தேடுதல்

சென்னைக்கருகே, ஆக்ஸிஜன் கொள்கலன்களை நிரப்பும் பணியாளர்கள் சென்னைக்கருகே, ஆக்ஸிஜன் கொள்கலன்களை நிரப்பும் பணியாளர்கள் 

மே 7 - பெருந்தொற்று நோய்க்கெதிரான இந்திய இறைவேண்டல் நாள்

சரியான திட்டமிடல் இன்மையால், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமை, ஆக்சிஜன், மற்றும் தடுப்பூசி குறைபாடு போன்றவைகள் உருவாகியுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

கோவிட் பெருந்தொற்று நோய்க் கட்டுப்பாடுகளை இந்திய மக்கள்  தீவிரக் கவனத்துடன் பின்பற்றவேண்டும் என அழைப்புவிடுத்துள்ள தலத்திருஅவை அதிகாரிகள், இந்நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற இறைவேண்டல் செய்யும் நாளாக மே மாதம் 7ம் தேதியை அறிவித்துள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து, இந்திய தேசத்தைக் காப்பாற்ற, தெய்வீக தலையீட்டை வேண்டும்  இறைவேண்டல் நாளாக, இந்திய கத்தோலிக்க திருஅவை, மே மாதம் 7ம் தேதியை, இறைவேண்டல், மற்றும் உண்ணா நோன்பின் நாளாக சிறப்பிக்கும் என அறிவித்துள்ள மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், ஒவ்வொரு நாளும், மூன்று இலட்சம் பேர், இந்நோயினால், புதிதாகப் பாதிக்கப்பட்டுவருவதாகவும், இவ்வெண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், சரியான திட்டமிடல் இல்லாமையால், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமை, தொற்றுநோய் தடுப்பு மருந்துக்கள் இன்மை, ஆக்சிஜன், மற்றும் தடுப்பூசி குறைபாடு போன்றவைகள் உருவாகி, நோய் பரவல் மேலும் தீவிரமடையும் ஆபத்து இருப்பதாக, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

கோவிட் தொற்றுநோய்க்கெதிராக அரசு விதித்துள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கவனமுடன் பின்பற்றி, முகக்கவசம் அணிவதிலும், சமுதாய இடைவெளியைக் காப்பதிலும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதிலும், அனைத்து மக்களும் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்துள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவேண்டுமென்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார்.

இதற்கிடையே, இன்றைய கோவிட் நெருக்கடி நிலைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட, இந்திய ஆயர் பேரவையின் நலபராமரிப்பு அவையின் தலைவர், பேராயர்  பிரகாஷ் மல்லவரப்பு (Prakash Mallavarapu) அவர்கள், மருத்துவ வசதிகள் பல முடங்கிப்போயுள்ள நிலையில், மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ளும் வழிமுறைகளை கைக்கொள்ளவேண்டுமென அழைப்பு விடுத்தார்.

இன்றைய நெருக்கடி நிலைகளுக்கு எவரையும் குறைசொல்வதை தவிர்த்து, நம் பொது எதிரியாகிய இந்நோயை எதிர்த்துப் போரிடுவதில் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார், பேராயர் மல்லவரப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2021, 14:50