தேடுதல்

Vatican News
பிரான்ஸ் தலைநகரில் புனித வெள்ளி சிலுவைப்பாதை பிரான்ஸ் தலைநகரில் புனித வெள்ளி சிலுவைப்பாதை 

புனித வெள்ளி : தோள் கொடுத்த தோழர்

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, என்னிடம் வாருங்கள், இளைப்பாறுதல் தருவேன், என்ற இறைவனின் சுமையை சுமந்து ஆறுதல் தந்தவர்,
 • கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
 • அன்பு நெஞ்சங்களே,
 • என்னைப் பின்செல்ல விரும்புகிறவர்,
 • சிலுவையை சுமந்துகொண்டு, பின் வரட்டும் என்ற உருவக மொழி
 • சிலுவைப் பயணத்தில் உண்மையாகிறது, உருவம் பெறுகிறது.
 • ஆம், எந்த சீடரும் சுமக்கும் முன் அந்த பாக்கியம் ஒருவருக்கு கிடைக்கிறது.
 • கட்டாயத்தின் பேரில் என்றாலும், அதை தட்டாமல் செய்கிறார் ஒரு விவசாயி.
 • சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, என்னிடம் வாருங்கள், இளைப்பாறுதல் தருவேன், என்ற இறைவனின் சுமையை சுமந்து ஆறுதல் தருகிறார்,
 • இரு மகன்களைப் பெற்ற இந்த தந்தை.
 • மீட்பரை தன்னில் சுமந்தார் அன்னை மரியா.
 • மீட்பு தந்த சிலுவையை தான் சுமந்து உதவினார் இந்த ஏழை.
 • இறைவனையே சுமக்க மனித குலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் மரியா.
 • சீர்படுத்தும் சிலுவையை சுமக்க மனித குலப் பிரதிநிதியானார்
 • சிரேனே ஊராராகிய சிமியோன்.
 • நீங்களல்ல, நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் என்ற இறைமகன்,
 • தனக்கென, தன் சிலுவையைச் சுமக்க ஒருவரை தேர்ந்துகொண்டு வாய்ப்பளிக்கிறார்.
 • இயேசுவின் சிலுவைப் பயணத்தில் சிலுவையைத் தூக்கி பங்குபெறும் வாய்ப்பைப் பெற்ற, அந்த மாறுபட்ட, வேறுபட்ட மனிதரைக் குறித்து,
 • வத்திக்கான் வானொலியில், புனித வெள்ளியன்று, திரு. ராம்சன் அமிர்தமணி அவர்கள் வழங்கிய உரையின் எழுத்து வடிவம் :

 

ன்று ஓய்வு நாளுக்கு முந்தின நாள். நண்பகல் முதல் பிற்பகல் மூன்று மணி வரையில் இருள் சூழ்ந்திருந்தது. காலையில் நகருக்கு வெளியே தோட்டத்திற்கு சென்ற தங்கள் தகப்பனார் மாலை வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரைத் தேடிக் கொண்டு வந்த ரூபஸும், அலெக்ஸாண்டரும், கொல்கொதா மலையடியில் மயக்கமாக கிடந்த அவரை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு, வீட்டிற்கு கூட்டி வந்தார்கள். வீட்டிற்கு வந்த பிறகும் வெகுநேரம் கண்ணயர்ந்து படுத்திருந்த சீமோன் விழித்தபோது, வீடெங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. படுக்கையில் சீமோன் எழுந்து அமர்ந்திருப்பதைக் கண்ட ரூபஸ், ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தான். தண்ணீரை வாங்கிக் குடித்த சீமோன், தன் இரண்டு தோள்பட்டைகளையும் சுட்டிக்காட்டி, சைகையில் ஏதோ சொன்னார். அவருடைய கழுத்தருகே குனிந்து, ஆடையை விலக்கிப் பார்த்த ரூபஸ் அதிர்ந்து போனான். சீமோனின் தோள்களிரண்டும் சிவந்து காயமடைந்திருந்தன. சற்று வீக்கமும் தெரிந்தது. தகப்பனின் தோளின் மேல் அலெக்ஸாண்டர் கையை வைத்து பார்த்தபோது, சீமோன் வலி தாங்க முடியாமல் அலறினார். “போதகரின் சிலுவையை உங்கள் தகப்பன் தான் சுமந்து சென்றார்” என்று வழியில் ஓர் ஆள் கூறியதன் பொருள் இருவருக்கும் விளங்கிற்று. உள்ளே சென்ற ரூபஸ் மூலிகைப் பொடிகளை சூடான ஒலிவ எண்ணெயில் குழைத்து எடுத்து வந்து, சீமோனின் இரண்டு தோள்களிலும் தடவினான். அலெக்ஸாண்டர், “அப்பா, என்ன நடந்தது? நீங்கள் ஏன் சிலுவையை சுமந்து சென்றீர்கள்?”  என்று கேட்டான். தண்ணீரைக் குடித்துவிட்டு குவளையை கீழே வைத்த சீமோன் சொல்லத் தொடங்கினார்:

