தேடுதல்

Vatican News
ஏப்ரல் 24, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ASEAN கூட்டம் நடைபெற்ற இடத்தில், மியான்மாருக்கு ஆதரவாக போராட்டம் ஏப்ரல் 24, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ASEAN கூட்டம் நடைபெற்ற இடத்தில், மியான்மாருக்கு ஆதரவாக போராட்டம்   (AFP or licensors)

மியான்மாரில் தேவையில் இருப்போருக்கு பல்சமய பிறரன்பு

மியான்மாரில், குறிப்பாக, நகர்ப்புறங்களில், 34 இலட்சம் மக்கள் வரை பசிக்கொடுமையை எதிர்நோக்குவர் - WFP

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் இடம்பெற்றுவரும் இராணுவ ஆட்சியை எதிர்த்து, குடிமக்கள், கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து போராடிவரும்வேளை, இச்சூழலில், வறுமையில் வாடும் மக்களுக்கு, அந்நாட்டின் பல்சமயத்தினர் ஒன்றிணைந்து உதவி வருகின்றனர்.

அந்நாட்டில், குறிப்பாக, நகர்ப்புறங்களில், 34 இலட்சம் மக்கள் வரை பசிக்கொடுமையை எதிர்நோக்குவர் என்று, WFP எனப்படும், ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு கணித்துள்ளவேளை, அந்நாட்டின் கத்தோலிக்கர், புத்த மதத்தினர், முஸ்லிம்கள், மற்றும், இந்துக்கள் இணைந்து, உதவி தேவைப்படும் மக்களுக்கு பணியாற்றி வருகின்றனர்        

புனித யோசேப்பு சபை (SJA)  அருள் சகோதரிகள் தலைமையில் இயங்கும் பல்சமயக் குழு ஒன்று, மியான்மாரின் இரண்டாவது பெரிய நகரமாகிய Mandalayல், முன்னூறு குடும்பங்களுக்கு உதவி வருகின்றது. 

மியான்மார் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்காக கண்ணீர் சிந்தும் மக்களுக்கும், இக்குழுவினர் ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.

மியான்மார் இராணுவத்தின்முன், தன் மக்களுக்காக மண்டியிட்டு மன்றாடிய அருள்சகோதரி Ann Rosa Nu Tawng அவர்களின் செயல், புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரை மட்டுமல்ல, உலகினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்று, செய்திகள் கூறுகின்றன. (UCAN)

ASEAN தலைவர்கள்

இதற்கிடையே, ஏப்ரல் 24, இச்சனிக்கிழமையன்று, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்திய, ASEAN எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்கள், மியான்மாரின் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வழிகள் பற்றி ஆராய்ந்தனர்.

இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, புரூனெய் ஆகிய நாடுகளின் தலைவர்களும், லாவோஸ், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். (AsiaNews) 

24 April 2021, 15:00