ஒவ்வொரு முறையும் தனது இரக்கம் நிறைந்த இதயத்தை நாடிவர மன்றாட்டுக்கள், செபங்கள், விண்ணப்பங்கள், என அனைத்தையும் வெளிப்படுத்தி அனைவரையும் அன்போடு அழைக்கிறார். சகோதரி அவர்களின் காட்சிப் பற்றிய குறிப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலக மக்கள் அனைவரும் இறை இயேசுவின் இரக்க ஊற்றில் மூழ்கித் திளைக்க  மிக முக்கிய காரணரும், முதன்மையானவருமான சகோதரி 1938ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் இறைபதம் அடைந்தார். அந்த இரக்கத்தின் முழுமையிலும் இணைந்துவிட்டார். திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் 1968ம் ஆண்டில் முக்திபேறு பட்டமும், 2000மாம் ஆண்டில் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டு சிறப்புற்றார்.

புனித பவுஸ்தீனா கோவால்ஸ்கா
புனித பவுஸ்தீனா கோவால்ஸ்கா

இறை இரக்கம்

புனித பவுஸ்தீனா அவர்கள், இறை இரக்க பக்தியை பற்றி கண்ட காட்சிகளைப் பற்றி மூன்று வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், இயேசுவின் இரக்கத்தை நாடுங்கள், இரக்கமுள்ளவர்களாய் இருங்கள், உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள் என்று சொல்லலாம். கடவுள் எல்லாரையும் அன்பு செய்கின்றார். நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், அவரது அளவிட முடியாத இரக்கம் நம்மீது பாய்ந்தோடி வரும். நம் பாவங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறது அவ்வளவுக்கு அவரிடம் இருந்து இரக்கத்தைப் பெறும் உரிமையும் அதிகமாக நமக்கு இருக்கிறது. அவர் நமக்குக் கூறுவது, ஆழம் காண முடியாத எனது இரக்கத்தில் நம்பிக்கை வையுங்கள். எல்லாரையும் மீட்கவே நான் விரும்புகிறேன். எனது இரக்க ஊற்று சிலுவை மரத்தில் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் இரக்கம் பெற்றது போல், பிறரிடமும் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள். மன்னிப்பு பெற்றீர்கள் மன்னியுங்கள். இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்ற வரிகளுக்கு வாழ்வு கொடுத்து வாழ்ந்தவர் புனித புனித அன்னை தெரேசா. இரக்கத்தின் மறு உருவாய் வாழ்ந்து காட்டியவர். இவர்களைப் போல இன்றும் இரக்கத்தின் வெளிப்பாடாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். இவர்கள் அனைவரும் இயேசு தரும் இரக்கத்தின் ஒளிச்சுடரை வாங்கி பிரதிபலிக்கும் ஒளி பிம்பங்கள். பிம்பங்களின் சுடரே நம்மை வியக்க வைக்கும் பொழுது உண்மையான ஒளிச்சுடரின் பிரகாசம் வியப்பின் உச்சிக்கே நம்மை இட்டுச்செல்லும். இன்று உலகமெங்கும் இறை இரக்க பக்தி சுடர்விட்டு ஒளிவிடுகின்றது. சில பேராலயங்களில் ஒவ்வொரு நாளும் பிற்பகல் மூன்று மணிக்கு இரக்கத்தின் செபமாலை, மன்றாட்டு பிரார்த்தனை பக்தியோடு செபிக்கப்படுகிறது. இறை இரக்க நவநாள் கடைப்பிடிக்கப்பட்டு இரு திருவிழா தேர்ப்பவனியோடு கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற கிறிஸ்து அரசர் ஆலயங்கள், திரு இருதய ஆலயம், மற்றும், பிற ஆலயங்களில் இறை இரக்க ஆண்டவர் இயேசுவுக்கென்று சிறு பீடங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாறாக இறை இரக்கத்தின் ஒளிச்சுடர் உலக மக்கள் அனைவரையும் இறுக அணைத்துக் காத்துக்கொண்டிருகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பங்களிலும் இறை இரக்கத்தின் ஆண்டவர் படம் வைக்கப்பட்டு செபிக்கப்படுகிறது. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றால் கொண்ட மூளை, வேலை செய்யக் கூடிய கைகள், இவை மூன்றும் சராசரி மனிதனுக்கு மிகத் தேவை. இரக்கமில்லா மூளையும் வேலையும் ஒன்றுக்கும் உதவாது. இரக்கம் இருந்தால் மட்டுமே, மூளையும் வேலையும் திறம்பட செயல்பட முடியும்.

தனிப்பட்ட வாழ்வில் இறை இரக்க பக்தி

இறை இரக்க ஆண்டவரின் பக்தி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிறு வயது முதலே என் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்த செபம், இயேசுவே இரட்சியும் என்பது. என்ன செய்தாலும் இயேசுவே இரட்சியும் என்று நான் சொல்லத் தவறியதில்லை. பொருள் புரியாமல் தொடக்கத்தில் சொன்னது அதன் அர்த்தம் தெரிந்ததும் அதனை அதிகமாக சொல்லத் தோன்றியது. பிற்பகல் மூன்று மணிக்கு கோவிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் சிலுவை அடையாளம் வரைவது, இரக்கத்தின் செபமாலை செபிப்பது, முடியவில்லை என்றால் இருக்கும் இடத்தில் இருந்தபடியே இயேசுவே என் மேல் இரக்கமாயிரும் என்று கூறுவது.. இப்படியாக நான் இறை இரக்க பக்தியில் வளர்ந்து வந்திருக்கிறேன். இப்போதும்கூட மனதிற்கு மிக கவலையாக, சோர்வாக இருக்கும் சமயத்தில் எல்லாம், இயேசுவே உமது பெயரில் என் நம்பிக்கையை  வைக்கிறேன் என்று சொல்வதுண்டு. எண்ணாற்ற நன்மைகளை நான் பெறுவதற்கு மிக முக்கிய காரணம் இறை இரக்கம் என்று சொல்லலாம். எனது வாழ்விற்கு உரமூட்டும் இயேசுவின் இரக்கம் உங்களது வாழ்விற்கு உரமூட்ட அருள் பொழிய செபிக்கிறேன். உலகமெங்கும் இருக்கும் அனைத்து மக்களையும் தனது அருளிரக்கத்தால் ஒன்றிணைக்கத் துடிக்கும் இயேசுவின் அன்பு நம்மையும் அவரோடு ஒன்றிணைக்கட்டும். இறை இரக்கத்தால் எண்ணற்ற நன்மைகளை நாளும் பெற்று நலமுடன் வாழ்வோம். (அருள்சகோதரி மெரினா மேரி மஊச)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2021, 14:55