“மகனே, காலையில் நேரே நமது தோட்டத்திற்கு தான் சென்றேன்.. நேரம் ஆக ஆக, வெயில் கடுமையாக ஏறிக் கொண்டிருந்ததால், வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். நான் கோட்டை அருகே வரும்போதே வழியெங்கும் ஜனக்கூட்டம்.. ஆரவாரமும், கேலியும், கோபமும் கலந்த ஒருவகையான பரபரப்பு எங்கும் காணப்பட்டது. கூட்டத்தில் சிலர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது, ‘நாசரேத்தூர் போதகர் இயேசுவை இன்று பகலில் சிலுவையில் அறைந்துக் கொல்லப் போகிறார்கள்’ என்ற தகவல் தெரிந்தது. ஐந்து நாள்களுக்கு முன்னர் மரக்கிளைகளை அசைத்து, தங்கள் மேலாடைகளை வழியெங்கும் விரித்து, ‘அரசரே வாழ்க! தாவீதின் மகனே வருக!’ என்று மக்கள் வரவேற்ற இந்த போதகருக்கு இன்று மரண தண்டனையா? என்ன ஆயிற்று?” என்று  நான் வியப்பும், வேதனையும் அடைந்தேன். கோட்டை வாயிலைத் தாண்டி நான் உள்ளே வந்தபோது, வீதியெங்கும் இடித்து நெருக்கிக் கொண்டு மக்கள் திரண்டிருந்தனர்… தூரத்தில் கழுவிலேற்றப்படவிருந்த குற்றவாளிகளை இழுத்துக் கொண்டு கோஷமிட்டபடி ஒரு கூட்டம் ஊர்வலமாக கோட்டை வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்தது”. பேசுவதை நிறுத்திய சீமோன் தொடர்ந்தார்:

“குதிரை வீரர்கள் அணிவகுத்து வர, சில பரிசேயர்களும், தலைமை சங்கத்தாரும் முன்னே நடந்து வர, வாளும் ஈட்டியும் ஏந்திய படை வீரர்களுக்கு மத்தியில் மரணதண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மூவரும் சிலுவைகளைச் சுமந்து கொண்டு வந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் பெருங்கூட்டமாக கத்திக் கூச்சலிட்டு பரிகாசம் செய்துகொண்டும், சிலர் அழுது புலம்பிக் கொண்டும் வந்தார்கள். நான் நின்றிருந்த வீதியின் திருப்பத்தில் ஒரு வீட்டின் சுவரின் மேலே சாய்ந்து கொண்டு நான் பார்த்தபோது, சிலுவையின் பாரம் தாங்காமல் போதகர் கீழே விழுந்திருந்தார். தரையில் கிடந்த அவரை ஒரு படைவீரன் சவுக்கால் அடிக்க, மற்ற இருவர் அவரைத் தூக்கி நிறுத்தி, சிலுவையை அவர் தோளில் வைத்து சுமக்கச் செய்தார்கள்”.

