தேடுதல்

Vatican News
சட்டீஸ்கர் மாநிலத்தில் கொல்லப்பட்ட படைவீரர்கள் சட்டீஸ்கர் மாநிலத்தில் கொல்லப்பட்ட படைவீரர்கள்  

சட்டீஸ்கர் மாநிலத்தில் வன்முறை நிறுத்தப்பட அழைப்பு

அனைத்துவிதமான வன்முறைகளும், எக்காரணத்தைக்கொண்டும் நியாயப்படுத்தப்பட முடியாதவை – ராய்பூர் பேராயர் தாக்கூர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின், சட்டீஸ்கர் மாநிலத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள், 22 பாதுகாப்புப் படையினரைக் கொலைசெய்துள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் இடம்பெறும் அனைத்துவிதமான வன்முறைகளும் முடிவுக்குக் கொணரப்படுமாறு, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கிந்திய மாநிலமான சட்டீஸ்கரில், கடந்த வார இறுதியில், இப்புரட்சியாளர்கள் நடத்திய நான்கு மணிநேர துப்பாக்கிச் சூட்டில், கிறிஸ்தவர் ஒருவர் உட்பட, 22 படைவீரர்கள் கொல்லப்பட்டனர், மற்றும், குறைந்தது முப்பது படைவீரர்கள் காயமுற்றுள்ளனர்.

ஏப்ரல் 03, இச்சனிக்கிழமையன்று நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல்கள், கடந்த நான்கு ஆண்டுகளில், அம்மாநிலத்தில் இடம்பெற்றுள்ள உயிர்களைப் பலிவாங்கியுள்ள கடுமையான தாக்குதல்கள் என்று கூறியுள்ள, Raipur பேராயர் விக்டர் ஹென்றி தாக்கூர் அவர்கள், அவற்றுக்கு எதிரான தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு, உரையாடலில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ள பேராயர் தாக்கூர் அவர்கள், நம் பாதுகாப்பு படைவீரர்கள் தங்கள் கடமையை ஆற்றிக்கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கின்றது என்றும், அனைத்துவிதமான வன்முறைகளும், எக்காரணத்தைக்கொண்டும் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்றும் கூறியுள்ளார்.

சட்டீஸ்கரின், Bastar பகுதியில், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் ஆயுதம் ஏந்திய தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இத்தாக்குதல்களில், 2010ம் ஆண்டிலிருந்து, அப்பாவி குடிமக்கள் தவிர, குறைந்தது 200 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் இந்த புரட்சியாளர்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால், ஏழை கிராமத்தினரும், பழங்குடி இன மக்களும் பயன்பெறவேண்டும் என்பதற்காக, இவ்வாறு போராடி வருவதாகக் கூறி வருகின்றனர். (UCAN)

06 April 2021, 15:18