தேடுதல்

திருத்தந்தை புனித முதலாம் பவுல் திருத்தந்தை புனித முதலாம் பவுல்  

திருத்தந்தையர் வரலாறு - அரசியல் சதுரங்கம்

திருத்தந்தை புனித முதலாம் பவுல் அவர்கள், தன் குடும்பச் சொத்தான வீட்டையே துறவுமடமாக்கினார். கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டங்களிலிருந்து புனிதர்களின் எலும்புகளை எடுத்துவந்து உரோம் நகரின் கோவில்களில் பாதுகாத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

லொம்பார்தியர், Byzantine பேரரசர், பிராங்ஸ்  மன்னர் பெப்பின், உரோமை மன்னர் திருத்தந்தை முதலாம் பவுல் என நான்கு சக்திகள் தனித்தனியாக இயங்கிவந்த காலம்வரை கடந்த வாரம் கண்டோம். இந்த வேளையில்தான், லொம்பார்திய மன்னர் தெசிதேரியுஸ், பெனவெந்தோ நகரில் கிரேக்கத் தூதர் Georgios அவர்களைச் சந்தித்து Byzantine மன்னருடன் மத்திய இத்தாலி குறித்த ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டார். இது முடிந்து உரோம் வழியாக வந்த தெசிதேரியுஸைச் சந்தித்த திருத்தந்தை முதலாம் பவுல் அவர்கள், திருப்பீடத்திடமிருந்து பறித்த நிலங்களை திருப்பித் தரவேண்டும் என விண்ணப்பித்தார். Imola, Osimo, Ancona, Bologna ஆகிய நகரங்கள், உரோமைய ஆட்சியின் கீழ் வரவேண்டியவை. ஆனால், அவைகளைத் தரமறுத்த லொம்பார்திய மன்னர் தெசிதேரியுஸ், வேண்டுமானால் Imola நகரை மட்டும் தருவதாகவும், அதையும், ஒரு நிபந்தனையுடன் தருவதாகவும் கூறினார். அதாவது, பிராங்க்ஸ் மன்னர் பெப்பின், கடந்த போரில் எடுத்துச் சென்ற லொம்பார்திய போர்க் கைதிகளின் விடுதலையை பெற்றுத் தரவேண்டும் என்பது அந்த நிபந்தனை. அப்படி பெற்றுத் தரவில்லையென்றால், திருத்தந்தைக்கு எதிராக போர்தொடுக்கப் போவதாகவும்  அறிவித்தார் தெசிதேரியுஸ். திருத்தந்தையும் தன் தூதர்களை பெப்பின் மன்னரிடம் அனுப்பினார். மன்னர் பெப்பினின் சகோதரர் Remidius, அப்போது, Rouend ஆயராக இருந்தார். அந்த ஆயரின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி தெசிதேரியுஸை திருத்தந்தைக்கு சாதகமாக மாற்றினார், மன்னர் பெப்பின். அது மட்டுமல்ல, திருத்தந்தையால் அனுப்பப்பட்ட இரு தூதர்களை அரண்மனையில் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். 767ல் பாரிசுக்கு அருகே Gentilly எனுமிடத்தில் பிராங்ஸ் பகுதி ஆயர் பேரவையையும் கூட்ட உதவினார். அதேவேளை திருத்தந்தை பவுல் அவர்கள், தன் குடும்பச் சொத்தான வீட்டையே துறவுமடமாக்கினார். லொம்பார்தியர்களால் சேதமாக்கப்பட்ட கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டங்களிலிருந்து புனிதர்களின் எலும்புகளை எடுத்துவந்து உரோம் நகரின் கோவில்களில் பாதுகாத்தார். 767ம் ஆண்டு ஜுன்மாதம் வெயில் மிகவும் அதிகமாக இருந்ததால், அப்போதைய உரோம் நகரின் எல்லைச்சுவருக்கு வெளியே இருந்த புனித பவுல் பெருங்கோவிலுக்கு அருகே இருந்த கோடை இல்லத்திற்கு ஓய்வுக்கு சென்றிருந்த திருத்தந்தை, அங்கே, ஜுன்மாதம் 28ம் தேதி இறையடி சேர்ந்தார். அக்கோவிலில்தான் அவர் அடக்கமும் செய்யப்பட்டார். ஆனால், மூன்று மாதங்களுக்கப்பின், அவரது உடல், புனித பேதுரு பெருங்கோவிலுக்கு மாற்றப்பட்டது.