“தரையிலிருந்து எழுந்து மீண்டும் சிலுவையைத் தூக்கிக் கொண்ட போதகர் சிறிது தூரம் நடந்து வந்தார். மேலும் நடக்க முடியாமல் சற்று நின்றபோது, கூட்டத்திலிருந்த ஒரு பெண் அவர் அருகே வந்து, வாஞ்சையோடு போதகரைக் கட்டித் தழுவிக் கொண்டு, காயப்பட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த அவருடைய உடலிலே முத்தம் கொடுத்தார். எனக்கு அருகிலே நின்றிருந்த ஓர் ஆள், “அந்த பெண்மணிதான் போதகரின் தாயார்” என்று அழுதுகொண்டே சொன்னான். இத்தனை கொடுமையைத் தாங்கிச் செல்லும் தன் மகனை நேரிலே பார்க்கின்ற அந்தத் தாயின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்?.. என் மனதில் வேதனை மிகுந்தது..  வாய்சொற்கள் ஏதுமின்றி, பார்வையாலேயே அவர்கள் பேசிக்கொண்டிருந்த கணத்தில், சட்டென ஒரு படைவீரன் அந்தப் பெண்ணைப் பிடித்து ஓரமாகத் தள்ளிவிட்டபோது மற்றொரு பெண் வந்து போதகரின் தாயாரைத் தாங்கிக் கொண்டாள். ஓரக்கண்ணால் தன் தாயாரை கனிவுடன் பார்த்துவிட்டு, போதகர் மீண்டும் நடக்க ஆரம்பித்தார். நடக்க முடியாமல் அவர் கால்கள் தள்ளாடின. அந்த ஊர்வலம் நான் நின்றிருந்த இடத்திற்கு மிக அருகிலே வந்துவிட்டது. போதகரை என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. தலையில் முள்முடி… உடலெங்கும் இரத்தம் வடியும் காயங்கள்.. எந்நேரத்திலும் அவர் கீழே விழக்கூடும் எனத் தெரிந்தது”.

அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்”- இறைவாக்கினர் எசாயாவின்  இந்த வார்த்தைகள் அப்போது என் நினைவுக்கு வந்தன... தள்ளாடிக் கொண்டு மெதுவாக வந்த அவரை வேகமாக நடக்கச் சொல்லி ஒரு படைவீரன் கசையால் அடிக்க, வலுவின்றி நடந்த போதகர், எனக்கு அருகில் சுவரிலே சரிந்து, அதன் மேலே சாய்ந்துவிட்டார். சுற்றிலும் இருந்த நாங்கள் சற்று விலகி நின்றோம். போதகரை எழுப்பிப் பார்த்த படைவீரர்கள் இருவர், குதிரையிலிருந்த நூற்றுவர் தலைவனிடம் இலத்தீனில் ஏதோ பேசினார்கள்.

பின்னர், சுற்றும் முற்றும் பார்த்த வீரர்களில் ஒருவன் சட்டென என் கைகளைப் பிடித்து இழுத்து, “இவனுடைய சிலுவையை கொஞ்ச தூரம் தூக்கிக் கொண்டு வா” என்று சொன்னான்.  நான் பயந்து போனேன். கைகளை அவன் பிடியிலிருந்து உதறிவிட்டு, அங்கிருந்து ஓடிவிடவும் முயற்சி செய்தேன். ஆனால், அந்த வீரர்கள் என்னை விடவில்லை, பலவந்தமாக என்னைப் பிடித்து, போதகரின் சிலுவையை என் தோள்களில் வைத்து சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தினார்கள். போதகரையும் எழுப்பி நடக்கச் செய்தார்கள். அவர் மிகவும் சிரமத்தோடே எழுந்து மெதுவாக அடியெடுத்து வைக்க, நானும் அவருடைய சிலுவையை சுமந்து கொண்டு, அவருக்கு பின்னால் நடக்கத் தொடங்கினேன். முன்னொரு தடவை தன் சீடர்களிடம் இந்த போதகர், "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்று கூறினாராம். அவருக்குப் பின்னால் சிலுவையை சுமந்து கொண்டு நான் நடந்தபோது, இந்த சொற்கள் என் நினைவுக்கு வந்தன”.

