ஹெய்ட்டி நாட்டில், இம்மாதம் 11ம் தேதி கடத்தப்பட்டிருந்த ஐந்து கத்தோலிக்க அருள்பணியாளர்கள், இரு அருள்சகோதரிகள் மற்றும், மூன்று பொதுநிலை விசுவாசிகளுள், மூன்று அருள்பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 11ம் தேதி, இறை இரக்க ஞாயிறன்று, Croix Les Bouquets என்ற நகரில், “400 Mawozo” என்ற ஆயுதம் ஏந்திய குற்றக்கும்பல், பத்து இலட்சம் டாலர்கள் பிணையல் தொகை கேட்டு, இவர்களைக் கடத்தியது என்று, ஹெய்ட்டி நாட்டு ஊடகத்துறை கூறியிருந்தது.
கடத்தப்பட்ட இவர்களில் நோயாளியாய் இருந்த ஒரு பெண்ணும் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்னும், கடத்தல்காரர்களின் பிணையலில் உள்ள ஆறு பேரில், ஓர் அருள்பணியாளரும், ஓர் அருள்சகோதரியும், பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் ஆவார்கள்.
சிரியாவில் காணாமல்போயுள்ள ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள்
மேலும், 2013ம் ஆண்டில் சிரியா நாட்டில் காணாமல்போயுள்ள அலெப்போ நகரின் இரு ஆயர்கள் பற்றிய விவரம் இதுவரை தெரியவில்லை என்றும், இவர்கள் ஜிகாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் அறிவித்துள்ளன.
கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகள், உயிர்ப்புப் பெருவிழாவை, வருகிற மே மாதம் 2ம் தேதி கொண்டாடவுள்ளவேளை, அலெப்போவுக்கும், துருக்கிக்கும் இடையேயுள்ள எல்லைப் பகுதியில், எட்டு ஆண்டுகளுக்குமுன் கடத்தப்பட்ட ஆயர்களுக்காக இறைவனை மன்றாடுமாறு, அத்திருஅவைகள், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளன. (AsiaNews)
சிரியாவில், 2013ம் ஆண்டில் காணாமல்போயுள்ள, ஆயர்கள் Youhanna Ibrahim, Paul Yazigi ஆகிய இருவரும், இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்றால் கொல்லப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.