தேடுதல்

இந்தியாவின் அகமதாபாத் நகரில் மருத்துவமனையில் அனுமதி பெற காத்திருக்கும் கோவிட் நோயாளிகள் இந்தியாவின் அகமதாபாத் நகரில் மருத்துவமனையில் அனுமதி பெற காத்திருக்கும் கோவிட் நோயாளிகள் 

கத்தோலிக்கப் பள்ளிகள், தற்காலிக மருத்துவ மனைகளாக...

மருத்துவ நெருக்கடியைக் குறைப்பதற்கு, தங்களால் இயன்ற உதவியை செய்யும் நோக்கத்தில், பள்ளிகளை, மருத்துவ மனைகளாக மாற்றிவருகிறோம் - பெங்களூரு பேராயர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை, இந்தியாவில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ள வேளையில், பெங்களூரு உயர் மறைமாவட்டம், கத்தோலிக்கப் பள்ளிகளை, தற்காலிக மருத்துவ மனைகளாகப் பயன்படுத்த முன்வந்துள்ளது.

இந்த 2வது அலையின் வீரியத்தால், மருத்துவத் துறையினர் சந்தித்துவரும் நெருக்கடியை உணர்கிறோம் என்று கூறிய பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள், இந்த நெருக்கடியைக் குறைப்பதற்கு, தங்களால் இயன்ற உதவியை செய்யும் நோக்கத்தில், பள்ளிகளை, மருத்துவ மனைகளாக மாற்றிவருகிறோம் என்று கூறினார்.

கோவிட் கிருமிக்கு எதிராக, மிக அவசரமான, முக்கியமான சிகிச்சைகளை மருத்துவ மனைகளில் முதலில் பெற்று, ஓரளவு சக்தி அடைந்துள்ள நோயாளிகள், இரண்டாம் நிலை சிகிச்சைகளைப் பெறுவதற்கு, பள்ளிகளில் உருவாக்கப்படும் ஏற்பாடுகள் உதவியாக இருக்கும் என்று, பேராயர் மச்சாடோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இந்த 2வது அலையுடன் போராடிவரும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை வெளியிட்ட பேராயர் மச்சாடோ அவர்கள், இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெங்களூரு உயர் மறைமாவட்டம் செய்யும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளதாக, பீதேஸ் செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்தப் பெருந்தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தாமல் போனால், இன்னும் மிக நெருக்கடியான சூழல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று தான் அஞ்சுவதாக, புனித யோவான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர், அருள்பணி பால் பரத்தாழம் அவர்கள் கூறியுள்ளார்.

'கிறிஸ்தவ மறைப்பணி மருத்துவமனைகள்' என்ற ஒரு கூட்டு முயற்சியின் வழியே, இந்தப் பெருந்தொற்று நேரத்தில், மிக வறுமையுற்றோருக்கு உதவிகள் செய்வதில், புனித மார்த்தா மருத்துவமனை ஈடுபட்டிருப்பதாக, இம்மருத்துவமனையின் தலைவர், அருள்சகோதரி கிரேசி தாமஸ் அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2021, 14:24