“எங்களைத் தொடர்ந்து வந்த ஜனங்கள் இந்தக் கொடுமைகளையெல்லாம் ஏதோ கேளிக்கை நிகழ்ச்சியை காண்பது போல, போதகரைப் பார்த்து கேலியும், பரிகாசமும், ஏளனமும் செய்து, ஆர்ப்பரித்துக் கொண்டு வந்தார்கள். சிலுவை மரத்தின் பாரம் வலது தோளிலே அழுத்திட, போதகரை மிக அருகில் பார்த்துக் கொண்டு குறுகலான அந்த வீதியில் மெதுவாக கோட்டை வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அவர் மிகவும் மோசமாக தாக்கப்பட்டிருந்தார். கசையடிகளால் உடலெங்கும் காயப்பட்டு வழிந்த இரத்தம், அவர் அணிந்திருந்த வெண்ணிற மேலாடையை சிவப்பாக்கியிருந்தது.  இரத்தத்தில் தோய்ந்த ஆடை, காய்ந்து போய் காயங்களோடு ஒட்டியிருந்தது. வாய் திறந்து எதுவும் பேசாமல் நடந்த அவர், தள்ளாடி விழவிருந்த நேரங்களில் எனது இடது தோளைப் பற்றிக் கொண்டு சற்று நிதானித்துவிட்டு நடையை தொடர்ந்தார். “அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோல அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்”, என்னும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள்தான் என் மனதில் நின்றன. இவர் யார்? ‘இஸ்ராயேலுக்கு மீட்பளிக்க வருவார் என முன்னறிவிக்கப்பட்ட மெசியா இவர் தானோ?’ என்ற கேள்வி என் மனதிலே எழுந்தது.

சிறிது தொலைவு நடந்திருப்போம், கூட்டத்திலிருந்து எதிர்பாராவிதமாக போதகர் முன்னால் ஒரு பெண் வந்து நின்றாள். தன் கையில் வைத்திருந்த ஒரு வெள்ளைத் துணியினால் போதகருடைய முகத்தைத் துடைக்க அவள் முயன்றாள். போதகரும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் சற்று குனிந்தார். அவரது முகத்தைத் துடைத்துவிட்டு, அந்தப் பெண் குனிந்து போதகரின் பாதத்தை முத்தமிட்ட சமயத்தில், “இவள் எப்படி இங்கே வந்தாள்?” என்று உரத்தக் குரலில் கத்திய படைவீரன் ஒருவன் அவளை இழுத்து ஓரமாகத் தள்ளிவிட்டான். அந்த வீரர்கள் என்ன நினைத்தார்களோ, தெரியவில்லை.. ஒருவன் என்னை நிறுத்தி, சிலுவையை என்னிடமிருந்து வாங்கி, போதகரின் தோள் மேல் வைத்தான். ஆனால், என்னையும் போகவிடவில்லை. கொஞ்ச தூரம் சிலுவையோடு நடந்த போதகர், பாரம் தாங்காமல் கீழே விழுந்தார். மீண்டும் சிலுவை என் தோளுக்கு வந்தது. என்ன இது? கொஞ்ச தூரம் தானே தூக்கிக் கொண்டு வரச் சொன்னார்கள்? இன்னும் எவ்வளவு தொலைவு போவது?  இவ்வாறு நான் எண்ணிக்கொண்டு நிமிர்ந்தபோது, போதகரின் கனிவான பார்வை என் மேல் விழுந்தது.. ‘எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்’ என்னும் அவருடைய சொற்கள் என் காதிலே ஒலித்தன”…