திருத்தந்தை முதலாம் பவுலுக்குப்பின் திருத்தந்தையானவர் திருத்தந்தை 3ம் ஸ்டீபன். இவர் 4ம் ஸ்டீபன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஏனெனில், திருத்தந்தை ஸ்டீபன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்பதற்கு முன்னரே உயிரிழந்ததால் வந்த குழப்பம் என்பது, நாம் முன்னரே அறிந்த விவரம். திருத்தந்தை முதலாம் பவுல்  இறப்பதற்கு முன்னரே, அவருக்குப்பின் யார் வருவது என்பது குறித்த போட்டி துவங்கிவிட்டது. Nepi நகரின் Toto என்பவர் படையோடு உரோமுக்குள் புகுந்து, தன் சகோதரர் Constantine திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த Constantine பொது நிலையினர், அதாவது, அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்படாதவர். அப்போது, திருஅவையில் நல் ஆதரவுடன் இருந்த கிறிஸ்டோபர் என்பவர் தன்மகன் செர்ஜியுசுடன் இணைந்து, Totoவின் படைகளுக்குத்தெரியாமல், உரோம்நகரைவிட்டு வெளியே தப்பிச்சென்று, லொம்பார்தியர்களுடன் இணைந்துகொண்டு, Constantineஐ விரட்டியடித்தார். அதுமட்டுமல்ல, லொம்பார்தியர்களின் ஆதரவுபெற்ற சில குழுக்களால் இரகசியமாக திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிலிப்பு என்ற துறவியையும் விரட்டியடித்தார். கிறிஸ்டோபர் என்ற இந்த பொதுநிலை அதிகாரியின் உதவியுடனேயே நேர்மையான தேர்தல் நடத்தப்பட்டு சிசிலியைச் சேர்ந்த மூன்றாம் ஸ்டீபன் திருத்தந்தையானார். புனித பெனடிக்ட் துறவு சபையைச் சேர்நத இவர், திருத்தந்தை சக்கரியாஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டவர். இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, இவரை எதிர்த்து திருத்தந்தையாக முயன்ற கான்ஸ்டன்டைனும், துறவி பிலிப்பும், மிகவும் கொடுமையாக அரசு அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டனர். திருத்தந்தை மூன்றாம் ஸ்டீபன் இதில் தலையிட முடியவில்லை.

திருத்தந்தையின் தேர்வில் நடந்த இத்தகைய குழப்பங்களால், முதன் முதலாக இலாத்தரன் அவையில் ஒரு புதுவிதி கொண்டுவரப்பட்டது. அதாவது, பொதுநிலையினர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட முடியாது எனவும், தேர்தலில் இவர்கள் பங்கு பெறக்கூடாது எனவும் சட்டம் வந்தது. அத்துடன், கர்தினால்கள் மட்டுமே திருத்தந்தையாக தேர்வுச் செய்யப்படமுடியும் என, 769ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டம் கொண்டுவரப்பட்டது. ரவென்னா மறைமாவட்ட நிர்வாகத்தை பொதுநிலையினர் ஒருவர் கைப்பற்ற முயன்றதும் திருத்தந்தையால் முறியடிக்கப்பட்டது. இவ்வேளையில் திருத்தந்தை 3ம் ஸ்டீபன், பிராங்ஸ் மன்னர்களான Charlemagne, மற்றும் Carloman ஆகிய இருவரின் உதவியுடன் லொம்பார்தியர்களிடமிருந்து உரோமை நிர்வாக நிலப்பகுதிகளை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

ஆனால் லொம்பார்திய மன்னர் தெசிதேரியுஸோ, தந்திரமாக தன் மகளை Charlemagneக்கு திருமணம் செய்துகொடுத்து, திருத்தந்தையின் முக்கிய ஆலோசகர்களான கிறிஸ்டோபரையும், அவர் மகன் செர்ஜியுஸையும் பதவியிலிருந்து விலக்க கட்டாயப்படுத்தி, மன்னர் வழியாக வெற்றியும் கண்டார். இவ்விருவரும்தான் திருத்தந்தையின் தேர்தலில் பக்கபலமாக உறுதியாக நின்றவர்கள். தெசிதேரியுஸின் தந்திர விளையாட்டுக்கு பலியான நம் திருத்தந்தை மூன்றாம் ஸ்டீபன், மிகுந்த மனவருத்தம் கொண்டவராய், 772ம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார்.

அன்பு நெஞ்சங்களே! அடுத்தவாரம், 772ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 23 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்ற திருத்தந்தை முதலாம் ஏட்ரியன் அவர்களிடமிருந்து, நம் வரலாற்றைத் தொடர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2021, 16:01