“இப்போது கோட்டை வாயிலைக் கடந்திருந்த அந்த வினோத ஊர்வலம், கொல்கொதா குன்றிருக்கும் திசை நோக்கிச் சென்றது. எனது வலது தோள்பட்டை வலித்தது. மரத்தை இடது தோளுக்கு மாற்றிக் கொண்டு நடந்தேன். சுட்டெரிக்கும் வெயிலில் கனமான மரத்தைத் தூக்கிக் கொண்டு நடக்க கடினமாக இருந்தது. கொஞ்ச தூரத்தில் கொல்கொதா குன்று கண்ணுக்குத் தெரிந்தது. இன்னும் சிறிது தூரம் தான். பாதையின் இருமருங்கிலும் மக்கள் கூட்டம். ஓர் இடத்தில் யூதப் பெண்கள் பலர் ஒன்றாக கூடி, மார்பில் அடித்துக் கதறி அழுதவண்ணம் நின்றிருந்தார்கள். நடக்கவே இயலாத நிலையில் தள்ளாடி நடந்து வந்த போதகர், அந்த இடத்தில் என்னை பிடித்துக் கொண்டு நின்று, அந்தப் பெண்களை நிமிர்ந்து பார்த்தார். அந்த பெண்களின் அழுகை இன்னும் அதிகமாயிற்று. இழுத்து பெருமூச்சு விட்ட போதகர், அந்தப் பெண்களைப் பார்த்து, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.... பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!" என்றார். தாங்க முடியாத வேதனையிலும் பிறருக்கு ஆறுதல் கூற முயன்ற அந்த போதகர் எப்படிபட்டவர் என்ற கேள்வி மீண்டும் என்னுள்ளே தோன்றியது..

குதிரையிலிருந்த நூற்றுவர் தலைவன் அருகில் வந்து, படைவீரனிடம் ஏதோ சொல்ல, அந்த வீரன், “சிலுவையை அவனிடம் கொடு” என்று என்னிடம் சொன்னான்… ‘அவரால் அந்த மரத்தை சுமக்க முடியாதே’ என்று நான் தயங்கி நின்றேன். அதனால் கோபமடைந்த அந்த வீரன், என்னை வசைபாடி விட்டு, சிலுவையை பலவந்தமாக வாங்கி போதகரின் தோள் மேலே வைத்தான். அவரை தனியாக விட்டுவிட மனமின்றி, நானும் அந்த நெடிய மரத்தின் அடிபாகத்தை பிடித்துக் கொண்டே நடந்தேன். சிலுவையைத் தோளில் ஏற்றிக்கொண்டு நாலைந்து அடிகள் நடந்து சென்ற போதகர், வலுவிழந்து முகங்குப்புற தரையில் விழுந்தார். கனமான அந்த மரம் அவர் உடலின் மேல் சாய்ந்து கிடந்தது… ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட வீரர்கள், என்னை மறுபடியும் சிலுவையைத் தூக்கிக் கொண்டு வரச் சொன்னார்கள். வீழ்ந்து கிடந்த போதகரை இரண்டு வீரர்கள் காலால் மிதித்து, சவுக்கால் அடித்து, நிற்கச் சொல்லி தூக்கினார்கள். தன் உடலில் மீதமிருந்த கொஞ்ச பலத்தையும் திரட்டிக் கொண்டு, அந்த போதகர் எழுந்து நின்றார். அவர் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த வலுவும், உறுதியும் அவருடைய முகத்திலும், கண்களிலும் தெளிவாகத் தெரிந்தன. அவர் மெள்ள அடியெடுத்து நடக்கத் தொடங்கினார்.

கொல்கொதா குன்றின் அடிவாரத்திற்கு வந்த வேளையில், போதகர் சற்று நிதானித்து நின்றபோது, அருகிலிருந்த வீரர்கள் சிலுவையை என்னிடமிருந்து வாங்கி அவருடைய தோளிலே சுமத்தினார்கள். இரத்தத்தில் தோய்ந்து அருவருப்பாக இருந்த அவர் முகத்தில் இலேசான இளமுறுவல் தெரிந்தது. நன்றி கூறும் பாவனையில் என் கன்னத்தில் முத்தமிட்ட போதகர், இரு கைகளாலும் தோளிலிருந்த சிலுவையை அணைத்துக்கொண்டு, தள்ளாடிய வண்ணம் குன்றின் மேலே ஏறத் தொடங்கினார். மற்ற இரண்டு குற்றவாளிகளும் ஏற்கனவே குன்றின் உச்சிக்குச் போயிருந்தனர். இந்த நிலையிலும் வீரர்கள் என்னை போகவிடாமல், கூடவே வருமாறு கட்டாயப்படுத்தினார்கள். போதகரின் மேலே எனக்குள் உண்டாகியிருந்த பரிவின் காரணமாக நானும் உடன் சென்றேன். கனமான அந்த மரத்தை சுமந்து கொண்டு ஏறுவதற்கு சிரமப்பட்டாலும், அதனை என்னிடம் தர சம்மதிக்காமல் அவரே சுமந்துகொண்டு வர, எங்கள் கூட்டம் மலை உச்சியை அடைந்தது.

நண்பகல் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மரணதண்டனை பெற்ற மூவரையும் சிலுவையில் அறைவதற்கான காரியங்கள் வேகமாக நடந்தன.  அங்கு நடைபெற இருந்த கொலைபாதகச் செயலை நேரடியாக பார்க்க விரும்பாமல், நான் சற்று தொலைவில் மரநிழலில் ஒதுங்கி நின்றேன். படை வீரர்களின் அதிகாரத் தொனியும், கை-கால்களை இழுத்துப் பிடித்து ஆணி அறையும் சத்தமும், அதன் வேதனையால் குற்றவாளிகளின் கதறலும் அங்கே கேட்டன. ஆனால், போதகர் வாய்  திறந்து எதுவும் பேசவில்லை. அந்த பாடுகளின் வேதனையை மனமுவந்து அவர் ஏற்றுக் கொண்டதாகவே தோன்றியது. கொஞ்ச நேரத்தில் குற்றவாளிகள் அறையப்பட்ட மூன்று சிலுவைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தூக்கி நிறுத்தப்பட்டன. நடுவிலிருந்த சிலுவையில் போதகர் அறையப்பட்டிருந்தார். குன்றின் மேலேயும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். பரிசேயர்கள் தலைமை சங்கத்தாரின் ஏளன பழிப்புரையும், வேடிக்கை பார்க்க வந்திருந்த மக்களின் கேலிச் சிரிப்பொலியும், மாரடித்துக் கொண்டிருந்த சில பெண்களின் அழுகுரலும் ஒருசேர ஒலித்தன. போதகருடையை தாயாரும், வேறு சில பெண்களும் கூட அங்கே இருந்தனர்”.  

“சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியன் திடீரென தன் ஒளியைக் குறைத்துக் கொண்டதாகத் தெரிந்தது. நண்பகல் தொடங்கி மூன்று மணி நேரம் ஊரெங்கும் இருள் சூழ்ந்திருந்ததை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்நேரத்தில் சிலுவையில் தொங்கிய போதகரின் குரல் தீனமாக ஒலித்தது: “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை". அந்நேரத்தில் என் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளை சொல்லவே இயலாது, மகனே. “அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்” என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள்தான் மீண்டும் என் நினைவுக்கு வந்தன. இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா இவர்தான் என்பது என் மனதில் உறுதியாக தெரிந்தது.  இன்னும் இரண்டொரு தடவை போதகரின் குரல் ஒலித்தது. இறுதியாக, "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று உரத்த குரலில் கூறிய பின் அவர் இறந்து போனார்”.

இவ்வாறு சீமோன் கூறும்போது அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. சற்று நேரம் கழித்து, சீமோன் தொடர்ந்தார்: “மகனே, உண்மையிலேயே அவர் கடவுளிடமிருந்து வந்தவர் தான் என்பதற்கு இயற்கையே சாட்சி சொல்லிற்று. போதகரின் உயிர் பிரிந்தவுடன், அந்தக் குன்று குலுங்கத் தொடங்கியது. பலத்த சூறைக் காற்று அந்த மலைப்பகுதியை அதிரச் செய்தது. நிலம் நடுங்கியது, பாறைகள் பிளந்தன. உருண்டு வந்த சிறிய பாறை ஒன்று என் மேல் விழுந்ததால், நானும் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன். மகனே, ஒன்று மட்டும் நிச்சயம். இந்த நாசரேத்தூர் இளம்போதகர் இயேசு, ஒரு சாதாரண இறைவாக்கினரோ, அல்லது இறைதூதரோ அல்ல; இஸ்ராயேலின் மீட்புக்காக ஆபிரகாம் தேவன் வாக்களித்த மெசியா இவர்தான். இவர் நம்மை விட்டு போய்விடவில்லை, நமக்கு வாழ்வளிக்க மீண்டும் நம்மிடையே வருவார், இது நிச்சயம்

02 April 2021, 18:08